7.08 - 11.19 லட்சத்துக்கு (சென்னை ஆன்-ரோடு விலை), தனது புதிய காம்பேக்ட் எஸ்யூவியான நெக்ஸானை அறிமுகப்படுத்தி விட்டது டாடா மோட்டார்ஸ். 1.2 லிட்டர் பெட்ரோல் / 1.5 லிட்டர் டீசல் என இரு இன்ஜின் ஆப்ஷன்களுடன், மொத்தம் 5 கலர்கள் (Moroccan blue, Vermont red, Seattle silver, Glasgow Grey, Calgary White) மற்றும் 8 வேரியன்ட்களில் கிடைக்கும் இது, மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா - மஹிந்திரா TUV 3OO - ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஆகிய காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாகக் களமிறங்கியுள்ளது.
 
போட்டியாளர்களைவிடச் சுமார் 1-1.5 லட்ச ரூபாய் குறைவான விலையில் வெளிவந்திருக்கும் நெக்ஸானின் ஒவ்வொரு வேரியன்ட்டிலும் (XE, XM, XT, XZ+), என்னென்ன வசதிகள் இருக்கின்றன? கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க வேரியன்ட் எது? போன்ற கேள்விகளுக்கான பதிலை, இந்தக் கட்டுரை கொடுக்கும் என எண்ணுகிறேன். இந்த காரின் புக்கிங், 2 வாரங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாகத் துவங்கிவிட்டது. மக்களின் அமோகமான வரவேற்பினால், நெக்ஸானின் வெயிட்டிங் பீரியட், தற்போது 2 மாதங்களாக இருக்கிறது. 
 

1.2 XE Revotron (பெட்ரோல்) - 7.08 லட்ச ரூபாய் 
1.5 XE Revotorq (டீசல்) - 8.30 லட்ச ரூபாய்
 

இது நெக்ஸானின் ஆரம்ப வேரியன்ட். அசத்தலான ஆரம்ப விலையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்து கார் தயாரிப்பாளர்களும், ஆரம்ப வேரியன்ட்டில் அவ்வளவு வசதிகளைச் சேர்க்க மாட்டார்கள். எனவே இங்கே அலாய் வீல், கூல்டு க்ளோவ் பாக்ஸ், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நான்கு கதவுகளுக்கும் பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் போன்ற ஹை-டெக் வசதிகளை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஆரம்ப வேரியன்ட் முதல் டாப் வேரியன்ட் வரை, 2 காற்றுப்பைகள் - ABS, EBD போன்ற பாதுகாப்பு வசதிகளை, நெக்ஸானில் ஸ்டாண்டர்டாக அளித்திருக்கிறது டாடா.
 
 
 
 
டெயில் லைட்டில் LED வேலைப்பாடு, Reach and Rake அட்ஜஸ்ட் கொண்ட ஸ்டீயரிங், மல்ட்டி டிரைவிங் மோடுகள் (Eco, City, Sport), மடிக்கக்கூடிய பின்பக்க சீட், 195/60 R16 டயர்களின் சிங்கிள் டோன் வீல் கவர், 3 டோன் கேபின் ஆகியவற்றை, இந்த மாடலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாகச் சொல்லலாம். ஆனால் கதவு கைப்பிடிகளும், ரியர் வியூ மிரர்களும் கறுப்பு நிறத்தில் இருக்கிறது. ஆக உங்கள் பட்ஜெட் மிகவும் குறைவு என்றால் மட்டுமே, நெக்ஸானின் ஆரம்ப மாடலைப் பார்க்கவும். 
 

1.2 XM Revotron (பெட்ரோல்) - 7.82 லட்ச ரூபாய் 
1.5 XM Revotorq (டீசல்) - 8.93 லட்ச ரூபாய்
 

நெக்ஸானின் இரண்டாவது வேரியன்ட்டான இது, முந்தைய மாடலைவிட 60 முதல் 70 ஆயிரம் ரூபாய் கூடுதலாக இருக்கிறது. ஆனால் அதற்கு டாடா நியாயம் செய்திருக்கிறது என்றே சொல்லலாம். 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய அசத்தலான Harman ConnectNext சவுண்ட் சிஸ்டம் இருப்பது பெரிய ப்ளஸ். மேலும் இதில் AM/FM, USB, Aux-in, iPod, Bluetooth போன்ற கனெக்ட்டிவிட்டி வசதிகளும் இருக்கின்றன. இதற்கான கன்ட்ரோல்கள், ஸ்டீயரிங் வீலிலும் இடம்பெற்றுள்ளன.
 
 
 
 
இதனுடன் ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர் வியூ மிரர்கள், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், 4 கதவுகளுக்கும் பவர் விண்டோஸ் என ஒருவர் காரில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வசதிகள் அனைத்தும், இந்த வேரியன்ட்டில் இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தவிர, விலை அதிகமான கார்களில் காணப்படும் டூயல் டோன் வீல் கவர், USB Fast Charger, Shark Fin Antenna போன்றவையும், இந்த மாடலில் இருக்கின்றன. எனவே கொடுக்கின்ற காசுக்கு மதிப்புமிக்கக் காராக இருக்கும் நெக்ஸானின் Value For Money வேரியன்ட் இதுதான்!
 

