ராயல் என்ஃபீல்டுக்குப் புதிய போட்டியாளர்: பஜாஜ் - ட்ரையம்ப் கூட்டணி!
Posted Date : 07:52 (10/08/2017)
Last Updated : 08:03 (10/08/2017)


''டூகாட்டியை வாங்கியது பஜாஜ்'' என்ற அறிவிப்பை, பைக் ஆர்வலர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், ட்ரையம்ப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறது பஜாஜ்! எனவே கையாளுமைக்கும், பெர்ஃபாமென்ஸுக்கும் கேடிஎம் பைக்ஸ் என்றால், சொகுசான ஓட்டுதலைக் கொண்ட பைக்குகளுக்காக ட்ரையம்ப் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது பஜாஜ்! 
 

எந்த வகை பைக்குகளை எதிர்பார்க்கலாம்?
 

 உலகளவில் ஸ்போர்ட்டியான மற்றும் சொகுசான பைக்குகளைத் தயாரிக்கும் மிகச்சில நிறுவனங்களில் ட்ரையம்ப்பும் ஒன்று; ஏற்கனவே பல்ஸர் மற்றும் டியூக்/RC போன்ற பெர்ஃபாமென்ஸ் பைக்குகளைத் தயாரித்து விற்பனை செய்கிறது பஜாஜ். ஆனால் க்ரூஸர் & டூரர் பைக் செக்மென்ட்டில், அவென்ஜர் மற்றும் டொமினார் பைக்குகளை பஜாஜ் பொசிஷன் செய்திருந்தாலும், அது ட்ரையம்ப் நிறுவனத்தின் போனவில்லி, த்ரக்‌ஸ்டன் பைக்குகளைப் போன்ற சொகுசான ஓட்டுதலைக் கொண்ட தயாரிப்புகள் இல்லை;
 
 
இதனாலேயே இவற்றின் விலை அதிகமாக இருந்தாலும், உலகளவில் அவை நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ட்ரையம்ப் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் விலை குறைவான பைக்கான ஸ்ட்ரீட் ட்வின் பைக்கின் ஆன் ரோடு விலையே, 8.4 லட்சத்தைத் தொடுகிறது!  ஆகவே 400-600சிசி செக்மென்ட்டில், மிட் சைஸ் பிரிமியம் பைக்குகளை இந்தியாவில் இக்கூட்டணி வெளியிடலாம்.

 
டிரையம்ப் ப்ளஸ், மைனஸ் என்ன?

இந்தியாவில் உற்பத்திச் செலவு, ஊழியர்களுக்கான ஊதியம் ஆகியவை குறைவாக இருப்பதுடன், பொறியியல் திறனிலும் செம ஸ்மார்ட்! இதனாலேயே, கடந்த 2014-ல் 250சிசி பைக் ஒன்றை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது ட்ரையம்ப். ஆனால் அத்திட்டம் பின்னாளில் கைவிடப்பட்டது அறிந்ததே. எனவே முன்னே சொன்ன  விஷயங்களைக் கைவசம் வைத்திருக்கும் பஜாஜ், அந்த வளங்களை ட்ரையம்ப் நிறுவனத்துக்குக் கொடுத்து உதவும் எனலாம்.
 
 
 
 
பஜாஜ் - கேடிஎம் வெளியிட்ட டியூக் மற்றும் RC பைக்குகள், இந்தியா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளிலும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இந்நிலையில், டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணி தயாரித்த G310R & G310GS ஆகியவை, இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை; ஆனால் அவை உலகளவில் பிரபலமான மாடல்களாகவே இருக்கின்றன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மிட் சைஸ் பிரிமியம் பைக்குகளை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்வதுடன், உலகளவில் அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பையும், பஜாஜின் உதவியால் ட்ரையம்ப் போனஸாகப் பெறும் என்பது ப்ளஸ்.  
 

பஜாஜ் ப்ளஸ், மைனஸ் என்ன?
 

இந்தியாவில் டிரெண்டிங்கில் இருக்கும் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் தான் இல்லை என்பதால், அதற்கு அடுத்தபடியான வரவேற்பைப் பெற்றிருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத் தயாரிப்புகளின்மீது, தனிக்கவனம் செலுத்தி வருகிறது பஜாஜ். மாதத்துக்கு சராசரியாக 40 ஆயிரம் பைக்குகள் என்றளவில் விற்பனையாகும் க்ளாஸிக் 350 பைக்கிற்குப் போட்டியாக வெளிவந்ததுதான் டொமினார் D400;
 
 
 
இது கொடுக்கும் காசுக்கு ஏற்ற மாடர்ன் பைக்காக இருந்தாலும், அது பஜாஜ் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்பதை சொல்லியாக வேண்டும். ட்ரையம்ப்பின் போனவில்லி, இதற்கான மாற்றாக இருந்தாலும், அதன் விலை மிகவும் அதிகம்! எனவே இந்த பைக்கை அடிப்படையாகக் கொண்டு, ரெட்ரோ டிசைனுடன் கூடிய ஒரு பட்ஜெட் பைக்கை, பஜாஜ் தயாரிக்கும் நாள், வெகு தொலைவில் இல்லை! 

 
இவை எப்போது விற்பனைக்கு வரும்?
 

டிசைனில் இருந்து ஒரு பைக் டீலர் வசம் வருவதற்கு, கொஞ்சம் அவகாசம் தேவைப்படும். டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ, தங்கள் கூட்டணியை 2013-லேயே அறிவித்தாலும், அவர்களது முதல் தயாரிப்பான G310R, 2015-ன் இறுதியில்தான் வெளிவந்தது. அதைப்போலவே, பஜாஜ் - கேடிஎம் நிறுவனங்களும், தங்களது கூட்டணியை 2008-ல் அறிவித்தாலும், 2011-ல் தான் டியூக் 200 வெளிவந்தது.
 
 
 
 
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பஜாஜ் - ட்ரையம்ப் கூட்டணியிடமிருந்து புதிய பைக் வெளிவருவதற்கு, குறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும் என்றே தெரிகிறது. இப்போது இந்தியாவில் BS-IV மாசு விதிகள் பின்பற்றப்படுகின்றன; ஆனால் 2020-ல் BS-VI மாசு விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், தனது தயாரிப்பை அதற்கேற்ப இக்கூட்டணி தயாரிக்குமா என்பதை, காலம்தான் உணர்த்தும்!
 
- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   BAJAJ, TRUMPH, KTM, HUSQVARNA, JOINT VENTURE, ROYAL ENFIELD, INDIA, CRUISER, RETRO DESIGN, SPORTS BIKE, BONNEVILLE, STREET TWIN, THRUXTON, BUDGET OFFERING, CAFE RACER.