இந்தியாவில் 4 ஸ்ட்ரோக் புரட்சிக்கு வித்திட்ட ஹீரோ - ஹோண்டா!
Posted Date : 17:16 (05/08/2017)
Last Updated : 17:37 (05/08/2017)


1980-களில் உலகமயமாக்கலின் விளைவாக டிவிஎஸ் - சுஸூகி, எஸ்கார்ட்ஸ் - யமஹா, கவாஸாகி - பஜாஜ், ஹீரோ - ஹோண்டா, கைனடிக் - ஹோண்டா, LML - பியாஜியோ, என்ஃபீல்டு - ஜுன்தாபா என இந்திய டூ-வீலர் நிறுவனங்களுடன், வெளிநாட்டைச் சேர்ந்த டூ-வீலர் நிறுவனங்களுடன் கை கோர்த்தன. ஆனால் இதில் இப்போது எந்த கூட்டணியும் உயிர்ப்புடன் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்! இவ்வளவு ஏன்?
 
முன்னே சொன்ன நிறுவனங்களில் சில, கால ஓட்டத்தில் மறைந்தும் விட்டன; ஆனால் ஹீரோ - ஹோண்டா பார்ட்னர்ஷிப்பால், ''இந்தியாவின் நம்பர் 1 சைக்கிள் தயாரிப்பாளர்'' என்ற இடத்திலிருந்து, 'உலகின் நம்பர் 1 மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளர்' என்ற தனித்துவம் வாய்ந்த உச்சத்தை எட்டிப்பிடித்ததுடன், அந்தப் பெருமையை இன்றுவரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்!
 
 
ஹீரோ - ஹோண்டா கூட்டணி
 
 
 
 
இந்திய நிறுவனமான ஹீரோ, சைக்கிள்களைத் தவிர, 'ஹீரோ மெஜஸ்டிக்' என்ற பெயரில், சிறிய மொபட்டுகளையும் தயாரித்து விற்பனை செய்துகொண்டிருந்தது. இந்நிலையில்தான், ஹீரோவின் நிறுவனரான பிரிஜ்மோகன்லால் முன்ஜால், அப்போதைய உலகின் நம்பர் 1 மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஜப்பானின் ஹோண்டாவிடம், கூட்டணி அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தையை நடத்தினார்.
 
அதன் விளைவாக, இந்த இருநிறுவனங்களுக்கும் இடையே 1983-ல், ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்பு 1984-ம் ஆண்டில்,  'ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ்' நிறுவனம் உதயமானது. இந்நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை, ஹரியானாவில் உள்ள Dharuhera என்ற இடத்தில் துவங்கப்பட்டது.
 
 
CD 100
 
ஹீரோ ஹோண்டா இந்தியாவில் முதன்முதலாக, 1985-ல் அறிமுகப்படுத்திய பைக்தான் 'சிடி 100'. அதிக மைலேஜ் - சுற்றுச்சூழலுக்கு உகந்த குணங்களைக் கொண்டிருந்த 4 ஸ்ட்ரோக் இன்ஜினுடன், மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு ஏற்ற பைக்காக வடிவமைக்கப்பட்டது.
 
அப்போது விற்பனையில் இருந்த 100சிசி பைக்குகளான யமஹாவின் RX-100, சுஸூகியின் AX-100, கவாஸாகியின் KB-100 ஆகிய 2 ஸ்ட்ரோக் பைக்குகளுடன் ஒப்பிடும்போது, 4 ஸ்ட்ரோக் பைக்கான CD 100-ன் தோற்றமும், பெர்ஃபாமென்ஸும் படு சுமார் ரகம்தான். பராமரிப்புச் செலவுகளும் கொஞ்சம் அதிகம்தான்; ஆனால் போட்டியாளர்களைவிட அதிக மைலேஜ் கிடைத்ததே, இதன் துருப்புச் சீட்டாக இருந்தது.
 
 
 
 
இதனால் ஆரம்ப காலங்களில் விற்பனையில் பின்தங்கியே இருந்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல்  'CD டீலக்ஸ் - 1987; 'ஸ்லீக் (Sleek) - 1989; 'CD 100 SS - 1991 எனத் தனது CD 100 பைக்கை அடிப்படையாகக்கொண்டு, புதிய மாடல்களை வரிசையாக அறிமுகப்படுத்தியது ஹீரோ ஹோண்டா. இதற்கிடையே, 1985 முதல் 1987 வரையில், 1 லட்சம் பைக்குகளை மட்டுமே தயாரித்திருந்தது ஹீரோ ஹோண்டா.
 
ஆனால் நாளடைவில் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால், இந்த எண்ணிக்கை 1991-ல் 5 லட்சம் பைக்குகளாகவும், 1994-ல் 10 லட்சத்தையும் தொட்டது! ஹீரோவின் இப்போதைய மாதாந்திர விற்பனையுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை குறைவாகவே தெரிந்தாலும், ஹீரோ - ஹோண்டா கூட்டணிக்குத் தேவையான அடித்தளத்தை, CD 100 வலுவாக அமைத்துக் கொடுத்தது.
 
