நெக்ஸாவைத் தொடர்ந்து, Arena ஷோரூம்களைத் திறக்கிறது மாருதி சுஸுகி!
Posted Date : 11:09 (04/09/2017)Last updated : 11:09 (04/09/2017)


இந்தியாவில் அதிக கார்களை (மாதத்துக்கு சராசரியாக 1.4 லட்சம் கார்கள்) விற்பனை செய்யும் நிறுவனமான மாருதி சுஸூகி, தனது டீலர் நெட்வொர்க்கின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் பணிகளில் இறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் போட்டியாளரான ஹூண்டாய் நிறுவனத்தின் ஸ்டைலான ஷோரூம்களுடன் ஒப்பிடும்போது, வெள்ளை - நீல நிறத்தில் டல்லாகக் காட்சிதந்தன மாருதி சுஸூகியின் 2,050-க்கும் அதிகமான ஷோரூம்கள்.
 
 
 
 
தற்போதைய நிலையில் பிரிமியம் கார்களுக்காக நெக்ஸா, யூஸ்டு கார்களுக்காக ட்ரூ வேல்யூ, LCV-யான சூப்பர் கேரிக்குப் பிரத்யேகமான ஷோரூம், பட்ஜெட் கார்களுக்கான டீலர்கள் எனப்பல வகைகளில் இந்தியா முழுக்க தான் வைத்திருக்கும் ஷோரூம்களை, Transformation 2.0 என்ற பெயரில் அவற்றின் கட்டமைப்பை மாடர்ன்னாக மாற்றும் முயற்சிகளில் மாருதி சுஸூகி ஈடுபட உள்ளது. இதில் மாருதி சுஸூகியின் வழக்கமான டீலர்கள் அனைத்தும், இனி Arena எனப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளன. 
 

 
 
மேலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும் பொருட்டு, அவை முழுக்க டிஜிட்டல் செட்-அப்புடன் வடிவமைக்கப்படும் என்பதுடன். முதற்கட்டமாக, 80 டீலர்களை Arena பெயரில் அந்த கான்செப்ட்டுக்கேற்ப மேம்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் Arena ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த 5 ஆண்டுகளில், மீதமுள்ள ஷோரூம்களும் Arena கான்செப்ட்டுக்கு அப்டேட் செய்யப்படும் எனத் தெரிகிறது.
 
 
 
 
இப்போதும் அதே வெள்ளை - நீல நிறப் பின்னணியே இருந்தாலும், மரத்தால் ஆன ஃபர்னிச்சர், வெள்ளை - மஞ்சள் நிற லைட்டிங், சில்வர் வேலைப்பாடு, வெள்ளை - கறுப்பு நிற டைல்ஸ் என Arena ஷோரும்கள் அசத்தலாக இருக்கின்றன. அங்கே வெள்ளை பேக்லிட்டில், சுஸூகியின் லோகோ அழகாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்குக் காரைப் பற்றி உடனுக்குடன் விளக்குவதற்கு ஏதுவாக, கையில் டேப்லட்டுடன் கூடிய Relationship Manager-கள் இங்கே தயாராக இருப்பார்கள். 
 

 
 
மேலும் கார் வாங்கியவர்கள் காத்திருப்பதற்கான இடம் மற்றும் Cafeteria வசதியும் இருக்கின்றன. இப்படி புதிதாகக் கார் வாங்க விரும்பும் இளைய தலைமுறையினரை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கும் Arena ஷோரூம்களில், ஒருவர் தான் வாங்க விரும்பும் காரைப் பற்றி முழுவதும் அங்கிருக்கும் டச் ஸ்க்ரீன்களில் 360 டிகிரியில் தெரிந்து கொள்ள முடியும் என்பதுடன், தேவையான ஆக்ஸசரிகளையும் அதில் எலெக்ட்ரிக்கலாகப் பொருத்தி பார்க்க முடியும் என்பது ப்ளஸ்.
 
 
 
 
மேலும் இருந்த இடத்தில் இருந்தே பிடித்தமான மாடலின் டெஸ்ட் டிரைவையும், காரை புக் செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் இடத்தில், டெஸ்ட் டிரைவிற்கு வழங்கப்படும் கார்களும் அருகே நிறுத்தப்பட்டுள்ளன. 2020-க்குள் தனது டீலர் நெட்வொர்க்கை இரட்டிப்பாக்கும் முடிவில் இருக்கும் மாருதி சுஸூகி, அவை அனைத்தையும் Arena கான்செப்ட்டின் படியே வடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

 
 
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பட்ஜெட் கார்களை விற்பனை செய்யும் இடம், வால்வோ ஷோரூம் போல இவ்வளவு லக்ஸூரியாக இருப்பது, வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷலான உணர்வைக் கொடுக்கும் என்றே தெரிகிறது. ஆக ஷோரூமுக்குள் நுழைந்த உடனே, நமக்குக் கிடைக்கும் காரின் விலைப் பட்டியல் மற்றும் Brochure ஆகியவை, முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை! 

- ராகுல் சிவகுரு.