இந்தியாவின் புகையில்லா எதிர்காலம் - எலெக்ட்ரிக் கார்கள்!
Posted Date : 18:42 (21/10/2017)
Last Updated : 18:59 (21/10/2017)


 

தீபாவளி சமயத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால், அதிக அளவில் சுற்றுச்சுழல் மாசுபடுவதாக, டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள தேசிய தலைநகர்ப்பகுதியில், பட்டாசு விற்பனை தடை செய்யப்பட்டது. அதே வேளையில், கோவையில் மத்திய அரசின் தொழில்நுட்ப வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பாளரான ஆம்பியர் நிறுவனமும் இணைந்து, “மின்சார வாகனஇயக்கம்” (Electric Mobility) என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தின. கோவையை சேர்ந்த வாகன உதிரிபாக தயாரிப்பாளர்கள், கொடிசியா வர்த்தக அமைப்பினர்,
 
சொசைட்டி ஆப் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் அமைப்பு, இந்திய வர்த்தக கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொறியியல் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில், ''ஏன் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்களால், இன்னும் சந்தையில் அழுத்தமாகக் கால்ஊன்ற முடியவில்லை?'' என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. கருத்தரங்கில் பேசியவர்களும் அதை ஒட்டியே பேசினர். ஆம்பியர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமலதா அண்ணாமலை, அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று, கருத்தரங்கில் பேசவிருக்கும் பிரதிநிதிகளை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார்.
 

 
 
தொழில்நுட்ப வளர்ச்சிக் கழகத்தின் செயலாளர் தே.பிந்து, தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடனுதவிகள் மற்றும் அதனைப் பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். மத்திய அரசிடமிருந்து மின்சார வாகனங்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் மற்றும் FAME (Faster Adoption and Manufacturing of Electric vehicles)  திட்டம் குறித்தும் விரிவாக உரையாற்றினார் ஐ.ஐ.டி மும்பையின் பேராசிரியர் முனைவர்.முன்ஷி, இந்தக் கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்டார் இந்தியாவில் ''எலெக்ட்ரிக் கார்களின் தந்தை'' என்றழைக்கப்படும் ரேவா மோட்டார்ஸ் நிறுவனரான சேத்தன் மேனி,
 
ஒரு தொழில் முனைவராக ரேவா நிறுவனத்தை ஆரம்பித்தபோது, அவர் சந்தித்த சிக்கல்கள் மற்றும் சவால்களையும், 2010-ல் தனது ரேவா நிறுவனத்தை மஹிந்திரவிடம் விற்றது வரையிலான தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இவர்களை போன்று பாதி நிரம்பிய குடத்தைப் பற்றி பேசுவதற்கு நிறைய ஆட்கள் உள்ளனர். ஆனால் மீதி குடத்தைப் பற்றிப் பேசதான் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு ஆள் தேவைபடுகிறது. உதாரணத்துக்கு, ஆம்பியர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பாலா பேசும்போது, ஒரு ஆச்சர்யமான தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். நார்வே நாடுதான் உலகளவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது. 
 

 
 
இந்த நாட்டில் விற்பனை செய்யப்படும் புதிய கார்களில், 34.7 சதவிகிதம் எலெக்ட்ரிக் கார்கள்தான். அதாவது 100 கார்கள் விற்றால், அதில் கிட்டத்தட்ட 35 கார்கள் எலெக்ட்ரிக் என்பதுதான், அவர் சொல்ல வந்த தகவல். ஏன் மற்ற நாடுகள், அதுவும் குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளைவிட, நார்வேயில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது? இந்தக் கேள்விக்கான பதில், நார்வே நாட்டு அரசாங்கத்தின் கொள்கை மற்றும் விதிமுறைகளிலேயே உள்ளது. நார்வேயில் ஒருவர் எலெக்ட்ரிக் கார் வாங்கும்பட்சத்தில்,
 
அவர் வருடாந்திர சாலை வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார். மேலும் எலெக்ட்ரிக் கார்களுக்கு, நாடு முழுவதும் பார்க்கிங் மற்றும் சுங்கச் சாவடி கட்டணங்கள் கிடையாது. இந்நேரத்தில் இந்தியாவின் நிலைமை பற்றி சொல்லவே தேவையில்லை. டிசம்பர் 2015 வரை, மொத்தம் 6000 எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் முன்பதிவு செய்யபட்டிருக்கிறது! எனவே எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரை, இந்தியா மிகவும் கவலைக்கிடமான நிலையில் தான் உள்ளது. இருப்பினும் இந்நிலை ஓரளவுக்கு மாறும் என நம்பிக்கை தந்தது, கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட இன்னொரு ஹாட் டாபிக்.
 

 
 
தனது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தக்கூடிய கார்கள் அனைத்தையும் எலெக்ட்ரிக்காக மாற்றினால், காற்று மாசு குறையும் என மத்திய அரசிற்கு பல்ப் எறிந்திருக்கிறது. இதற்காக உடனடியாக 10,000 எலெக்ட்ரிக் கார்களை வாங்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. இதற்கான முதற்கட்ட பரிசோதனை முயற்சியாக, 500 கார்களுக்கு டெண்டர் விடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்தியச் சந்தையில் 3 எலெக்ட்ரிக் கார்களுடன் வலம் வரும் மஹிந்திராதான் ஆர்டரைப் பிடிக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மஹிந்திராவை விட 2 லட்ச ரூபாய் (25%) குறைவாக,
 
தனது எலெக்ட்ரிக் டிகோர் காரை, ஜிஎஸ்டி மற்றம் 5 வருட வாரண்டியுடன், 11.2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதாக டெண்டரில் அறிவித்தது டாடா மோட்டார்ஸ். ஆனால், வைல்ட் கார்ட் என்ட்ரியாக, டாடா சொன்ன அதே விலைக்கே மஹிந்திராவும் ஒத்துக்கொண்டு, 500 கார்களில் 30% ஆர்டர், அதாவது 150 கார்களை சப்ளை செய்யப் போகிறது. மத்திய அரசின் சார்பில், எலெக்ட்ரிக் கார்களுக்கு விலையில் சலுகை, உட்கட்டமைப்பு வசதிகள், தரமான பேட்டரிகள் மற்றும் தேவையான சார்ஜிங் ஸ்டேஷன்களைத் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் நிறுவினால், தினமும் 50 கிமீ தூரம் நகருக்குள் பயணிக்கும் சாமானியன், எலெக்ட்ரிக் கார்களை வாங்க ஆர்வமாகத் தான் இருக்கிறான்!
 

- விநாயக் ராம் (மாணவ பத்திரிகையாளர்)
 
 
TAGS :   MAHINDRA, INDIA, REVA, ELECTRIC, AMPERE, COIMBATORE, CHETAN MAINI, HEMALATHA ANNAMALAI, CONFERENCE, ELECTRIC CARS, ELECTRIC MOBILITY, TATA, E20, VERITO, SUPRO, TIGOR.