செப்டம்பர் 21, 2017-ல் அறிமுகம் - டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி!
Posted Date : 17:55 (14/09/2017)
Last Updated : 18:03 (14/09/2017)


மாருதி சுஸூகியின் விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு நிறுவனத்தின் எக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட், மஹிந்திராவின் TUV 3OO போன்ற காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, தோராயமாக 8 - 12 லட்ச ரூபாயில், நெக்ஸான் எனும் காம்பேக்ட் எஸ்யூவியைக் களமிறக்க உள்ளது டாடா மோட்டார்ஸ். வருகின்ற செப்டம்பர் 21, 2017 அன்று அறிமுகமாக உள்ள இந்த எஸ்யூவியின் புக்கிங், செப்டம்பர் 11, 2017 முதல் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.
 
 
ஆனால் சில டாடா டீலர்கள், புக்கிங்கை ஏற்கனவே துவக்கிவிட்டனர். எனவே 4 வேரியன்ட்கள் (XE, XM, XT, XZ+) மற்றும் ஐந்து கலர்களில் (Moroccan Blue, Vermont Red, Seattle Silver, Glasgow Grey, Calgary White) பிடித்தமானதை, டாடாவின் டீலர்கள் அல்லது டாடாவின் வலைதளத்திலோ, 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி புக் செய்யலாம்.

 
தனது Impact டிசைன் கோட்பாடுகளின்படி, நெக்ஸானை ஸ்போர்ட்ஸ் கூபே போல வடிவமைத்திருக்கிறது டாடா. காரில் இடம்பெற்றுள்ள டுயல் டோன் ஃப்னிஷ் மற்றும் 16 இன்ச் அலாய் வீல்கள், இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது. அகலமான க்ரில்லின் இருபுறமும், LED DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட் அழகாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. Ivory White Belt-Line உடனான காரின் பக்கவாட்டுப் பகுதி, படு அசத்தலாகக் காட்சியளிக்கிறது.
 
 
 
 
முன்பக்கத்தைப் போலவே, LED டெயில் லைட்களை, X வடிவ செராமிக் பட்டை ஒன்றுசேர்க்கிறது. உயரமாக இருக்கும் பின்பக்க பம்பரில், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. எனவே கார் பார்ப்பதற்கு ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அதனைப் பார்க் செய்வது ஈஸிதான். 

 
காருக்குள்ளே நுழைந்தால், 3 அடுக்குகளால் ஆன டேஷ்போர்டு நம்மை வரவேற்கிறது. அதன் மேல்பகுதியில் இடம்பெற்றுள்ள 6.5 இன்ச் Harman இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில், ஆண்ட்ராய்ட் ஆட்டோ இருக்கிறது. இதனுடன், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டமும் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட், பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள்
 
 
 
 
மற்றும் 60:40 ஸ்ப்ளிட் பின்பக்க இருக்கை ஆகியவற்றின் குஷனிங் மற்றும் இடவசதி, மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 31 ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களைக் கொண்டிருக்கும் நெக்ஸானின் கேபின், ஜெர்மானிய லக்ஸூரி கார்களில் இருப்பதுபோன்ற உணர்வைத் தருகிறது. 

 
நெக்ஸானில் இருக்கும் புதிய 1.2 லிட்டர் Revotron டர்போ பெட்ரோல் இன்ஜின், 110bhp பவர் மற்றும் 17kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதுவே புதிய 1.5 லிட்டர் Revotorq டீசல் இன்ஜின் என்றால், அது 110bhp பவர் மற்றும் 26kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. டிரைவிங் மோடுகளைக் (Eco, City, Sport) கொண்டிருக்கும் இந்த இரண்டு இன்ஜின்களும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
 
 
 
டியாகோவைப் போலவே, நெக்ஸானிலும் AMT கியர்பாக்ஸை பின்னாளில் அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது டாடா. 2 காற்றுப்பைகள், ABS, EBD, Pretensioner & Load Limiter உடனான சீட் பெல்ட், இன்ஜின் Immobilizer, ISOFIX போன்ற பாதுகாப்பு வசதிகள், அனைத்து வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டிருப்பது ப்ளஸ். 

 
நெக்ஸானின் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் மற்றும் Dual Path சஸ்பென்ஷனை, சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் விதமாக, டாடா டியூன் செய்திருக்கிறது. மேலும் காரின் உறுதியான கட்டுமானமும், விபத்து நேரத்தின்போது ஏற்படும் சேதத்தை உள்வாங்கிக் கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
எனவே தனது ஒட்டுமொத்த வித்தையையும் நெக்ஸானில் காட்டியிருக்கும் டாடா, அசத்தலான விலையில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உற்பத்தி பணிகளும் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.  
 
- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   TATA MOTORS, NEXON, INDIA, COMPACT SUV, MAHINDRA, TUV 3OO, MARUTI SUZUKI, VITARA BREZZA, FOR, ECOSPORT, PETROL, DIESEL, MT, AT, TRENDING, LAUNCH, CROSSOVER.