''சீட் பெல்ட் உயிரைக் காப்பாற்றும்'' - மாருதி சுஸூகியின் அறிக்கை!
Posted Date : 19:13 (12/09/2017)
Last Updated : 19:29 (12/09/2017)

 

C.V. ராமன், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு தலைவர், மாருதி சுஸூகி இந்தியா.

"இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை, மிகப்பெரும் மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து, புதிய வாகனப் பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. எனவே இந்தியாவில் இருக்கும் கார் உற்பத்தியாளர்கள் அனைவரும், தங்களது தயாரிப்புகளை இந்த கடுமையான விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில், வேகமாக ‘அப்டேட்’ செய்து வருகின்றார்கள். உலகின் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்து, இந்தப் புதிய விதிமுறைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக வடிவமைத்திருக்கிறது, இந்திய சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம்.  

இதில் முக்கிய அம்சமாக, இந்தப் புதிய விதிமுறைகள் காரில் இருக்கும் பயணிகளை மட்டுமல்லாது, பாதசாரிகள் மீது வாகனம் மோதும் போது ஏற்படும் காயங்களை குறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏர்பேக், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவற்றை மேம்படுத்த, கார் உற்பத்தியாளர்கள் நிறைய முதலீடு செய்கிறார்கள். ஆனால், அது மட்டுமே போதாது. அதே சமயம், இந்த கூடுதல் பாகங்கள் வாகனத்தின் எடை, மாசு வெளியிடு, பெர்ஃபாமென்ஸ் மற்றும் சொகுசு போன்றவற்றை பாதிக்காத வகையில், புதிய கண்டுபிடிப்புகளை நிறுவனங்கள் உருவாக்குகின்றன.

இந்தப் புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்காக, தற்போது கார் நிறுவனங்கள் அதிக அளவு ஆராய்ச்சிகளில் முதலீடு செய்கின்றன. உதாரணத்துக்கு மாருதி சுஸுகியில், நாங்கள் ஒவ்வொரு மாடலிலும் 35 முதல் 40 கார்களை, ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள எங்களது Advanced Research & Development மையத்தில், கிராஷ் டெஸ்ட் செய்த பிறகே, அதை நாங்கள் புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்றது எனத் திருப்தி கொள்வோம்.
 
 
 
 
இந்த முயற்சி மற்றும் முதலீடு அனைத்தும், சாலை விபத்தினால் ஏற்படும் காயங்கள் மற்றும் உயிர் சேதத்தைக் குறைப்பதற்காகவே செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 1.5 லட்சம் மக்கள், இந்தியச் சாலைகளில் விபத்தினால் இறக்கின்றனர். இதை 2020-ல் பாதியாகக் குறைக்கும் சவாலை, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்துறை அமைச்சரான நிதின் கட்கரி ஏற்றிருக்கிறார். எனவே தேசத்தின் இலக்கிற்குப் பங்களிப்பதன் மூலம், ஒரு ஆட்டோமொபைல் இன்ஜினியராக எங்களுக்கு மன நிறைவு கிடைக்கிறது.

இருப்பினும் வாகனம் ஓட்டும்பொழுது, அடிப்படை விஷயமான சீட் பெல்ட் அணியப் பழகவில்லையெனில், இந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகும். ஒரு காரில் எவ்வளவு பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்துகிறோமோ, அந்தளவுக்கு அதிக முக்கியத்துவத்தை சீட் பெல்ட் பெறுகிறது. இது கேட்பதற்கு விசித்திரமாகத் தோன்றினாலும், உண்மை நிலவரம் இதுதான். உதாரணத்துக்கு, ஏர் பேக் உள்ள ஒரு வாகனத்தில் விபத்து ஏற்படும்போது, அதில் இருக்கும் பயணிகள் சீட் பெல்ட் அணியாவிட்டால், அதிகளவு சேதத்தை பயணிகள் எதிர்கொள்ளும் சாத்தியம் உள்ளது.

உலக சுகாதார நிறுவனம், கடந்த 2015-ல் வெளியிட்ட அறிக்கையின்படி, ஓட்டுநர் மற்றும் முன்பக்க பயணி உயிரிழக்கும் அபாயத்தை, சீட் பெல்ட் 45 முதல் 50 சதவிகிதமும், பின்பக்க பயணிகளுக்கு 25 சதவிகிதம் வரை குறைப்பதாக தெரிவித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் இந்த சட்டங்கள், வெறும் எட்டளவில் இருப்பதுடன், அவை செயல்படாமல் இருப்பதை, விபத்து விபரங்கள் உறுதி செய்கின்றன. எனவே இந்நிலையை, கடுமையான விதிமுறைகள் மூலம் மாற்றியமைக்க முடியும். 
 

 
 
இந்த ஆய்வை, எங்களது Research & Development-ல் கிடைத்த அனுபவமும் உறுதிப்படுத்துகின்றன. நாங்கள் ஆய்வகத்தில் செய்யும் கிராஷ் டெஸ்ட் பரிசோதனைகளில், ஸ்டீல் மற்றும் ரப்பரால் ஆன டம்மிகளை, மனித அசைவுகளைத் தூண்டும் வகையில் இருக்கும் மேம்படுத்தபட்ட சென்சார்களை, அதன் மீது பொருத்தி, விபத்தால் ஏற்படும் சேதத்தைக் கணக்கிடுகிறோம். ஆண், பெண், குழந்தை என அளவுக்கு ஏற்ப, விதவிதமான டம்மிகளை வைத்துள்ளோம். ''சீட் பெல்ட் அணிந்த டம்மிகளை விட, சீட் பெல்ட் அணியாத டம்மிகளே அதிக சேதத்திற்கு உள்ளாகிறது'' என எங்களது சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சீட் பெல்ட் பயன்படுத்தும் முறை, ஏமாற்றமும் அதிர்ச்சி தரக்கூடியதாகவும் உள்ளது. ஏனெனில் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனும் சட்டம், அநேகமான இடங்களில் இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. இது அமலுக்கு இருக்கக்கூடிய சில இடங்களிலும், முன்பக்க பயணிகளுடன் அவை நின்றுவிட்டன. காரின் பின்பக்கத்தில் சீட் பெல்ட் கொடுத்திருப்பினும், யாரும் அதை பயன்படுத்தாதது விநோதமாக இருக்கிறது. 
 
 
 

நான் இதை, எனக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகவே கருதிகிறேன். நம் நாட்டில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை என்றாலும், நாமாகவே முன்வந்து சீட் பெல்ட் அணிந்தால், விபத்தின் போது குறிப்பிடத்தக்க அளவுக்கு உயிரிழப்புகளை நம்மால் குறைக்க முடியும். என்னதான் கார்களில் புதிதாகப் பலவிதமான பாதுகாப்பு அம்சங்கள் வந்தாலும், நமக்கு நெருக்கமானவர்கள் ஒவ்வொரு முறை சீட் பெல்ட் அணியும் போதுதான், அவை தரும் பாதுகாப்பை நம்மால் உணர முடியும்."

 தொகுப்பு:  விநாயக் ராம் (மாணவப் பத்திரிகையாளர்)
 
 
TAGS :   SEAT BELT, ABS, AIRBAGS, SAFETY, PEDESTRIAN, C.V.RAMAN, R&D, MARUTI SUZUKI, INDIA, HARYANA.