70 ஆண்டு சுதந்திரத்தில், இந்தியா கண்ட சிறந்த பைக்குகள்!
Posted Date : 19:09 (08/09/2017)Last updated : 19:09 (08/09/2017)


இந்தியா சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது! இந்த 70 ஆண்டுகளில், குடியரசு நாடான இந்தியாவில், ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படும் வகையில் பலவற்றை சாதித்திருக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில் தவிர்க்க முடியாத பைக்குகளை இப்போது பார்ப்போம்.
 

பஜாஜ் சேட்டக்
 
ஹமாரா பஜாஜ்... 1980-களில், இளையராஜா பாட்டைத் தவிர, பலர் முனுமுனுத்த வரிகள் இது. 2 ஸ்ட்ரோக் பைக்குகள், இந்தியாவை ஆக்ரமித்துக் கொண்டிருந்த காலத்தில், தில்லாக சேட்டக் ஸ்கூட்டரைக் களமிறக்கி, அசாத்தியமான வெற்றியையும் பெற்றது பஜாஜ். வருடக்கணக்கில் காத்திருந்து, இதனை மக்கள் வாங்கிச் சென்றதே, இதற்கான சிறந்த உதாரணம். ஒருகாலத்தில் உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற பெருமையைப் பெற்றிருந்த சேட்டக்,
 
 
 
 
2000-களின் பிற்பகுதியில் தனது செல்வாக்கை இழந்தது. இதன் தொடர்ச்சியாக, 2006-ல் இதன் உற்பத்தியை நிறுத்தியது பஜாஜ். பின்னர் 2009-ல், மோட்டார் சைக்கிள்களை மட்டுமே தயாரிக்கும் பொருட்டு, ஸ்கூட்டர் செக்மென்ட்டை விட்டே இந்நிறுவனம் வெளியேறியது. இந்த இடைப்பட்ட காலத்தில் அறிமுகமான ஆக்டிவாவின் அசுரத்தனமான எழுச்சியால், சேட்டக் ஸ்கூட்டர் வாயிலாக மீண்டும் ஸ்கூட்டர் சந்தையில் நுழைவதற்குத் திட்டமிட்டுள்ளது பஜாஜ்.

 
ராயல் என்ஃபீல்டு புல்லட் 

இந்தியா சுதந்திரம் பெற்று, 2 ஆண்டுகள் ஆன பிறகு, அதாவது 1949 முதலாக என்ஃபீல்டு, இந்தியாவில் தனது பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. ஆனால் 1955-ல் இந்திய அரசாங்கம், ராணுவப் பயன்பாட்டுக்காக 800 புல்லட் 350 பைக்குகளுக்கான ஆர்டரைப் போட்டதன் பிற்பாடு, மெட்ராஸ் மோட்டார்ஸ் எனும் தமிழக நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது, இங்கிலாந்தைச் சேர்ந்த என்ஃபீல்டு நிறுவனம். ''என்ஃபீல்டு இந்தியா'' என்ற பெயரில் தொடங்கப்பட்ட புதிய நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள், மெட்ராஸ் மோட்டார்ஸ் வசமே இருந்தன.
 
 
 
 
மேலும் 1957 முதலாக, பைக்குகளுக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரிக்கவும் தொடங்கியது மெட்ராஸ் மோட்டார்ஸ். 1971-ல் இங்கிலாந்தில் இருந்த என்ஃபீல்டு நிறுவனம், மூடுவிழா கண்டதன் எதிரொலியாக, 1980-களின் முதல் இப்போது வரை, இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு, புல்லட் 350 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1994-ல், கனரக வாகனங்களைத் தயாரிக்கும் Eicher நிறுவனத்துடன் சேர்ந்த பிறகு, ராயல் என்ஃபீல்டு என இந்நிறுவனம் பெயர் மாற்றம் கண்டது. புல்லட் 350 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கிளாஸிக் 350 பைக், இந்நிறுவனத்தின் தலை எழுத்தையே மாற்றி எழுதியது வரலாறு! 
 

