Grazia - ஹோண்டாவின் புதிய 125சிசி ஸ்கூட்டர் இதுதான்!
Posted Date : 12:38 (01/11/2017)
Last Updated : 12:58 (01/11/2017)


 

இந்த ஆண்டின் துவக்கத்தில், 2 புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர்களை, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவதாக ஹோண்டா அறிவித்திருந்தது தெரிந்ததே. அதற்கேற்ப க்ளிக் ஸ்கூட்டர் மற்றும் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படும் ஆஃப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் பைக்கைக் களமிறக்கிவிட்ட நிலையில், தற்போது இந்நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
 
 
 
 
'Grazia' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதை, 'Advanced Urban Scooter' ஆகப் பிரகடனப்படுத்துகிறது ஹோண்டா. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில். டூயல் டோன் மேட் ஃப்னிஷ் கலர்களில், அசத்தலாகக் காட்சியளிக்கும் Grazia, ஒரு 125சிசி ஸ்கூட்டராக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்! 
 

டிசைன் மற்றும் வசதிகள்
 

ஹோண்டா சமீப காலங்களில் அறிமுகப்படுத்திய நவி மற்றும் க்ளிக் போன்ற வித்தியாசமான பட்ஜெட் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, வழக்கமான டிசைன் கோட்பாடுகளுடன் கூடிய தோற்றத்தையே கொண்டிருக்கிறது Grazia. ஸ்கூட்டர்களின் ஹேண்டில்பாரில், ஹெட்லைட்கள் பொருத்தப்படுவது வாடிக்கை. ஆனால் வழக்கமான டிசைனைக் கொண்டிருக்கும் ஸ்கூட்டர்களில் இருந்து தனித்துத் தெரியும் விதத்தில், டியோ ஸ்கூட்டரைப் போலவே, முன்பக்க Apron-ல் V வடிவ டூயல் ஹெட்லைட்டைக் கொண்டுள்ளது Grazia.
 
 
 
 
இதனாலேயே ஷார்ப்பான வடிவமைப்பில் இருக்கும் இந்த ஸ்கூட்டர், டியோவின் அண்ணன் போலக் காட்சியளிக்கிறது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இருக்கும் அதே டிஜிட்டல் மீட்டர்தான் இங்கும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஸ்கூட்டர்களில் அத்தியாவசியமான வசதிகளாகிவிட்ட USB மொபைல் சார்ஜர் மற்றும் ஸ்டோரேஜ் ஸ்பேஸ், Grazia-விலும் தொடர்கின்றன. இதனுடன் சீட்டைத் தேவைபட்டால் திறக்கக்கூடிய Seat Release Latch, சென்ட்ரல் லாக்கிங் உடனான ஸ்கூட்டரின் சாவி துவாரத்துக்கு அருகே இருக்கிறது. 
 

இன்ஜின் மற்றும் சஸ்பென்ஷன்
 

ஆக்டிவா 125 போலவே, Grazia-விலும் 12 இன்ச் டியூப்லெஸ் டயர்கள், அலாய் வீல்கள், முன்பக்க டிஸ்க் பிரேக், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், CBS, அலாய் ஃபுட் பெக் போன்ற வசதிகள் இருப்பது பெரிய ப்ளஸ். எனவே இந்த ஸ்கூட்டரானது, சுஸூகியின் ஆக்ஸஸ் 125 மற்றும் வெஸ்பாவின் LX125 ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்படும் எனத் தெரிகிறது. அதற்கு ஏற்ப, ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இருக்கும் அதே இன்ஜின்தான், Grazia-விலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
 
 
 
இது போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது குறைவான பவரையே வெளிப்படுத்தினாலும், எடை குறைவான ஃபைபர் பாடி காரணமாக, பெர்ஃபாமென்ஸ் போதுமான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹோண்டாவின் ப்ரீமியம் ஸ்கூட்டராகப் பதவியேற்க இருக்கும் Grazia, ஆக்டிவா 125 ஸ்கூட்டரை விட விலை அதிகமாக இருக்கும் எனலாம். கடந்த அக்டோபர் 25-ம் தேதி முதலாக இந்த ஸ்கூட்டரின் புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில், ஹோண்டா டூ-வீலர் டீலர்களில் 2,000 ரூபாய் செலுத்தி புக் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

CBR சீரிஸ் அப்டேட்! 
 

Grazia-வுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட CBR பைக்குகளை வெளியிடும் முடிவில் இருக்கிறது ஹோண்டா. இதன் வெளிப்பாடாக புதிய SDBV சஸ்பென்ஷன் - LED ஹெட்லைட் - LED டெயில் லைட் - புதிய Nissin டிஸ்க் பிரேக்ஸ் - BS-IV விதிகளுக்கு ஏற்ப ரீ-டியூன் செய்யப்பட்ட இன்ஜின் - 2 புதிய கலர்கள் - ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷன் என முற்றிலுமாக மேம்படுத்தப்பட்ட CBR 650F பைக்கை,
 
 
 
 
விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் (7.30 லட்ச ரூபாய் - டெல்லி எக்ஸ் ஷோரூம்) இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, யமஹாவின் புதிய YZF-R15 மற்றும் YZF-R3 பைக்குகளுக்குப் போட்டியாக, புதிய CBR 150R மற்றும் CBR 300R பைக்குகளை, ஹோண்டா இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது!   
 
 
- ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   HONDA, GRAZIA, 125CC, ACTIVA 125, SUZUKI ACCESS 125, PIAGGIO VESPA, LX 125, DIO, CBS, LED, DUAL TONE, MATTE FINISH, DIGITAL METERS, SCOOTER, LED, ALLOY WHEEL, 12 INCH TYRES, DISC BRAKE.