டெஸ்ட்டிங்கில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக்கில் என்ன எதிர்பார்க்கலாம்? #RoyalEnfield
Posted Date : 10:14 (11/08/2017)
Last Updated : 10:22 (11/08/2017)


 

ஒவ்வொரு மாதமும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 750சிசி பைக் குறித்த ஸ்பை படங்கள், இன்டர்நெட்டில் பரவிய வண்ணம் உள்ளன. சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பேரலல் ட்வின் அமைப்பைக் கொண்ட 750சிசி  ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்ட இரண்டு மாடல்கள் (ஸ்டாண்டர்டு, கஃபே ரேஸர்), விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
 
இவை கான்டினென்ட்டல் GT 535 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்பது, அதன் தோற்றத்தைப் பார்த்தாலே தெரிகிறது. ஆனால் பைக்கை உற்று நோக்கும் போது, இரண்டிலும் கணிசமான வித்தியாசங்கள் தென்படுகின்றன. பெட்ரோல் டேங்க், சீட் ஆகியவற்றை, இதற்கான உதாரணமாகச் சொல்லலாம்.
 
 
 
 
ஸ்டாண்டர்டு மாடலில், கிளாஸிக் 350 பைக்கில் இருப்பது போன்ற பெட்ரோல் டேங்க்கும், கான்டினென்ட்டல் GT 535 பைக்கில் ஆப்ஷனலாகக் கிடைக்கக்கூடிய பெஞ்ச் சீட்டும் (2 சீட்டர்) இருக்கின்றன; இதுவே கஃபே ரேஸர் மாடல் என்றால், கவுல் உடனான ஸ்டைலான சீட்டுடன் (சிங்கிள் சீட்டர்), பார்ப்பதற்கு கான்டினென்ட்டல் GT 535 பைக்கின் ஜெராக்ஸ் போலவே இருக்கிறது.
 
 
 

பெட்ரோல் டேங்க் & சீட் தவிர, இரண்டு மாடல்களின் ஹேண்டில்பார் மற்றும் ஃபுட் பெக்கிலும் மாற்றம் இருக்கிறது. கஃபே ரேஸர் மாடலில் 2 பீஸ் ஹேண்டில்பார் இருந்தது என்றால், ஸ்டாண்டர்டு மாடலில் வழக்கமான சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் இருக்கிறது. நீண்ட தூரப் பயணங்களுக்கு உகந்த சொகுசான ரைடிங் பொசிஷனுக்காக, ஸ்டாண்டர்டு மாடலின் ஃபுட் பெக்குகள் தாழ்வாக இருக்கின்றன;
 
கஃபே ரேஸர் மாடலின் சற்றே ஸ்போர்ட்டியான சீட்டிங் பொசிஷனுக்காக, ஃபுட் பெக்குகள் இங்கே உயரமாக இருக்கின்றன. மேலும் ரியர் வியூ மிரர்களின் பொசிஷனும், ஹேண்டில்பாரின் உயரத்துக்கு ஏற்ப மாறுகின்றன. 
 
 
 

இரண்டு மாடல்களிலும் இருப்பது பைரலி டயர்கள்தான் என்றாலும், அவை வெவ்வேறு வேரியன்ட்களைக் கொண்டுள்ளன. கஃபே ரேஸர் மாடலில் பைரலி Sport Demon இருந்தால், ஸ்டாண்டர்டு மாடலில் பைரலி Phantom Sportscomp டயர்கள் உள்ளன. இவை ட்ரையம்ப் நிறுவனத்தின் ரெட்டோ பைக்குகளான ஸ்ட்ரீட் ட்வின் மற்றும் போனவில்லி ஆகியவற்றில் பயன்படுத்தப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மற்றபடி Twin downtube cradle சேஸி - Paioli சஸ்பென்ஷன் - இரட்டை எக்ஸாஸ்ட் பைப்களுடன் கூடிய ஆயில் கூல்டு 750சிசி பேரலல் ட்வின் இன்ஜின் - Brembo ஏபிஎஸ் பிரேக் போன்றவற்றில், இரண்டு மாடல்களுக்கும் ஒற்றுமைகள் அதிகம்! ஆனால் கார்புரேட்டர், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷன்கள் இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. 
 
 
 

முதற்கட்டமாக இந்தாண்டு நவம்பர் மாதம், மிலனில் நடைபெறும் EICMA மோட்டார் ஷோவில் இந்த இரண்டு மாடல்களும் காட்சிபடுத்தப்படும். பின்னர் இவை டெல்லியில் நடைபெற உள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரையம்ப் போனவில்லி, ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குகளுக்குப் போட்டியாகக் களமிறங்க உள்ள இந்த பைக்கின் விலை,
 
உத்தேசமாக 4 - 5 லட்ச ரூபாயாக இருக்கும் எனலாம். சென்னையில் தற்போது இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த பைக்குகளைப் படம் பிடித்திருக்கிறார்கள், மோட்டார் விகடன் வாசகர்களான நித்தீஷ் மற்றும் கோபி கிருஷ்ண சந்திரசேகரன்.  
 
 
 

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   ROYAL ENFIELD, CONTINENTAL GT 535, 750CC, PARALLEL TWIN, INDIA, OIL COOLER, BREMBO, ABS, CAFE RACER, STANDARD MODEL, PIRELLI TYRES, PETROL TANK, HANDLE BARS, SEATS, TRIUMPH BIKES.