29.99 லட்சத்துக்குக் களமிறங்கியது, ஃபோக்ஸ்வாகன் பஸாத் !
Posted Date : 21:43 (13/10/2017)
Last Updated : 21:51 (13/10/2017)

 

தான் உலகளவில் தயாரித்து விற்பனை செய்யும் லக்ஸூரி செடான் காரான பஸாத்தின் எட்டாம் தலைமுறை மாடலை, 29.99 - 32.99 லட்சத்துக்கு (டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை) அறிமுகப்படுத்தியுள்ளது ஃபோக்ஸ்வாகன். B8 என்ற சங்கேத பெயருக்குச் சொந்தக்காரரான இது, உலக சந்தைகளில் 3 ஆண்டுகளுக்கு முன்பே விற்பனைக்கு வந்துவிட்டது. Comfortline - Highline எனும் இரு வேரியன்ட்களில் கிடைக்கக்கூடிய இந்த காரில், 177bhp பவர் மற்றும் 35kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் TDI டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் செட்-அப் பொருத்தப்பட்டுள்ளது.
 
 
டிகுவான், கோடியாக், சூப்பர்ப், ஆக்டேவியா போன்ற ஃபோக்ஸ்வாகன் குழும கார்கள் தயாரிக்கப்படும் அதே MQB ப்ளாட்ஃபார்மில்தான் பஸாத் லக்ஸூரி செடானும் தயாரிக்கப்படுகிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய பஸாத்தின் அளவுகளில் (4,767மிமீ நீளம் - 1,832மிமீ அகலம் - 1,456மிமீ உயரம் - 2791மிமீ வீல்பேஸ்) குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கின்றன (13 மிமீ குறைவான நீளம் - 12மிமீ கூடுதல் அகலம் - 13மிமீ குறைவான உயரம் - 80மிமீ அதிக வீல்பேஸ்). என்றாலும், முந்தைய மாடலைவிட இது 70 கிலோ எடை குறைவாக இருக்கிறது. ஸ்கோடா சூப்பர்ப், டொயோட்டா கேம்ரி, ஹோண்டா அக்கார்டு ஆகிய லக்ஸூரி செடான்களுடன் போட்டியிடுகிறது பஸாத். 

 
அதற்கேற்ப பனரோமிக் சன்ரூஃப், Hands-Free பார்க்கிங், 3 ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி, எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள், LED DRL உடனான ஹெட்லைட், LED டெயில் லைட், 17 இன்ச் அலாய் வீல்கள் என காரில் இருக்கும் சிறப்பம்சங்களின் பட்டியல் நீள்கிறது. மேலும் பஸாத்தின் பாதுகாப்புக்காக 9 காற்றுப்பைகள், ESC, ABS, HSS, பார்க்கிங் அசிஸ்ட் உடனான ரியர் கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. சிறப்பான தயாரிப்பாக இருந்தாலும், அதிக விலையில் களமிறங்கியதாலேயே, 2014 வரை விற்பனை செய்யப்பட்ட முந்தைய பஸாத் இந்தியாவில் சோபிக்க முடியாமல் போனது.
 
 
இதை மனதில் வைத்து, Oryx White Pearl effect - Deep Black Pearl effect - Black Oak Brown Metallic - Pyrit Silver Metallic - Atlantic Blue Metallic - Mangan Grey Metallic எனும் 6 கலர்களில் கிடைக்கக்கூடிய இந்த லக்ஸூரி செடானை, தனது Aurangabad கார் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்கிறது ஃபோக்ஸ்வாகன். இதே விலையில் கிடைக்ககூடிய தனது ஹைபிரிட் போட்டியாளர்களுக்கான பதிலாக, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட பஸாத்தின் GTE Plug-In Hybrid மாடல் இங்கும் வெளிவரலாம். ஆனால் தற்போது இந்தியாவில் ஹைபிரிட் கார்களுக்கு விதிக்கப்படும் அதிக வரிகளால், இதற்கான சாத்தியங்கள் ரொம்பவே குறைவுதான்! 

 
மேலும் 180bhp பவர் மற்றும் 25kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன், பின்வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் என நம்பலாம். முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, வீல்பேஸ் அதிகரித்திருப்பதால் இடவசதியில் முன்னேற்றம் இருக்கிறது. மற்ற ஃபோக்ஸ்வாகன் கார்களைப் போலவே, உறுதியான கட்டுமானத்துடன் -  தரமான பாகங்களால் கேபின் தயாரிக்கப்பட்டிருக்கிறது. லக்ஸூரி செடான் பொசிஷனிங்குக்கு ஏற்ப, அதிக தொழில்நுட்ப வசதிகள் காரில் இடம்பிடித்துள்ளன.
 
 
தனது ஜப்பானிய போட்டியாளர்களில் இல்லாத டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் வெளிவந்திருக்கும் பஸாத்தில், நம்மூர் சாலைகளுக்கு ஏற்ற சஸ்பென்ஷன் செட்டிங்கை ஃபோக்ஸ்வாகன் செய்திருக்கிறது. எனவே இதில் சிறப்பான ஓட்டுதலுடன், சொகுசான பயணங்களும் கிடைக்கும் எனலாம். ஆடி A3 மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் CLA ஆகிய கார்களுடன் ஒப்பிடும்போது, பஸாத்தின் விலை கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தாலும், அதனை நியாயப்படுத்தி இருக்கிறது ஃபோக்ஸ்வாகன். 

 - ராகுல் சிவகுரு. 
 
TAGS :   VOLKSWAGEN, PASSAT, B8, 8TH GENERATION MODEL, INDIA, GERMANY, SKODA SUPERB, MQB PLATFORM, SKODA KODIAQ, SKODA OCTAVIA, VOLKSWAGEN TIGUAN, SUV, SEDAN, DIESEL, TDI, DSG, RWD, HIGHLINE, COMFORTLINE, LEATHER, VW.