யெஸ்டி ரோடு கிங்

கர்நாடகாவில் இருந்த ஐடியல் ஜாவா எனும் நிறுவனம், யெஸ்டி ரோடு கிங் பைக்குகளைத் தயாரித்தது. 1980-களில் பிரபலமாக இருந்த இந்த பைக்கில், 250சிசி, 2 ஸ்ட்ரோக், ஏர்-கூல்டு இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்டிருந்தது. இது சிங்கிள் சிலிண்டர் இன்ஜினாக இருந்தாலும், இரட்டை எக்ஸாஸ்ட் பைப்களைக் கொண்டிருந்தது. இது வெளிப்படுத்திய சத்தம், பைக் காதலர்களால் காலங்களைக் கடந்தாலும் மறக்க முடியாத ஒன்று.
 
 
 
 
மேலும் யெஸ்டி ரோடு கிங் பைக், மக்களின் மனதை மட்டுமல்லாது, இந்தியாவில் நடைபெற்ற பலவிதமான ராலி மற்றும் ரேஸ்களையும் வென்றது. 1978 முதல் 1996 வரை தயாரிப்பில் இருந்த இந்த பைக், யமஹா - கவாஸாகி - சுஸூகி ஆகிய ஜப்பானிய நிறுவனங்களில் வரவால், விற்பனையில் தேக்க நிலையைச் சந்தித்தது. தற்போது ஜாவா பைக்குகளைத் தயாரிப்பதற்கான உரிமத்தைக் கைப்பற்றி இருக்கும் மஹிந்திரா, விரைவில் புதிய தயாரிப்புகளைக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

யமஹா RD350

இந்தியாவில் பல பைக் ஆர்வலர்களை உருவாக்கிய பெருமை, இந்த பைக்கையே சேரும். எஸ்கார்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்த இந்த பைக்கின் பெயரில் இருக்கும் RD-க்கு, Race Developed என அதன் ரசிகர்கள் மார்தட்டினாலும், உண்மையான விரிவாக்கம் RajDoot 350 என்பதுதான் மக்களே! 1983 முதல் 1989 வரையிலான 6 ஆண்டுகள் மட்டுமே இந்த பைக் தயாரிக்கப்பட்டது.
 
 
 
 
ஆனால் இந்திய பைக் சந்தையில், சிங்கிள் சிலிண்டர் பைக்குகள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில், இந்த 2 சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக், இந்தியாவில் ஏற்படுத்திய அதிர்வலைகள் மிகப் பெரிது. RajDoot 350 பைக்கில், 347சிசி, 2 ஸ்ட்ரோக், ஏர்-கூல்டு பேரலல் ட்வின் இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்டிருந்தது. இது வெளிப்படுத்திய சத்தமும், அதிரடியான பெர்ஃபாமென்ஸும், காலங்களைக் கடந்து பைக் ஆர்வலர்களின் மனதை ஆட்கொண்டு இருப்பதே, இதற்குச் சாட்சி.

 
யமஹா RX100 

1985 முதல் 2006 வரை தயாரிக்கப்பட்ட RX100 பைக்கில் பொருத்தப்பட்டிருந்த 98சிசி, 2 ஸ்ட்ரோக், ஏர்-கூல்டு இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்புதான், இந்த பைக்கின் ஸ்டார் அட்ராக்‌ஷன்! குறைவான எடை - அதிக பவர் என்ற அசத்தலான காம்பினேஷனைக் கொண்டிருந்த இந்த பைக், அற்புதமான ஹேண்ட்லிங்கும் - தெறி பெர்ஃபாமென்ஸையும் கொண்டிருந்தது. இப்படி மக்கள் மத்தியில் அசைக்க முடியாத புகழைப் பெற்றிருந்த RX100 பைக்,
 
 
 
 
இந்தியாவில் விதிக்கப்பட்ட மாசு கட்டுப்பாடு விதிகளின் காரணமாக, இதன் உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழலுக்கு யமஹா தள்ளப்பட்டது. அதாவது 2005-ல் பயன்பாட்டுக்கு வந்த BS-II விதிகளின் எதிரொலியாக, 100சிசிக்கும் அதிகமான 2 ஸ்ட்ரோக் பைக்குகளைத் தயாரிக்கக் கூடாது என, 2 ஸ்ட்ரோக் பைக்குகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒன்று கூடி முடிவெடுத்தனர். எனவே ஒருகாலத்தில் பைக் விற்பனையில் உச்சத்தில் இருந்த இந்த நிறுவனம், தற்போது வரை அந்த சரிவில் இருந்து மீள முடியவில்லை என்பதே நிதர்சனம்.  
 
- ராகுல் சிவகுரு.