''செப் 1,2017 முதல், அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம்'' - இனி நடக்கப்போவது என்ன? #drivinglicense
Posted Date : 19:50 (31/08/2017)
Last Updated : 19:59 (31/08/2017)


''வாகன ஓட்டிகள், செப்டம்பர் 1-ம் தேதி முதலாக, அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்'' எனத் தமிழக அரசு, கடந்த வாரம் உத்தரவிட்டது. ''01.09.2017 முதல் வாகனங்களை ஓட்டும்போது, அனைத்து வாகன ஓட்டுநர்களும், அசல் ஓட்டுநர் உரிமத்தைத் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' எனச் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் தெரிவித்துள்ளது. ''இது மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிரானது'' எனக்கூறி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான சத்தியநாராயணா மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில், சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமி, ''உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும்'' என முறையிட்டார். 
 
 
 

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், ''இதுதொடர்பாக மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்'' எனத் தெரிவித்தனர். ஆனால் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, ''தற்போதுள்ள வழக்குப் பட்டியலின் அடிப்படையில்தான் அவை விசாரிக்கப்படும்'' எனப் பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து, சாலைப் பாதுகாப்புக்கான உச்சநீதிமன்றக் குழு, சாலை விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை, தற்காலிகமாக நிறுத்திவைக்க அல்லது ரத்து செய்ய அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது. 

 
மோட்டார் வாகனச் சட்டம் சொல்வது இதுதான்!

மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 3-ன் படி, உரிய வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல், எந்த ஒரு நபரும் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது.
 
 
 
 
மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 130-ன் படி, பொது இடத்தில் சீருடையில் உள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியும், வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தைக் கோரும்போது, அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். 
 
மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 181-ன் படி, உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவருக்கு, 3 மாத சிறைத் தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படலாம். 

 
தமிழகப் போக்குவரத்துத் துறையின் அறிவிப்புகள்!

‘நாளை முதல், ஒரிஜினல் லைசென்ஸை நம்முடன் கொண்டு செல்ல வேண்டும்; அப்படி இல்லையென்றால், 3 மாத சிறை தண்டனை அல்லது ஸ்பாட் ஃபைன் 500 ரூபாய்’ என்கிற அதிரடிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து, ''இனிமேல் முறையான ஓட்டுநர் உரிமம் இருந்தால்தான் கார் அல்லது பைக் வாங்க முடியும்'' என்ற சூழல் உருவாகியுள்ளது. புதிதாக கார்/பைக் வாங்க வேண்டும் என்கிற ஆசை, 18 வயதைத் தாண்டிய அனைவருக்குமே இருக்கும்.
 
 
 
 
ஆனால் அவர்களிடம் டிரைவிங் லைசென்ஸ் இருக்காது. இவர்கள் ‘வண்டி வாங்குனதுக்கு அப்புறமா லைசென்ஸ் வாங்கலாம்’ எனும் ஐடியாவில் இருந்தால், உங்கள் ஆசை இனி எடுபடாது. ‘புதிய வாகனத்தை வாங்குபவர்களின் முறையான ஓட்டுநர் உரிமத்தைப் பரிசோதனை செய்தபிறகே, வாகனத்தை விற்பனை செய்ய வேண்டும்’ எனத் தமிழகப் போக்குவரத்துத்துறை, வாகன டீலர்களுக்கும் - RTO அலுவலகங்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை சமீபத்தில் அனுப்பியுள்ளது.
 
லைசென்ஸ் இல்லாதவர்கள் - புதிதாக LLR பதிவு செய்தவர்கள் - Affidavit-க்கு முன்பதிவு செய்துவிட்டு, புதிய வாகனத்தை புக் செய்தது போன்றவை இனி நடக்காது. ‘‘வாகன ஓட்டுநர்களிடம் முறையான ஓட்டுதல் திறன் மற்றும் அனுபவம் இல்லாததுதான், அதிக விபத்துகளுக்கு வழிவகுக்கிறது.
 
 
 
 
எனவே இனி LLR வைத்திருப்பவர்களுக்கோ, லைசென்ஸ் இல்லாதவர்களுக்கோ இனி புதிய வாகனத்தை விற்பனை செய்யக் கூடாது. அப்படி அதனை மீறினால், சம்பந்தப்பட்ட டீலர்களுக்கு 3 மாத ஜெயில் தண்டனை’’ என அறிவித்திருக்கிறது தமிழகப் போக்குவரத்துத்துறை. இது மாற்றுத் திறனாளிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்துமா என்பதற்கு, காலம்தான் பதில் சொல்லும்!

 - ராகுல் சிவகுரு.
 
 
TAGS :