ஜெனரல் மோட்டார்ஸ்: இந்தியாவில் கடந்து வந்த பாதை!
Posted Date : 15:09 (02/09/2017)Last updated : 15:09 (02/09/2017)


சரியாக 3 மாதங்களுக்கு முன்பு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது கார்களின் உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இந்நிறுவனத்துக்குச் சொந்தமாக மஹாராஷ்ட்ராவில் இருக்கும் கார் தொழிற்சாலையில், ஏற்றுமதி தேவைகளுக்காக மட்டுமே கார்கள் தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற டிசம்பர் 31, 2017 முதலாக, இந்தியாவில் கார்களை விற்பனை செய்யப்போவதில்லை என்ற முடிவிலும் இருக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ்!
 
ஆனால் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க் தொடர்ந்து இயங்கும் என, அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 21 வருட இந்தியப் பயணம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அவர்கள் அறிமுகப்படுத்திய சிறந்த தயாரிப்புகளை இப்போது பார்ப்போம்! இவை மாருதி சுஸூகி மற்றும் ஹூண்டாய் கார்களைப் போல அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகவில்லை என்றாலும், அதை வாங்கியவர்களுக்கு மனநிறைவைத் தந்தன என்பதே நிதர்சனம்.

 
ஓபல் ஆஸ்ட்ரா (1996-2006)

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஜெர்மானிய நிறுவனமான ஓபல் (Opel) வாயிலாக இந்தியாவில் கால்பதித்தது. இவர்கள் அறிமுகப்படுத்திய ஆஸ்ட்ரா (Astra), அப்போதைய C-செக்மென்ட் செடான் பிரிவில், ஹோண்டா சிட்டி மற்றும் மிட்சுபிஷி லான்சர் போன்ற கார்களுடன் போட்டியிட்டது. ஜெர்மன் கார்களுக்கே உரித்தான தரம் - அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய கேபின் - பெட்ரோல்/டீசல் இன்ஜின் ஆப்ஷன் என அசத்திய இந்த காரின் கட்டுமானத் தரம், அதன் கதவுகள் மூடும் விதத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
 
 
 
 
அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைத்த இந்த செடானின் டாப் வேரியன்ட்டான க்ளப்பில், சன்ரூஃப் கூட இருந்தது மக்களே; ஆனால் உதிரிபாகங்களின் விலை அதிகமாக இருந்ததுடன், அவற்றைத் தேடிப்பிடித்து வாங்கும் சூழலே அப்போது நிலவியது. எனவே பராமரிப்புக்காக சர்வீஸ் சென்டருக்குச் சென்ற கார்கள், உரிமையாளரின் கைக்குத் திரும்ப வர, பல வாரங்கள் ஆனது! மேலும் ஹூண்டாய் அசென்ட் (Accent), மாருதி சுஸூகி பெலினோ என ஜப்பான்/கொரிய செடான்கள் வரிசையாகப் படையெடுத்ததால், நாளடைவில் விற்பனையில் பின்தங்கியது ஆஸ்ட்ரா.

 
ஓபல் கோர்ஸா (2000-2006)

ஆஸ்ட்ராவைத் தொடர்ந்து, இந்தியாவில் ஓபல் நிறுவனம் அறிமுகப்படுத்திய மற்றுமொரு சிறந்த தயாரிப்புதான் கோர்ஸா (Corsa). ஃபோர்டு ஐகான் காருடன் போட்டி போட்ட இந்த கார், ஆஸ்ட்ராவை விட விலை குறைவாக இருந்ததுடன், தேவையான சிறப்பம்சங்களையும் கொண்டிருந்தது. க்ராஷ் சென்சார், பவர் விண்டோ, Pollen ஃபில்டர் ஆகியவற்றை, இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.
 
 
 
 
அசத்தலான கட்டுமானத் தரத்தைக் கொண்டிருந்த கோர்ஸாவில், 1.4 லிட்டர் & 1.6 லிட்டர் என இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் இருந்தது. பின்பு இந்த செடானை அடிப்படையாகக் கொண்டு, கோர்ஸா செயில் ( Sail - ஹேட்ச்பேக்) மற்றும் கோர்ஸா ஸ்விங் (Swing - ஸ்டேஷன் வேகன்) எனும் இரண்டு மாடல்களைக் களமிறக்கியது ஓபல். சிறந்த தயாரிப்புகளாக இருந்தாலும், கோர்ஸாவின் வீழ்ச்சியை யாராலும் தவிர்க்க முடியாமல் போனது. இதன் வெளிப்பாடாக, 2006-ல் ஒரேடியாக இந்திய கார் சந்தையை விட்டு வெளியேறியது ஓபல்.

 
செவர்லே ஆப்ட்ரா (2003-2012) 

ஓபல் கைவிட்டாலும், இந்தியாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை, செவர்லே பிராண்ட் மூலம் தொடங்கியது ஜெனரல் மோட்டார்ஸ். உலகளவில் விற்பனை செய்யப்பட்ட தாவூ (Daewoo) மோட்டார்ஸின் லசெட்டி (Lacetti) காரை அடிப்படையாகக் கொண்டு இது தயாரிக்கப்பட்டிருந்தது. பிரிமியம் செடானாகப் பொசிஷன் செய்யப்பட்ட இந்த கார், சிறப்பான கட்டுமானத் தரம் - போதுமான சிறப்பம்சங்கள் - பவர்ஃபுல் 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் என அசத்தியது.
 
 
 
 
ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் ஹூண்டாய் எலான்ட்ரா ஆகிய பிரிமியம் செடான்களுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்ட இதுவும் விற்பனையில் பின்தங்கியது. பின்பு 2007-ல், ஆப்ட்ரா மேக்னம் என்ற பெயரில், அதிக வசதிகளுடன், 120bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலையும் அறிமுகப்படுத்தியது செவர்லே. 10-12 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பிரிமியம் செடானும், விற்பனையில் சோபிக்க முடியாமல் போனது.

