10,000 எலெக்ட்ரிக் கார்களை, மத்திய அரசுக்கு வழங்கும் டாடா - மஹிந்திரா!
Posted Date : 13:09 (01/11/2017)
Last Updated : 13:17 (01/11/2017)

 

மத்திய அரசு மற்றும் அது சார்ந்த துறைகளின் சொந்தப் பயன்பாட்டுக்காக மட்டும், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் 5 லட்சம் வாகனங்கள் இருக்கின்றன. எனவே சுற்றுச்சூழல் மாசடைவதைக் குறைக்கும் விதமாக, அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் இவை அனைத்தையும் எலெக்ட்ரிக் கார்களாக மாற்றும் முடிவில் இருக்கிறது, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம்.
 
எனவே அரசுக்குச் சொந்தமான Energy Efficient Services Limited (EESL), அதாவது LED பல்ப் - LED டியூப்லைட் - ஃபேன்களை மானிய விலையில் வழங்கும் நிறுவனத்துக்கு, 10 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை வழங்குவதற்காகக் கடந்த மாதத்தின் இறுதியில் டெண்டர் கோரப்பட்டு அதற்கான ஏலம் நடைபெற்றது. இதில் நிஸான் - மஹிந்திரா - டாடா ஆகிய கார் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்குபெற்றன. இறுதியில் தனது போட்டியாளர்களைவிட (மஹிந்திராவின் எலெக்ட்ரிக் வெரிட்டோ) 25% குறைவான விலையைச் சொன்ன டாடா மோட்டார்ஸ் (ஜிஎஸ்டி மற்றும் 5 வருட வாரண்டியுடன் 11.2 லட்ச ரூபாய்), இந்த ஏலத்தில் வெற்றிபெற்றுவிட்டது!
 
 
 
 
EESL நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, 3,990 மிமீ முதல் 4,980 மிமீ நிளத்துக்குட்பட்ட எலெக்ட்ரிக் செடான் காரை, இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. கடந்த மாதத்தின் துவக்கத்தில், பிரிட்டனில் நடந்த LCV-2017 கண்காட்சியில், எலெக்ட்ரிக் டியாகோ ஹேட்ச்பேக்கைக் காட்சிபடுத்தியது டாடா. அதில் 114bhp பவர் மற்றும் 20kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் - சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்டிருந்தது.
 
0 - 100கிமீ வேகத்தை 11 விநாடிகளுக்குள்ளாக எட்டிப்பிடிக்கும் எலெக்ட்ரிக் டியாகோ, அதிகபட்சமாக 135கிமீ வேகத்தையும், ஒரே சார்ஜில் 100கிமீ தூரம் வரை செல்லக்கூடிய திறனையும் கொண்டிருக்கிறது. எனவே இந்த காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள டிகோர் காம்பேக்ட் செடானின் எலெக்ட்ரிக் வெர்ஷனைத்தான், மத்திய அரசாங்கத்தின் EESL நிறுவனத்துக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களுக்கான உலகின் மிகப்பெரிய ஆர்டர் எனப் பெயர் பெற்றிருக்கும் இதில் முதற்கட்டமாக, வருகின்ற நவம்பர் 30, 2017-க்குள்ளாக, 500 கார்கள் டெலிவரி செய்யப்பட உள்ளன.
 

 
 
எனவே தனது எலெக்ட்ரிக் கார்களைவிடக் குறைவான விலையை டாடா சொன்னதைக் கேட்டுவிட்டு முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் டாடாவின் விலைக்கே இறங்கிவந்துவிட்டது மஹிந்திரா! அந்த 500 கார்களில், டாடா மோட்டார்ஸின் 250 எலெக்ட்ரிக் டிகோர் கார்களும், மஹிந்திராவின் எலெக்ட்ரிக் வெரிட்டோ கார்களும் அடக்கம். இதில் மஹிந்திரா வழங்கும் ஒவ்வொரு காருக்கும், அந்நிறுவனத்துக்கு 2.3 லட்ச ரூபாய் நஷ்டம்.... அதாவது 150 கார்களுக்கு உத்தேசமாக 3.5 கோடி ரூபாய்... அம்மாடி!
 
எனவே அதைச் சரிகட்டும் விதமாக, 2018-ல் டெலிவரி செய்யப்பட உள்ள மீதமிருக்கும் 9,500 கார்களில், 40 முதல் 50 சதவிகிதம் (அதிகபட்சமாக 4,750 Electric Vehicle) கார்களை வழங்கவும் மஹிந்திராவுக்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் மத்திய அரசுக்குத் தான்வழங்கும் ஒவ்வொரு எலெக்ட்ரிக் காரிலும் நஷ்டம் ஏற்படுவதால், இதுகுறித்து மஹிந்திராவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களைப் பிரபலப்படுத்தும் விதமாகவும், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், நஷ்டத்தைத் தாண்டி இதில் பங்குபெறவே மஹிந்திரா விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.
 
 
 
 
இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வெரிட்டோவில் இருப்பது, 41bhp பவர் மற்றும் 9.1kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 72 வாட் AC Induction Motor. இது டாடாவின் எலெக்ட்ரிக் டிகோர் காரைவிடக் குறைவான பெர்ஃபாமென்ஸைக் கொண்டிருந்தாலும், இந்த எலெக்ட்ரிக் செடானிலும் சிங்கிள் சார்ஜில் 100கிமீ தூரம் பயணிக்கலாம். அதிகபட்சமாக 86கிமீ வேகம் செல்லக்கூடிய எலெக்ட்ரிக் வெரிட்டோவில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால்,
 
2 மணி நேரத்தில் 80% பேட்டரியைச் சார்ஜ் ஏற்றிவிட முடிவது ப்ளஸ். இந்நிலையில் எலெக்ட்ரிக் சுப்ரோ, எலெக்ட்ரிக் வெரிட்டோ, E2O ஆகிய மூன்று கார்களைத் தொடர்ந்து, நான்காவது எலெக்ட்ரிக் காராக, தான் சமீபத்தில் அறிமுகப்படுத்திய KUV 100 NXT காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை, மஹிந்திரா நிறுவனம் விரைவில் தயாரிக்க உள்ளது. அது 85% உள்நாட்டுப் பாகங்களுடன், அடுத்த ஆண்டு இறுதிக்குள்ளாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
 
- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   EESL, INDIA, GOVERNMENT, NARENDRA MODI, POLLUTION, ENVIRONMENT, ELECTRIC CARS, TATA, MAHINDRA, NISSAN, TENDER, 25% LESS PRICE, GST, 5 YEAR WARRENTY, ELECTRIC MOTOR, LITHIUM ION BATTERY, TIGOR, VERITO, E2O, HYBRID.