புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் சீரிஸ் பைக்கில் என்ன ஸ்பெஷல்?
Posted Date : 19:09 (11/09/2017)Last updated : 19:09 (11/09/2017)


க்ளாஸிக் 350 & க்ளாஸிக் 500... 2008-ல் அறிமுகமான இந்த பைக்குகள்தான், சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றியது. தற்போதைய சூழ்நிலையில், 1.51 லட்சத்துக்குக் (க்ளாஸிக் 350 - சென்னை ஆன் ரோடு விலை) மற்றும் 1.96 லட்சத்துக்கும் (க்ளாஸிக் 500 - சென்னை ஆன் ரோடு விலை) கிடைக்கக்கூடிய இந்த பைக்குகள்,

மாதத்துக்குச் சராசரியாக 45 ஆயிரம் பைக்குகள் என்ற அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு இந்த பைக்கின் Retro பாணி வடிவமைப்பே பிரதானமான காரணம். தவிர க்ளாஸிக் பைக்குகளின் தனித்துவமான எக்ஸாஸ்ட் சத்தமும் பலரை வசிகரித்திருக்கிறது. இப்படி மக்களின் அதிரடியான வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த பைக்குகளில், தற்போது 240மிமீ பின்பக்க டிஸ்க் பிரேக்கையும், புதிய கலர் ஆப்ஷனையும் சேர்த்துள்ளது ராயல் என்ஃபீல்டு.

 

 

பைக்கின் பின்பக்கத்தில் புதிதாக டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளதால், ஸ்விங் ஆர்மும் (Box-Section) மாற்றம் கண்டிருக்கிறது. அப்பாடா, ஒருவழியாக டிஸ்க் பிரேக் வந்துவிட்டது என ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இது 2012-ல் வெளிவந்த தண்டர்பேர்டு 350 மற்றும் தண்டர்பேர்டு 500 பைக்கில் இருந்த அதே செட்-அப்தான்! ஆக தண்டர்பேர்டு பைக்கிலிருந்து, க்ளாஸிக் பைக்கிற்கு பின்பக்க 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் Box-Section ஸ்விங் ஆர்ம் இடம்பெயர்வதற்கு, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு 5 வருடகாலம் தேவைப்பட்டிருக்கிறது.

கலர் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, க்ளாஸிக் 350 பைக்கில் Gunmetal Grey-வும், க்ளாஸிக் 500 பைக்கில் Stealth Black-கும் புதிதாக இடம்பெற்றுள்ளன. Gunmetal Grey பைக்கில், ஹெட்லைட் - வீல் -  இன்ஜின் - எக்ஸாஸ்ட் பைப் ஆகியவை க்ரோம் ஃப்னிஷில் மின்னுகிறது. கூடவே Dark Tan நிறத்தில் சீட் கவரும் இருக்கிறது. இதுவே Stealth Black பைக் என்றால், முன்னே சொன்ன பாகங்கள் அனைத்தும் கறுப்பு நிற மேட் ஃப்னிஷில் அசத்தலாகக் காட்சியளிக்கின்றன.

 

 

ஆனால் இங்கே வழக்கமான கறுப்பு நிற சீட் கவரே இருக்கிறது. இந்த மாற்றங்களுக்காக, பைக்கின் விலையை ஒரேடியாக 9,000 ரூபாய் ஏற்றிவிட்டது ராயல் என்ஃபீல்டு! எனவே புதிய விலைகள் (சென்னை ஆன் ரோடு), 1.60 லட்சம் (க்ளாஸிக் 350) மற்றும் 2.05 லட்சம் (க்ளாஸிக் 500) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய கலர் ஆப்ஷன்களின் அதிகாரப்பூர்வமான புக்கிங், செப்டம்பர் 18,2017 முதலாகத் துவங்குகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வந்த BS-IV மாசு மற்றும் AHO விதிகளுக்கு ஏற்ப தனது தயாரிப்புகளை மேம்படுத்திய ராயல் என்ஃபீல்டு, பிரத்யேகமான புதிய Redditch கலர்களில் க்ளாஸிக் 350 பைக்குகளைக் களமிறக்கியது அறிந்ததே. ஆனால் 9 ஆண்டுகளாக விற்பனை செய்யப்படும் இந்த பைக்கில், கலர் ஆப்ஷன்களைத் தாண்டி, தொழில்நுட்ப ரீதியில் எந்த மாற்றமும் செய்யப்படாதது, கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

 

 

எனவே இவற்றில் இடம்பெற்றுள்ள 346சிசி (கார்புரேட்டர் - 19.8bhp பவர் & 2.8kgm டார்க்) மற்றும் 500சிசி (ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - 27.2bhp பவர் & 4.1kgm டார்க்) இன்ஜின்கள் வெளிப்படுத்தும் பெர்ஃபாமென்ஸில் எந்த முன்னேற்றமும் இல்லை. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாக, 125சிசிக்கும் அதிகமான பைக்குகளில் ஏபிஎஸ் கட்டாயமாக்கப்படுவதால், அதற்கேற்ப கொஞ்சம் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு,

தான் அதிகளவில் விற்பனை செய்யக்கூடிய க்ளாஸிக் சீரிஸ் பைக்குகளில், பின்பக்க 240மிமீ டிஸ்க் பிரேக்கைச் சேர்த்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்நிறுவனத்திடம் இருந்து, ஹிமாலயன் பைக்கின் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் பொருத்தப்பட்ட மாடல், ஒருவழியாக விற்பனைக்கு வந்துவிட்டது. இவர்களின் புதிய 750சிசி பைக், இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. ஆனால் தற்போது மோ.வி முன்பே சொன்னது போல, இத்தாலிய பைக் நிறுவனமான டுகாட்டியை வாங்கும் முடிவில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு.   

 

- ராகுல் சிவகுரு.