 
ஸ்ப்ளெண்டர் & ஸ்ப்ளெண்டர் பிளஸ் 
 
 
 
 
''மாற்றம் ஒன்றே மாறாதது'' என்ற கூற்றுக்கு ஏற்ப, CD 100 இன்ஜினைச் சற்று மேம்படுத்தி, அதனைப் புதிய டபுள் க்ரேடில் ஃப்ரேமில் பொருத்தி, 'ஸ்ப்ளெண்டர்' என்ற புதிய பைக், 1994-ல் அறிமுகமானது. இந்தியாவுக்கு வந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒப்பந்தம் அடுத்த 10 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தனது இரண்டாவது புதிய தயாரிப்பாக வெளிவந்த இந்த கம்யூட்டர் வகை பைக்தான், பின்னாளில் ஹீரோ ஹோண்டாவின் புகழ், மாபெரும் உயரத்துக்குச் செல்வதற்கான காரணமாக இருக்கும் என்பது, அப்போது அந்நிறுவனத்துக்கே தெரியாது. ஆரம்பத்தில் ஸ்ப்ளெண்டர் பைக், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகவில்லை என்பதுதான் உண்மை.
 
ஆனாலும் அதன் வாடிக்கையாளர்களே, இதன் சிறப்புகளை உணர்ந்து கொண்டதுடன் நில்லாமல், அதனை வாய்வழியாக மற்றவர்களுக்குத் தந்த நற்சான்றிதழின் விளைவாக, ஸ்ப்ளெண்டரின் விற்பனை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் எல்லா வயதினருக்கும் உகந்த பைக்காக இருந்ததே, இதன் அசுரத்தனமான வெற்றிக்கு அடிப்படையான காரணம்; அப்போது விற்பனையில் இருந்த மற்றொரு 4 ஸ்ட்ரோக் பைக்கான KB 4S சாம்பியன் 100 உடன் ஒப்பிடும்போது, இதன் செயல்திறன் குறைவாகவே இருந்தது; ஆனால் குறைவான எடை - எளிதான ஹேண்ட்லிங் - அருமையான மைலேஜ், ஸ்டைலான பிகினி ஃபேரிங் என அந்தக் காலகட்டத்தில், இது அனைத்து வயதினரையும் கவர்ந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை!
 
 
 
 
ஹீரோ ஹோண்டாவின் முந்தைய மாடல்களில், பெரும்பான்மையான உதிரி பாகங்கள், ஜப்பானில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. அதனால் அந்த பைக்கின் விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருந்தன. ஆனால் ஸ்ப்ளெண்டரில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களே பயன்படுத்தப்பட்டிருந்தன. இதனால் முன்பைவிட பைக்கின் பராமரிப்புச் செலவு பெருமளவு குறைந்தது; மேலும் இந்த பைக்கின் மிகப் பெரிய ப்ளஸ் என்னவென்றால், எப்படிப்பட்ட சூழ்நிலையில் பயன்படுத்தினாலும், எங்கும் பிரேக்டவுன் ஆகாமல் தொடர்ந்து இயங்கும் தன்மையைக் கொண்டிருந்ததுதான்!
 
 
அதற்கேற்ப ''Fill it, Shut it, Forgot it'' என்ற அடைமொழியுடன் விற்பனை செய்யப்பட்ட ஸ்ப்ளெண்டரை வாங்குவதற்காக, மக்கள் ஷோரூம்களுக்குத் திரளாகத் திரண்டனர் எனலாம். இதனால் ''சூர்யவம்சம்'' படத்தில் வரும் சரத்குமார், ஒரே பாட்டில் ஒபாமாவுக்கு இணையாக வந்தது போல, இந்த ஒரே பைக்கால், 'உலகின் நம்பர் ஒன் பைக்' என்ற புகழைப் பெற்றதுடன், 'உலகின் நம்பர் ஒன் பைக் தயாரிப்பாளர்' என்ற பெருமையும் ஹீரோ ஹோண்டாவுக்குக் கிடைத்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, 2003-ல் ஸ்ப்ளெண்டரின் ஃபேஸ்லிஃப்ட்டான ''ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்'' களம் கண்டது. மேலும் இந்த பைக்கை அடிப்படையாகக் கொண்டுதான் ப்ரோ, NXG - 2008, ஐ ஸ்மார்ட், கிளாஸிக் போன்ற பல மாடல்கள் அறிமுகமாயின.
 
 
பேஸன், பேஸன் பிளஸ் & ஜாய்
 
ஸ்ப்ளெண்டரை அடிப்படையாகக் கொண்டு, 2001-ல் 'பேஷன்' மற்றும் 'ஜாய்' என்ற பெயர்களில் இரண்டு பைக்குகளை, ஹீரோ ஹோண்டா களமிறக்கியது. ஒரே ஆண்டில் 10 லட்சம் பைக்குகளைத் தயாரித்து விற்பனை செய்ததன் வாயிலாக, இதே ஆண்டில் மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்தது ஹீரோ ஹோண்டா. ஸ்ப்ளெண்டரின் மாடர்ன் அவதாரமாக, எலெக்ட்ரிக் ஸ்டார்ட் உடன் பேஷன் பொசிஷன் செய்யப்பட்டது என்றால், CD 100 பைக்கை நினைவுபடுத்தும்படியான தோற்றத்தை ஜாய் பெற்றிருந்தது.
 
