யுஎம் நிறுவனத்தின் இரு புதிய க்ரூஸர் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்?
Posted Date : 20:41 (21/09/2017)
Last Updated : 21:31 (21/09/2017)

 

சென்ற வருடம், இதே மாதத்தில் அறிமுகமான ரெனிகெய்ட் ஸ்போர்ட் S, ரெனிகெய்ட் கமாண்டோ ஆகிய க்ரூஸர் பைக்குகளைத் தொடர்ந்து, இரு Gloss நிறங்களில் க்ளாசிக் (Classic - 1.94 லட்சம், சென்னை எக்ஸ் ஷோரூம் விலை) மற்றும் ஒரே மேட் கலரில் மொஹவ் (Mojave - 1.86 லட்சம், சென்னை எக்ஸ் ஷோரூம் விலை) எனும் இரு புதிய க்ரூஸர் பைக்குகளை, அதே ரெனிகெய்ட் சீரிஸில் அறிமுகப்படுத்தியுள்ளது யுஎம் நிறுவனம். 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட இந்த இரு பைக்குகளிலும் இருப்பது,
 
 
 
 
தற்போது விற்பனையில் இருக்கும் இரு ரெனிகாடே சீரிஸ் பைக்குகளில் இருக்கும் அதே 4 வால்வு, 279.5சிசி, லிக்விட் கூல்ட் இன்ஜின்தான்! எனவே ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டிருக்கும் இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், வெளிப்படுத்தக்கூடிய 25.15bhp பவர் மற்றும் 2.3kgm டார்க் எனப் பெர்ஃபாமென்ஸிலும் வித்தியாசம் இல்லை. 179 கிலோ எடை, 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 18 லிட்டர் பெட்ரோல் டேங்க், அனலாக் - டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் என டெக்னிக்கல் விபரங்களிலும் மாற்றங்கள் இல்லை. இந்த இரு பைக்குகளின் புக்கிங், ஏற்கனவே அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது. 
 

 
 
பெயருக்கு ஏற்றபடியே, க்ளாசிக் பைக் போன்ற டிசைனைக் கொண்டிருக்கிறது ரெனிகெய்ட் க்ளாசிக். பைக் முழுக்க வியாபித்திருக்கும் க்ரோம் ஃப்னிஷ் (ஸ்போக் வீல், ரியர் வியூ மிரர், ஹெட்லைட், எக்ஸாஸ்ட் பைப், இன்ஜின் கேஸ், இண்டிகேட்டர், பெடல், க்ராஷ் கார்ட்) இதனை உறுதிபடுத்தி விடுகிறது. இதுவே அமெரிக்காவின் பெரிய பாலைவனமான Mojave-ன் பெயரைக் கொண்டிருக்கும் ரெனிகெய்ட் மொஹவ் என்றால், ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500 Desert Storm பைக்கை நினைவுபடுத்தும் வகையிலான கலரில் மேட் ஃப்னிஷைக் கொண்டிருக்கிறது. க்ளாசிக் பைக்கில் க்ரோம் ஃப்னிஷில் இருக்கும் பாகங்கள் அனைத்தும்,
 
 
 
 
இங்கே மேட் ஃப்னிஷில் இருக்கின்றன. மற்றபடி இரண்டு பைக்குகளுக்கும் பொதுவாக, பொருட்களை வைத்துக் கொள்வதற்கான Saddle Bag - பெட்ரோல் டேங்க் மீது Zip Pouch - விபத்து நேரத்தில் கால்களைப் பாதுகாக்கக்கூடிய Leg Guard - ஸ்பெஷலான சீட் கவர் ஆகியவை இருக்கின்றன. மேலும் ரெனிகெய்ட் பைக்குகளுக்கே பொதுவான அம்சங்களான பெட்ரோல் டேங்க்கின் மீது இருக்கும் USB சார்ஜிங் பாயின்ட், பின்பக்க சீட்டில் அமர்பவருக்கான அலாய் Back Rest, காற்று முகத்தில் அறைவதைத் தடுக்கக்கூடிய பெரிய Poly Carbonate விண்ட் ஷீல்ட் ஆகியவை இங்கும் தொடர்கின்றன. 
 

 
 
இப்படி டூரிங் பைக்குகளாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இவற்றை விற்பனை செய்ய, இந்தியா முழுக்க 57 டீலர்களை வைத்திருக்கிறது யுஎம் நிறுவனம். மேலும் 2 வருட வாரன்ட்டி, ஒரு வருடத்துக்கு இலவசமாகக் கிடைக்கக்கூடிய Road Side Assistance ஆகியவை, ஒவ்வொரு பைக்குக்கும் வழங்கப்படுகிறது. உத்தரகாண்ட்டில் இருக்கும் காஷிப்பூரில், இந்நிறுவனம் தனது பைக்குகளை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலையைக் கொண்டிருக்கிறது. 75% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்கள் பைக்கில் இடம்பெற்றுள்ளதால், அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில் பைக் கிடைக்கிறது எனலாம்.
 
 
 
 
இந்தியாவில் வர்த்தகத்தைத் தொடங்கி, ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பைக்குகளை விற்பனை செய்துள்ள யுஎம் நிறுவனம், விரைவில் ஒரு அட்வென்ச்சர் பைக்கை வெளியிட உள்ளது. மேலும் இந்தியா முழுக்க டீலர் நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணிகளில் இறங்கியுள்ள இந்நிறுவனம், தமிழகத்தில் சென்னை, பாண்டிச்சேரி, கோயம்புத்தூரைத் தொடர்ந்து, தீபாவளி நேரத்தில் மதுரையில் புதிதாக டீலரை நிறுவ உள்ளது. 20 முதல் 35 வயதில் இருப்பவர்கள் தமது வாடிக்கையாளர்களாக இருப்பதுடன், கமாண்டோ பைக்குக்கு அதிரடியான வரவேற்பு கிடைத்ததாகவும், யுஎம் நிறுவனம் கூறியுள்ளது.  
 
 
- ராகுல் சிவகுரு.
 
 

 

TAGS :   UM, AMERICA, INDIA, RENEGADE, CLASSIC, MOJAVE, CRUISER, TOURING BIKIES, ROYAL ENFIELD, DESERT STORM, 300CC, 500CC, FI, LEATHER, CHROME, MATT FINISH, UCE,LC.