இந்தியாவில் நடைபெறும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளின் 'மெக்கா' என வர்ணிக்கப்படும் 'Raid DeHimalaya'  ராலி போட்டியின் 19-வது எடிஷன், வரும் அக்டோபர் 7,2017 அன்று ஹிமாச்சல் பிரதேசத்தின் மணாலியில் துவங்கி, அக்டோபர் 14,2017 அன்று காஷ்மீர் மாநிலத்தின்  'லே' நகரில் நிறைவுபெறுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், சுமார் 2,000 கி.மீ தூரம் (மணாலி - காஸா - சார்ச்சு- கார்கில் - லே - பென்சி லா) பயணிக்க வேண்டும்.

அழகும், ஆபத்தும் ஒருசேர சூழ்ந்திருக்கும் இடங்களில் ஒன்றான  இமயமலைப் பிரதேசத்தில்தான், பெரும்பாலான நேரம் பயணிக்க நேரிடும் என்பது, கேட்பதற்கே கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். மனிதன் மற்றும் காரின் உச்சகட்டத் திறனைப் பரிசோதிக்கும் களமாக இருக்கும் 'Raid DeHimalaya'-வில்,  காரும் மனிதனும் கூட்டணி அமைத்துச் செயல்படுவது அவசியம்.

 


 
 
மோட்டார் ஸ்போர்ட்ஸ் ராலி போட்டிகளில் அசத்தக்கூடிய சுரேஷ் ராணா, சந்தீப் சர்மா, சாம்ராட் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய மாருதி சுஸூகியின் மோட்டார் ஸ்போர்ட் அணி, இந்த ஆஃப் ரோடு ராலிப் போட்டியில் களமிறங்க உள்ளது.
 
ஜிப்ஸி, விட்டாரா பிரெஸ்ஸா, S-க்ராஸ், இக்னீஸ், கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களில், 'Raid DeHimalaya'-வில் மாருதி சுஸூகியின் மோட்டார் ஸ்போர்ட் அணி கலந்துகொள்கிறது. சாலைப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட இந்த கார்கள், கரடுமுரடான சாலைகளிலும் - கடினமான தட்பவெப்ப நிலையிலும் எந்தப் பிரச்னையின்றி இயங்கும் என மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது.
 

 
 
இதுவரை 18 முறை 'Raid DeHimalaya' ராலிப் போட்டி நடைபெற்றுள்ள நிலையில், அதில் 10 முறை வெற்றிக் கோப்பையை முத்தமிட்ட சுரேஷ் ராணா, மணாலியைச் சேர்ந்தவர். இவரிடம் போட்டியைப் பற்றிக் கேட்ட போது, '' மாருதி சுஸூகியின் மோட்டார் ஸ்போர்ட் அணியில் இருப்பது, எனது வாழ்வின் பெருமைமிகு தருணங்களில் ஒன்று. என்னைப் பொறுத்தவரை 'Raid DeHimalaya' என்பது, வெறும் ராலிப் போட்டியல்ல. இதில் கலந்துகொள்ளும் ஒருவர், தனது காருடன் கொண்டிருக்கும் நல்லுறவே பொருத்தே வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.
 
 
 
 
ஏனெனில், போகும் பாதையில், எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும், உங்களுக்கோ உங்களது காருக்கோ, எதுவும் நடக்கலாம். எனவே, உங்கள் காரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பதுடன், உங்களின் மனதுக்கு உடலுக்கு நடக்கும் போராட்டத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது. மேலும், இந்த ராலிப் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பாக, FIA, FMSCI, NCR ஆகியோர் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப, காரையும் உங்களையும் உட்படுத்திக் கொள்வது நல்லது'' எனப் பேசினார்.
 

 - ராகுல் சிவகுரு.