எஸ்யூவிகளுக்குப் பெயர் பெற்ற மஹிந்திரா நிறுவனத்தின் முதல் ஹேட்ச்பேக்தான் KUV1OO. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்/இக்னிஸ், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 ஆகிய கார்களுக்குப் போட்டியாக, இது கடந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி / க்ராஸ்ஓவர் போல டிசைன் செய்யப்பட்டிருந்தாலும்,

KUV1OO-யால் இந்தியாவின் போட்டிமிகுந்த கார் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனைச் சீர்செய்யும் விதமாக, இன்று இந்த காரின் பேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கியுள்ளது மஹிந்திரா. 


வெளிப்புறத் தோற்றம்

காரின் பெயரிலேயே (KUV100 NXT) மாற்றத்தை ஆரம்பித்துவிட்டது மஹிந்திரா. மேலும் முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, காரின் டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிகின்றன. வெளிப்புறத்தில் Faux Skid Plate உடனான புதிய முன்பக்க - பின்பக்க பம்பர்கள், காருக்கு எஸ்யூவி போன்ற தோற்றத்தை அளிக்கும்படி கட்டுமஸ்தாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
இதனால் முன்பைவிட KUV1OO-ன் நீளம் 25மிமீ அதிகரித்து, 3700மிமீயாக வளர்ந்திருக்கிறது. மேலும் கூர்ந்து கவனித்தால், கதவுகள் மற்றும் டெயில்கேட்டின் வடிவமைப்பிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. 
 

 
 
Clear Lens ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், க்ரோம் க்ரில் ஆகியவை புதிய லுக்கில் அசத்துகின்றன. ஆனால் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் இல்லையே மஹிந்திரா? க்ராஸ்ஓவர்களில் காணப்படும் பாடி க்ளாடிங், KUV100 NXT-ன் பக்கவாட்டுப் பகுதியை அலங்கரிக்கிறது. புதிய 15 இன்ச் Diamond Cut அலாய் வீல்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கின்றது.
 
எஸ்யூவி போன்ற KUV100 NXT-க்கு, ரூஃப் ரெயில் & பின்பக்க ஸ்பாய்லர் இருப்பது ப்ளஸ். முந்தைய மாடலைப் போலவே, KUV100 NXT காரில் 6 சிங்கிள் டோன் - 3 டூயல் டோன் கலர் ஆப்ஷன்கள் இருக்கிறது.
 

கேபின்

முன்பு 24 வேரியன்ட்களில் (பெட்ரோல்/டீசல்) விற்பனை செய்யப்பட்ட KUV100 NXT, இனி K2, K2+, K4+, K6+, K8 (பெட்ரோல்/டீசல்) எனும் 10 வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த காரை 6 சீட்டராகவே பொசிஷன் செய்திருக்கிறது மஹிந்திரா. ஆனால் 5 சீட்கள்தான் வேண்டும் என்பவர்களுக்கு, Made-To-Order அடிப்படையில் அந்த ஆப்ஷனும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
 
 
 
 
ஆரம்ப வேரியன்ட்களில் க்ரே நிற கேபினும், டாப் வேரியன்ட்களில் கறுப்பு நிற கேபினும் இருக்கின்றன. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, முன்பு டச் ஸ்க்ரீன் இல்லை என்ற குறைபாட்டை, KUV100 NXT காரில் களைந்திருக்கிறது மஹிந்திரா.
 

வசதிகள்

டாப் வேரியன்ட்டில் இருக்கும் புதிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில், MapmyIndia வழங்கும் சாட்டிலைட் நேவிகேஷன் வசதி இருக்கிறது. இதனுடன் புதிய வசதிகளைப் பொறுத்தவரை ரிமோட் Lock/Unlock செய்யக்கூடிய டெயில்கேட், எலெக்ட்ரிக்கலாக மடிக்கக்கூடிய ரியர் வியூ மிரர்கள், ரியர் பார்க்கிங் சென்சார், கியர் இண்டிகேட்டர் - மைலேஜ் - டிரைவிங் மோடுகளைக் காட்டும் MID சிஸ்டம்,
 
 
 
 
டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் திறன், பல்வேறு கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், கூல்டு க்ளோவ் பாக்ஸ், Mood Lightin, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி எனப் பட்டியலில் முன்னேற்றம் தெரிகிறது. 2 காற்றுப்பைகள், ABS, EBD, கார்னர் பிரேக்கிங் கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இன்ஜின் மற்றும் ஓட்டுதல் அனுபவம் 

தற்போதைய மாடலில் இருக்கும் அதே 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்களே, KUV100 NXT காரிலும் தொடர்கின்றன. ஆனால் இவை முன்பைவிட அதிக மைலேஜுக்கும், ஸ்மூத்தான டிரைவிங்கையும் மனதில் வைத்து ரீ-டியூன் செய்யப்பட்டிருக்கின்றன.
 
மேம்படுத்தப்பட்ட இன்ஜின் மவுன்ட் மற்றும் ஏர் ஃபில்டர் போன்றவை, இதற்கான சிறந்த உதாரணம். பெட்ரோல் இன்ஜினுக்கு மைக்ரோ ஹைப்ரிட் சிஸ்டமும், டீசல் இன்ஜினில் Eco - Power டிரைவிங் மோடுகளும் பிரத்யேகமாக வழங்கப்படட்டிருக்கின்றன.
 
 
 
 
இந்த காரின் ஓட்டுதல் அனுபவத்தை முன்னேற்றும் விதமாக, முன்பக்க - பின்பக்க சஸ்பென்ஷனின் Travel Rate அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரவுண்ட் கிளியரன்ஸ் - Approach & Departure Angle ஆகியவையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 
இப்படி KUV100 NXT-ல் கணிசமான மாற்றங்கள் இருந்தாலும், அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில்தான் இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளது மஹிந்திரா. ஆனால் இந்த அறிமுக விலைகள், 3 மாதத்துக்கு மட்டுமே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

KUV100 NXT காரின் அறிமுக டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள்

1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்

K2: ரூ. 4.39 லட்சம்
K2+: ரூ. 4.79 லட்சம்
K4+: ரூ. 5.24 லட்சம்
K6+: ரூ. 6.04 லட்சம்
K8: ரூ. 6.40 லட்சம்
 

 
 
1.2 லிட்டர் டீசல் இன்ஜின்

K2: ரூ. 5.39 லட்சம்
K2+: ரூ. 5.63 லட்சம்
K4+: ரூ. 6.11 லட்சம்
K6+: ரூ. 6.95 லட்சம்
K8: ரூ. 7.33 லட்சம்

- ராகுல் சிவகுரு.