 
 
 
2004-ல் ஹீரோ ஹோண்டா விற்பனை செய்த பைக்குகளின் எண்ணிக்கை, 1 கோடியைத் தாண்டியது! பேஷனும் காலத்துக்கு ஏற்ற வகையில், 100சிசியில் இருந்து 110சிசியாக வளர்ந்தது குறிப்பிடத்தக்கது. 2003-ல் பேஷனின் அப்டேட்டட் வெர்ஷனாக 'பேஷன் ப்ளஸ்' வந்தது. 2009-ல் இந்த பைக்கில் அலாய் வீல் மற்றும் டிஸ்க் பிரேக் சேர்க்கப்பட்டன. 2012-ல் பேஸன் X ப்ரோ என்ற பெயரில், 110சிசி இன்ஜினுடன் புதிய மாடல் வெளிவந்தது. 
 
 
CD-டான் & CD-டீலக்ஸ்
 
2002-ம் ஆண்டு 'டான்' எனும் புதிய பைக் அறிமுகமானது. இதன் பின்பு 2003-ல், ஹீரோ ஹோண்டாவின் ஒட்டுமொத்த உற்பத்தி, 70 லட்சத்தைத் தொட்டது; தவிர இதே ஆண்டில், டான் பைக்கை மேம்படுத்தி, 'CD டான்' என புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முன்பு விற்பனை செய்யப்பட்ட ஜாய் பைக்கின் ஜெராக்ஸ்தான் மக்களே! விலை குறைவான பைக்காக இருந்ததுடன், நகர மற்றும் கிராமப் பகுதிகளில் பயன்படுத்துவதற்கு சிறந்த வாகனமாக இருந்ததால், விற்பனையில் ஏறுமுகம் பெற்றது CD டான்.
 
 
 
 
பின்னர் 2005-ம் ஆண்டில், 'சிடி டீலக்ஸ்' என்ற கம்யூட்டர் பைக் விற்பனைக்கு வந்தது. இதன் தோற்றத்தைக் கொஞ்சம் மெருகேற்றி, வழக்கத்தைவிடச் சற்று அதிகமான மைலேஜ் தரும் வகையில், 2015-ல் களமிறங்கிய மாடல்தான் HF-டீலக்ஸ் Eco. இப்படி தொடர்ச்சியாகப் புதுப்புது மாடல்கள் அணிவகுத்ததால், இந்தியாவில் விற்பனையாகும் 100 பைக்குகளில் 60 பைக்குகள் ஹீரோ ஹோண்டா பைக்குகள் என்ற நிலை அப்போது உருவானது! 
 
 
ஹீரோ - ஹோண்டா கூட்டணி முறிவு
 
2004 - 2009 ஆகிய ஆண்டுகளில், 5 ஆண்டுகளுக்காகக் கூட்டணி புதுப்பிக்கப்பட்டது. 2001-ல் ஹீரோவின் உதவியின்றி, இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் தொடங்கியது ஹோண்டா. இதற்கு ஹீரோ தரப்பில் விளக்கம் கேட்கப்பட்ட போது, ''ஸ்கூட்டர்களை மட்டுமே தயாரிக்கப் போகிறோம்'' எனச் சொன்னது ஹோண்டா. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, அந்த ஆண்டில் ஆண்களுக்கான கியர்லெஸ் வாகனமாக வெளிவந்த மாடல்தான் ஆக்டிவா ஸ்கூட்டர்! இதனை அடிப்படையாகக் கொண்டு, 2005-ல் ஹீரோ தயாரித்த ஸ்கூட்டர்தான் பிளஷர்;
 
 
 
 
''Why Should Boys have all the fun?'' என்ற டேக்லைனுடன் விற்பனைக்கு வந்த இது, பெண்களுக்கான ஸ்கூட்டராகப் பொசிஷன் செய்யப்பட்டது. ஆனால் ஹீரோவுக்குத் தெரியாமல், ஒரு 150சிசி பைக்கைத் தயாரித்துவந்த ஹோண்டா, அதே 2005-ல் களமிறக்கிய பிரிமியம் கம்யூட்டர் வகை பைக்தான் யூனிகார்ன் 150! இந்த இருதயாரிப்புகளும், சந்தையில் போதிய வரவேற்பைப் பெற்றதால், ஹீரோவுக்கும் ஹோண்டாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. 2014-ல் இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்தாலும், இந்த இரு நிறுவனங்களும், 2011-ம் ஆண்டிலேயே அதிகாரப்பூர்வமாகப் பிரிந்துவிட்டனர்!  
 
 
- ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   HERO, HONDA, ACTIVA, UNICORN, CD 100, SPLENDOR, PLEASURE, CD-DAWN, PASSION, PRO, ALLOY WHEELS, SELF START, HIGH SELLING MODEL.