டிவிஎஸ் அப்பாச்சி RTR... 10 ஆண்டுகள்!
Posted Date : 15:41 (02/09/2017)
Last Updated : 15:51 (02/09/2017)


அப்பாச்சி... ரேஸ் டிராக்குகளில் பைக் ஓட்டக்கூடிய/ஓட்டிக்கொண்டிருக்கும் பலரும், முதன்முறையாக அங்கே ஓட்டிய பைக் இதுவாகத்தான் இருக்கும்! இப்படி ரேஸ் டிராக்கில் பிறந்து சாலைகளுக்கு வந்த அப்பாச்சி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறப்பான பைக்குகளில் ஒன்றாக இன்றளவும் இருக்கிறது;
 
 
 
 
முதன்முதலில் 150சிசி மாடலாக, கடந்த 2005-ல் அறிமுகமான அப்பாச்சி 150 E-Surge, சுஸூகி ஃபியரோ F2 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு ரேஸ் பைக்குக்கான குணாதிசியங்களுடன், RTR என்ற அடைமொழியுடன் அப்பாச்சி களமிறங்கியது 2007-ல்தான்! எனவே இந்தியாவில் அப்பாச்சி RTR பைக்கின் ஆதிக்கம் தொடங்கி, 10 ஆண்டுகள் ஆகிவிட்டது!

 
2007: டிவிஎஸ் அப்பாச்சி RTR 160

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனையாகும் ஒரு பைக், ரேஸ் பைக்கின் திறனுடன் வெளிவந்தது இல்லை என்ற கூற்றுக்குச் சரியான தீர்வாக அமைந்தது அப்பாச்சி RTR பைக் என்றால் அது மிகையில்லை; ரேஸிங்கில் 33 வருட அனுபவத்தைக் கொண்டிருக்கும் டிவிஎஸ் தயாரித்த அப்பாச்சி RTR பைக்கை வடிவமைத்த பொறியாளர்கள் குழுவில் இருந்த பலரும் பைக்கர்கள்தான் என்பது கவனிக்கத்தக்கது. அப்பாச்சி RTR வரலாற்றில், OverSquare இன்ஜினுடன் வெளிவந்த அப்பாச்சி RTR 160-ல் இருந்த இன்ஜின்,
 
 
 
 
அதன் போட்டியாளர்களைவிட அதிக பவரை வெளிப்படுத்தியதுடன், குறைவான எடையையும் கொண்டிருந்தது. மேலும் ரேஸ் டிராக்கிலும், சாலையிலும் சிறப்பான கையாளுமையை அளிக்கக்கூடிய சேஸி தவிர, இந்தியாவிலேயே முதன்முறையாக பெட்டல் டிஸ்க் பயன்படுத்தப்பட்டது அப்பாச்சி RTR-ல்தான்;  இவை எல்லாம் ஒன்று சேரும்போது, நன்கு ரெவ் ஆகி வேகமெடுக்கக்கூடிய, நினைத்த நேரத்தில் நிறுத்தக்கூடிய பைக்காக அப்பாச்சி RTR உருவானதன் சுவையான பின்னணி இதுதான்! 

 
2009: டிவிஎஸ் அப்பாச்சி RTR 180

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பைக்குகளில், ஏபிஎஸ் உடன் வெளிவந்த முதல் பைக் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான அப்பாச்சி RTR 180, அப்பாச்சி RTR 160-யைவிடக் கூடுதலான பெர்ஃபாமென்ஸ் வேண்டும் என்பவர்களுக்கான விடையாக அமைந்தது!
 
 
 
 
இந்தியாவில் ஸ்டைலைவிட பெர்ஃபாமென்ஸுக்கே முக்கியத்துவம் அதிகம் என்ற மனநிலையில் டிவிஎஸ் இருந்ததாலேயே, இந்த 10 ஆண்டுகளில் தனக்கென ஒரு நம்பகத்தன்மையான ரசிகர் வட்டத்தை உருவாக்க முடிந்திருக்கிறது. 

 
2012: டிவிஎஸ் அப்பாச்சி RTR ஃபேஸ்லிஃப்ட்

பைக்கின் பெர்ஃபாமென்ஸ் நன்றாக இருந்தாலும், நீண்ட நாட்களாக டிசைனில் மாற்றமில்லை என்ற காரணத்தாலேயே, போட்டியாளர்களைவிட விற்பனை எண்ணிக்கையில் அப்பாச்சி RTR, பல சந்தர்ப்பங்களில் பின்தங்கியும் இருக்கிறது! இதனைச் சரிசெய்யும் பொருட்டு, டிவிஎஸ் 2012-ல் பேஸ்ஃலிஃப்ட் செய்யப்பட்ட அப்பாச்சி RTR பைக்கை வெளியிட்டது.
 
 
 
 
ஆனால் இது டிவிஎஸ் நிறுவனமே எதிர்பார்க்காத வகையில், அதன் ரசிகர்களிடையே கலவையான கருத்துகளை ஏற்படுத்தியதுதான் சோதனை! தொழில்நுட்ப ரீதியிலும்  அப்பாச்சி RTR, காலப்போக்கில் வளர்ந்துகொண்டுதான் இருந்தது. 

 
2016: டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V

ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், ஏபிஎஸ், 4 வால்வு, ஆயில் கூலர், மோனோஷாக், LED DRL, டிஜிட்டல் டயல்கள் போன்ற வசதிகளுடன், பக்காவான ஸ்ட்ரீட் ஃபைட்டர் டிசைன் மற்றும் சிறப்பான கையாளுமையுடன் கூடிய பெர்ஃபாமென்ஸ் என மிகப்பெரிய அளவில் முன்னேறிய தயாரிப்பாகக் கடந்தாண்டு வெளிவந்தது அப்பாச்சி RTR 200.
 
 
 
 
கார்புரேட்டர் மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷன்களைக் கொண்டிருந்த 197.75 சிசி இன்ஜின், 21bhp பவரை வெளிப்படுத்துகிறது. ''Indian Bike of the Year'' உட்பட இந்திய ஆட்டோமொபைல் துறையின் பல உயரிய விருதுகளைப் பெற்ற அப்பாச்சி RTR 200, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக இருக்கிறது! 

 
2017: டிவிஎஸ் அப்பாச்சி RR 310 S
 
தற்போது பிஎம்டபிள்யூவுடன் கூட்டணி அமைத்திருக்கும் டிவிஎஸ், அந்நிறுவனத்தின் G310R ஸ்ட்ரீட் பைக்கை இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, டிவிஎஸ் வடிவமைத்த ஃபுல் பேரிங் கொண்ட பைக்தான் அக்குலா 310.
 
 
 
 
இதனைக் கடந்தாண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியது குறிப்பிடத்தக்கது; எனவே பெர்ஃபாமென்ஸ் பைக் செக்மென்ட்டில், தனது மார்க்கெட் ஷேரை அதிகப்படுத்தும் விதமாக, அப்பாச்சி RR310S எனும் பைக்கை இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் களமிறக்க உள்ளது டிவிஎஸ்! 
 
- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   TVS, APACHE, RTR, INDIA, BAJAJ PULSAR, 160, 180, 200, ABS, 4V, OIL COOLING, LED, PETAL DISC, PIRELLI, REMORA.