இந்தியாவின் முதல் BS-V டிரக் இதோ... பாரத் பென்ஸ் அறிமுகம்!
Posted Date : 17:54 (25/09/2017)
Last Updated : 18:02 (25/09/2017)

 

 

 

சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்னால், இதே மாதத்தில்தான் இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் தொடங்கியது பாரத் பென்ஸ். பணமதிப்பிழப்பு, BS-3, ஜிஎஸ்டி போன்ற பல்வேறு காரணங்களால், கமர்ஷியல் வாகனச் சந்தை கொஞ்சம் சரிவில் இருந்தாலும், இந்த 5 ஆண்டுகளில் 55 ஆயிரத்துக்கும் அதிகமான டிரக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து, இந்நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது.

BS-IV டிரக்குகளைக் களமிறக்கிய பிறகு, 16 - 49 டன் டிரக் பிரிவில் பாரத் பென்ஸின் சந்தை மதிப்பு, இரண்டு இலக்கத்தைத் தொட்டிருப்பதே, விற்பனை ஏறுமுகத்தில் இருப்பதற்கான சிறந்த உதாரணம். எனவே டிமாண்ட் அதிகரித்துள்ளதால், சென்னை ஓரகடத்தில் இருக்கும் தனது டிரக் தயாரிக்கும் தொழிற்சாலையில், உற்பத்தியை அதிகரிக்க உள்ளது பாரத் பென்ஸ்.

 

 

உள்நாட்டு விற்பனையுடன், 2013 முதலாக இந்நிறுவனம், டிரக்குகளை சென்னையில் இருந்து உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்துவருவது கவனிக்கத்தக்கது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான டிரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, 40 புதியசந்தைகளுக்கும் டிரக்குகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறது பாரத் பென்ஸ். இந்தியாவில் தனது 5-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக,

BS-V (Euro-V) மாசு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருக்கும் நகர்ப்புற பயணங்களுக்கான Medium Duty வகை (9 - 12 டன்) டிரக்குகளை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவை தற்போது புழக்கத்தில் இருக்கும் BS-IV டிரக்குகளுடன் ஒப்பிடும்போது, 40% குறைவான NOx மாசை வெளியிடுவதாக பாரத் பென்ஸ் கூறியுள்ளது. இதற்கு BS-IV டிரக்கின் Selective Catalytic Reduction (SCR) சிஸ்டத்தை, BS-V விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.

 

 

 

மேலும் BS-IV டிரக்கின் அதே விலையில் BS-V டிரக்கை வெளியிட்டு அசத்தியுள்ளது இந்நிறுவனம். இந்தப் புதிய BS-V டிரக்குகள், BS-IV எரிபொருளில் எந்த பிரச்னையும் இன்றி இயங்கும் என்பதுடன், அதே மைலேஜையும் தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசடைவதில் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கும் Nitrogen oxide (NOx), வாகனங்கள் உமிழும் புகையில் அதிகளவில் இருக்கிறது. இது சுற்றச்சூழலை பாதிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதுடன்,

மனிதர்களுக்குச் சுவாசப் பிரச்னைகளையும் தரவல்லது. 2020-ல் BS-VI மாசு விதிகள் மற்றும் 2030-க்குள் எலெக்ட்ரிக் வாகனங்கள் நிறைந்த நாடாக இந்தியாவை மாற்றவும் காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாட்டின் முதல் BS-V டிரக்கினால், சுற்றுச்சூழல் மாசடைவதைக் குறைக்கும் முயற்சியை எடுத்திருக்கும் பாரத் பென்ஸ் நிறுவனம், நிச்சயம் பாராட்டுக்குரியதுதான்.

 

- ராகுல் சிவகுரு. 

 

TAGS :   BHARAT BENZ, BS-V, BS-IV, MEDIUM DUTY TRUCKS, SCR, NOX, EMISSION, DIESEL, ELECTRIC TRUCK, NEW YORK, DAIMLER, GERMANY, SALES, PROFIT, 9-16 TON, 55000 UNIT