 
செவர்லே SR-V (2006-2010)
 
மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே SR-V தயாரிக்கப்பட்டதால், இந்த காரைப் பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருக்க நியாயமில்லை. பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமை, இந்தக் காரையே சேரும். 4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் இருந்த SR-V, ஆப்ட்ரா செடானின் ஹேட்ச்பேக் வெர்ஷன்தான்! அப்போது 7 லட்ச ரூபாய்க்கு செடான் கார்களே கிடைத்த நிலையில், இந்த ஹேட்ச்பேக்கை வாங்குவதற்கு பலரும் தயங்கினர் என்பதே உண்மை.
 
 
 
 
103bhp பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்த SR-V, ''டிரைவர்ஸ் கார்'' என்ற பெருமையைப் பெற்றிருந்தது. காலத்தை விஞ்சிய தயாரிப்பாக இருந்தாலும், இந்த காரின் விற்பனையை அதிகரிக்க அது கைகொடுக்கவில்லை என்பதே நிதர்சனம். பின்பு இதே செக்மென்ட்டில் வெளிவந்த மாருதி சுஸூகியின் ஸ்விஃப்ட், எவ்வுளவு பெரிய வெற்றியைப் பெற்றது என்பதை, இந்த நாடே அறியும்!

 
செவர்லே டவேரா (2004-2017)
 
தொடர்ச்சியாகத் தோல்விகளை மட்டுமே சந்தித்த செவர்லே, டவேரா காரால் வெற்றியை முதன்முதலாகச் சுவைத்தது. எம்பிவி வகை வாகனமான இது, டொயோட்டா குவாலிஸுக்கு அடுத்தபடியாக அதிக இடவசதி - நல்ல மைலேஜ் - அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலை - குறைவான பராமரிப்புச் செலவு எனப்பல ப்ளஸ்களைப் பெற்றிருந்ததால், விரைவிலேயே டாக்ஸி செக்மென்ட்டின் செல்லப் பிள்ளையானது டவேரா. இதனால் ஒவ்வொரு மாதமும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையான இவ்வாகனம்,
 
 
 
 
2013-ல் எழுந்த மாசு அளவுகள் குறித்த பிரச்னையால், தனது சந்தை மதிப்பை இழக்கத் தொடங்கியது. மேலும் அமெரிக்க நிறுவனமான செவர்லே மீதிருந்த பிம்பமும் இதனால் சரிவுக்குள்ளானது. இப்போதைய சூழ்நிலையில், மாதத்துக்குச் சராசரியாக 500-1000 கார்கள் விற்பனையாகி வருகின்றன.
 

செவர்லே பீட் (2010-2017)
 
2009-ல் வெளிவந்த டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தின் 2-வது பாகத்தில் இடம்பெற்றிருந்த சிறிய பச்சை நிற கார், பலரது கவனத்தைக் கவர்ந்தது. வெளிநாடுகளில் ஸ்பார்க் என்ற பெயரில் விற்பனையான இந்த கார், இந்தியாவில் பீட் என்ற பெயரில் வெளிவந்தது. அப்போது இருந்த கார்களைவிட வித்தியாசமான டிசைனைக் கொண்டிருந்த இந்த கார், இளைஞர்களை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டது. காம்பேக்ட் சைஸ் - போதுமான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்திய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் என ஒரு சிட்டி காருக்கான தகுதிகளைத் தன்வசம் கொண்டிருந்தது பீட்.
 
 
 
 
பெரிய டயர்கள், பாடி கிட், ஸ்டிக்கர்கள் எனக் கார்களை மாடிஃபை செய்பவர்களின் சாய்ஸாகவும் இது இருந்தது. 2011-ல் இதன் டீசல் மாடலை வெளியிட்டது செவர்லே. 1.0 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டிருந்த பீட், சிறப்பம்சங்களில் பின்தங்கிவிட்டது. மேலும் உலகளவில் பீட்டின் அடுத்த தலைமுறை மாடல் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், அறிமுகமான நாள் முதலாக எந்த மாற்றங்களும் இல்லாமல் இருக்கும் இந்திய மாடலுக்குக் கொஞ்சம் வயதாகிவிட்டதோ என்றே தோன்றுகிறது. 
 

செவர்லே க்ரூஸ் (2009-2017)
 
''டீசல் ராக்கெட்'' என்ற பட்டப்பெயருக்குச் சொந்தக்காரரான க்ரூஸ், கார் ஆர்வலர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்தது. இந்தியாவில் 2009-ல், டீசல் கார்கள் மீதான வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில் களமிறங்கிய க்ரூஸ், டொயோட்டா கரோலா - ஹோண்டா சிவிக் போன்ற D-செக்மென்ட் செடான்களுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பொருத்தப்பட்டிருந்த 2.0 லிட்டர் டீசல் இன்ஜின், 166bhp பவர் மற்றும் 36kgm டார்க்கை வெளிப்படுத்தியது.
 
 
 
 
இதனால் 0 - 100கிமீ வேகத்தை, வெறும் 9 விநாடிகளிலேயே எட்டிப்பிடித்த க்ரூஸ், 200கிமீக்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய திறனைக் கொண்டிருந்தது. காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படாததுடன், டி-செக்மென்ட் செடான் பிரிவில் ஏற்பட்ட தெக்க நிலையாலும், க்ரூஸ் காரின் விற்பனை நாளடைவில் குறையத் தொடங்கியது. 
 

 - ராகுல் சிவகுரு.