இன்று பெரும்பாலான பொறியியல் மாணவர்களின் வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணம், அவர்கள் பாடப் புத்தகங்களை தாண்டி, தொழில்திறன் குறித்து ஏதும் அறியாமல் இருப்பதுதான். இதனை மாற்றும் விதமாக, கடந்த 2013 முதலாக, ஒவ்வொரு வருடமும், பொறியியல் மாணவர்களுக்காகப் பிரத்யேகமாக, கோவையில் உள்ள ‘கற்பகம் பொறியியல் கல்லூரி’ சார்பாக, ‘ரைடு’ என்னும் மினி பைக் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்குபெறுவோர், SAE BAJA போல, போட்டிக்கான வாகனத்தை தாங்களே வடிவமைத்து, அதனைத் தயாரிக்க வேண்டும் என்பதுதான் இதன் ஸ்பெஷல் அம்சம். இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார், அந்தக் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறைத்தலைவரான கணேஷ் முரளி. 
 
 
 

“60 சிசி, 80 சிசி, E-பைக் மற்றும் ATV (All Terrain Vehicle) என, மொத்தம் நான்கு பிரிவுகளாக இந்த போட்டி நடைபெறும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக விதிமுறை புத்தகங்கள் பின்பற்றப்படுகின்றன. அதில் இன்ஜின் திறன், நீள-அகல அளவுகள், எடை, கிரவுண்ட் கிளியரன்ஸ் என வாகனம் தொடர்பான தகவல்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருக்கும். மாணவர்கள் இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு, போட்டியில் பங்குபெறும் வாகனத்தை உருவாக்க வேண்டும். அதன் பின்னர், இந்த வாகனங்களுக்கு 2 கட்டங்களாக பரிசோதனை நடைபெறும். 
 
 
 

இதில் முதற்கட்டத்தில் ‘ஸ்டாட்டிக் டெஸ்ட்’ எனப்படும், வாகனத்தை ஓர் இடத்தில் நிறுத்தி வைத்து டெஸ்ட் செய்வது. இதில் போட்டியில் பங்குபெறும் வாகனங்கள் அனைத்தும், விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டு இருக்கின்றனவா என்பது பரிசோதிக்கப்படும். அடுத்தபடியாக ‘டைனமிக் டெஸ்ட்’. இதில் வாகனத்தின் பிரேக்கிங், ஸ்டீயரிங், ஆக்ஸிலரேஷன் ஆகியவற்றுடன், வாகனத்தில் இருந்து எரிபொருள், ஆயில் ஏதெனும் கசிகின்றனவா என்பதும் பரிசோதனை செய்யப்படும். ஒவ்வொரு பரிசோதனைக்கும், தனித்தனியே புள்ளிகள் உண்டு.
 
 
 

ரைடு-ன் முக்கிய அம்சமே, அது ஒரு ரேஸ் அல்ல. மணல், சேறு, குழி, மேடு, பள்ளம் போன்ற தடைகள் நிரம்பிய பிரத்யேகமான ட்ராக்கை, வாகனங்கள் ஒவ்வொன்றாக சுற்றி வர வேண்டும். அதில் குறைந்த நேரத்தில் ட்ராக்கை சுற்றி முடிக்கும் வாகனத்திற்கு, அதிக புள்ளிகள் வழங்கப்படும். இறுதியாக போட்டியில் பங்கேற்ற அனைத்து வாகனங்களும் பெற்றிருக்கும் புள்ளிகளைக் கணக்கில் கொண்டு, எந்த வாகனம் அதிக புள்ளிகளைப் பெற்றிருக்கிறதோ, அது முதல் பரிசைத் தட்டிச் செல்லும். இதன்மூலம் மாணவர்கள் தங்களின் செய்முறை மற்றும் நடைமுறை பொறியியல் திறன்களை வளர்த்து கொள்வதற்கான களமாக அமைவதே, ‘ரைடு’-ன் நோக்கமும் வெற்றியும்” என்றார்.
 
 
 

ரைடு 2017-ல் பங்குபெற விரும்பும் மாணவர்கள், அதற்காக முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள்: 12/09/2017. இந்தப் போட்டி குறித்த விவரங்களுக்கு, autoride2017@gmail.com என்ற முகவரியில், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

 - விநாயக் ராம் (மாணவப் பத்திரிகையாளர்)
 - படங்கள்: கடந்தாண்டு நடைபெற்ற ரைடு 2K16 போட்டியில் எடுக்கப்பட்டவை.