1.2 XT Revotron (பெட்ரோல்) - 8.74 லட்ச ரூபாய் 
1.5 XT Revotorq (டீசல்) - 9.72 லட்ச ரூபாய்
 

''காரில் அனைத்து வசதிகளும் வேண்டும்; ஆனால் விலை அதிகமாக இருக்கக்கூடாது'' என்பவர்களுக்கான வேரியன்ட்தான் இது. எனவே முந்தைய மாடலைவிட 80 முதல் 90 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும் இதில், சில லக்ஸூரியான வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமாக, கதவு கைப்பிடிகளும், ரியர் வியூ மிரர்களும் காரின் நிறத்துக்கு இங்கே மாறியிருக்கின்றன. காரின் வெளிப்புறத்தில் ரூஃப் ரெயில், எலெக்ட்ரிக்கலாக மடிக்ககூடிய ரியர் வியூ மிரர்கள் இருக்கின்றன.
 
 
 
 
இதுவே காரின் உட்புறத்தில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, பின்பக்க இருக்கைக்கான ஏசி வென்ட் மற்றும் Power Outlet, லைட்டுடன் கூடிய கூல்டு க்ளோவ் பாக்ஸ் ஆகியவை உள்ளன. முன்னே குறிப்பிட்டிருக்கும் தொகைக்கு ஏற்ப, அதிக சிறப்பம்சங்கள் காரில் இல்லை என்றாலும், இவை எல்லாம் சேர்ந்து, நெக்ஸானின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தைக் கொஞ்சம் முழுமை ஆக்குகின்றன என்பதால், இது ஒரு குறையாகத் தெரியவில்லை.
 

1.2 XZ+ Revotron (பெட்ரோல்) - 10.04 லட்ச ரூபாய் 
1.5 XZ+ Revotorq (டீசல்) - 11.02 லட்ச ரூபாய்
 

பெயருக்கு ஏற்றபடி, இங்கு எல்லாமே ப்ளஸ்தான்! நெக்ஸானின் டாப் வேரியன்ட்டான இதில், வசதிகளை வாரி இறைத்திருக்கிறது டாடா. DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட், 215/60 R16 அலாய் வீல், முன்பக்க ஆர்ம்ரெஸ்ட், கியர் லீவருக்குப் பக்கத்தில் Sliding Tambour Door பாணியிலான ஸ்டோரேஜ் ஸ்பேஸ், கப் ஹோல்டர் உடனான பின்பக்க ஆர்ம்ரெஸ்ட், பின்பக்க 60:40 ஸ்ப்ளிட் சீட், ஆண்ட்ராய்டு ஆட்டோ - வாய்ஸ் கமாண்ட் - Message Readout & Reply - ரியர் பார்க்கிங் கேமரா உடனான Harman 6.5 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், Day/Night உள்பக்க ரியர் வியூ மிரர், முன்பக்க & பின்பக்க பனி விளக்குகள், Rear Defogger, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் மற்றும் சீட் பெல்ட்கள், ஸ்மார்ட் கீ உடனான புஷ் பட்டன் ஸ்டார்ட் என சிறப்பம்சங்களின் பட்டியல் மிக நீளம்.
 
 
 
 
எனவே முந்தைய மாடலைவிட 1.3 லட்ச ரூபாய் விலை அதிகமாக இருந்தாலும், அதை நியாயப்படுத்தும் விதமாக அடிப்படையான ஆனால் முக்கியமான வசதிகள் அனைத்தும் காரில் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே ''விலை முக்கியமில்லை; Fully Loaded கார்தான் வேண்டும்'' என்பவர்கள், தாராளமாக நெக்ஸானின் டாப் வேரியன்ட்டை லைக் செய்யலாம். இதில் போட்டியாளர்களைப் போலவே, Dual Tone ரூஃப் ஃப்னிஷ் ஆப்ஷனும் உண்டு. அதற்காகக் கூடுதலாக 17 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும்.
 
 
 

''More Car Per Car'' என்ற தனது கோட்பாட்டிற்கு ஏற்ப, அசத்தலான விலையில் நெக்ஸானைக் களமிறக்கி இருக்கிறது டாடா. ஒவ்வொரு வேரியன்ட்டுக்கும் இடையே, விலை மற்றும் வசதிகளில் கச்சிதமான வித்தியாசம் இருக்கிறது. எனவே 4 மீட்டர் நீளத்துக்கு உட்பட்ட காம்பேக்ட் பிரிவில் (ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி, எம்பிவி) கார் வாங்க விரும்பும் அனைவரது பட்ஜெட்டிற்கும், ஒரு நெக்ஸான் வேரியன்ட்டை டாடா அழகாகப் பொசிஷன் செய்திருக்கிறது. எனவே காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் தவிர்க்க முடியாத காராக உருவாகியிருக்கும் நெக்ஸானின் டெலிவரிகள், அடுத்த மாதத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
- ராகுல் சிவகுரு.