நவம்பர் 9, 2017 அன்று வருகிறது, ஃபோர்டு எக்கோஸ்போர்ட் பேஸ்லிஃப்ட்!
Posted Date : 16:57 (26/10/2017)
Last Updated : 17:06 (26/10/2017)

 

வருகின்ற நவம்பர் 9, 2017 அன்று, தனது காம்பேக்ட் எஸ்யூவியான எக்கோஸ்போர்ட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்குகிறது ஃபோர்டு. மேம்படுத்தப்பட்ட புதிய முன்பக்கம், அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய டேஷ்போர்டு, முற்றிலும் புதிய 1.5 லிட்டர் Dragon பெட்ரோல் இன்ஜின்
 
 
 
 
என உலகநாடுகளில் விற்பனை செய்யப்படும் எக்கோஸ்போர்டில் இடம்பெற்றிருக்கும் பல விஷயங்கள், இங்கு இடம்பெயர்ந்திருக்கிறது. இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டைத் துவக்கி வைத்த இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், என்னென்ன மாற்றங்கள் இருக்கிறது?
 

டிசைன்
 

ஃபேஸ்லிஃப்ட் நியதிக்கு ஏற்ப, புதிய எக்கோஸ்போர்ட்டின் முன்பக்கத்தில்தான் அதிக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அறுகோண வடிவ க்ரில், DRL உடனான ஷார்ப்பான ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், மாற்றியமைக்கப்பட்ட பனி விளக்குகள் மற்றும் முன்பக்க பம்பர், ஆகியவற்றை, இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம். புதிய 17 இன்ச் அலாய் வீல்களைத் தவிர, பக்கவாட்டுப் பகுதியில் எந்தப் புதுமையும் இல்லை.
 
 
 
 
உலகநாடுகளில் விற்பனை செய்யப்படும் எக்கோஸ்போர்ட்டில், ஸ்பேர் வீல் காருக்கு அடியே சென்றுவிட்டது. ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள எக்கோஸ்போர்ட்டில், காரின் டெயில்கேட்டில்தான் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டுள்ளது. டெயில் லைட்டில் இருக்கும் சிறிய முன்னேற்றங்களைத் தவிர, காரின் பின்பகுதியில் எந்த வித்தியாசமும் இல்லை.
 

இன்டீரியர்
 

காரின் வெளிப்புறத்தைப் போலவே, கேபினிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிகின்றன. டேஷ்போர்டின் சென்டர் கன்சோல், புதிய டச் ஸ்க்ரின் சிஸ்டம் மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்துடன்  முற்றிலும் புதிதாக இருக்கிறது.
 
 
 
 
இதற்கு மேட்சிங்காக, ஸ்டீயரிங் வீல் - MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் - ஏசி வென்ட்களும் புதிதாக இருக்கின்றன. கறுப்பு நிற டேஷ்போர்டில், ஆங்காங்கே சில்வர் வேலைப்பாடுகள் இருப்பது ப்ளஸ். மேலும் ஆம்பியன்ட் லைட்டிங், இரவு நேரங்களில் பார்க்க ஸ்டைலாக இருக்கிறது.
 

இன்ஜின் ஆப்ஷன்
 

தனது புதிய Dragon சீரிஸ், 1.5 லிட்டர் - 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை, எக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் வாயிலாக அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு. இது தற்போது விற்பனை செய்யப்படும் காரில் இருக்கும் இன்ஜினைவிட அளவில் ஒரு சிலிண்டர் குறைந்திருந்தாலும், அதைவிடக் கூடுதலான பவர் மற்றும் டார்க்கை வெளிபடுத்துவது கவனிக்கத்தக்கது.
 
 
 
 
(123bhp பவர் மற்றும் 15kgm டார்க்). இதனுடன் தற்போதைய மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1 லிட்டர் எக்கோபூஸ்ட் இன்ஜின் ஆப்ஷன்களும் தொடரும் என நம்பலாம். கியர்பாக்ஸைப் பொறுத்தவரை, 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கும் என்றே தெரிகிறது.
 

சிறப்பம்சங்கள்
 

ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான SYNC 3 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார் உடனான ரியர் பார்க்கிங் கேமரா, வாய்ஸ் கமாண்ட், 6 காற்றுப்பைகள், ISOFIX, ABS, EBD, TPMS, லெதர் சீட்ஸ்,
 
 
 
 
புஷ் பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரிக் மிரர்கள் என எக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் அதிக சிறப்பம்சங்களை வாரி இறைத்திருக்கிறது ஃபோர்டு. ஆனால் தற்போதைய மாடலில் இல்லாத ரியர் ஏசி வென்ட்கள், இந்த மாடலிலும் இருப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே! 
 

போட்டியாளர்கள்
 

2013-ல் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வந்தபோது, இதற்கு பெரியளவில் அப்போது போட்டியாளர்கள் இல்லை. ஆனால் மஹிந்திரா TUV 3OO, மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் எனப் பன்முனைத் தாக்குதலால் நிலைமையே மாறிவிட்டது!
 
 
 
 
எனவே தற்போது போட்டியாளர்களுக்கு வழிவிட்டு நிற்கும் எக்கோஸ்போர்ட், அசத்தலான விலையில் வரப்போகும் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்குப் பிறகு, தனது இடத்தை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   
 

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   FORD ECOSPORT, INDIA, FACELIFT, TATA NEXON, MAHINDRA TUV 3OO, MARUTI SUZUKI VITARA BREZZA, DIESEL, PETROL, DRAGON, 3 CYLINDER, TOUCHSCREEN, LED, PROJECTOR, ABS, AIRBAGS, AUTOMATIC GEARBOX, ALLOY WHEELS, COMPACT SUV, LAUNCH.