வருகிறது சுஸூகியின் பட்ஜெட் க்ரூஸர் - இன்ட்ரூடர் 150 !
Posted Date : 13:25 (01/11/2017)
Last Updated : 13:35 (01/11/2017)


வருகின்ற நவம்பர் 7, 2017 அன்று, புதிதாக ஒரு பிரிமியம் பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது சுஸூகி. இன்ட்ரூடர் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இது, 150சிசி க்ரூஸர் பைக்காகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது சர்வதேச பைக் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சுஸூகியின் XL சைஸ் க்ரூஸர் பைக்குகளான இன்ட்ரூடர் M800 மற்றும் இன்ட்ரூடர் M1800 ஆகியவற்றை நினைவுபடுத்தும்படியான டிசைனே இதை உறுதிபடுத்தி விடுகிறது.
 
முன்பக்கத்தில் அகலமான ஹெட்லைட்டுடன், பிரம்மாண்டமான டேங்க் ஸ்கூப்புடன் கூடிய 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசிகரிக்கிறது. ரைடர் மற்றும் பில்லியன் இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் ஸ்ப்ளிட் சீட், 740 மிமீ உயரத்தில் தேவையான குஷனிங்குடன் வசதியாக இருக்கும் என்றே தெரிகிறது LED டெயில் லைட்டுக்கு மேலே வட்டமான க்ராப் ரெயிலும், அதற்குக் கிழே தடிமனான மட்கார்ட்டும் அழகாக பொருந்தியுள்ளன.
 
 
 
 
Dual Port பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பெரிய எக்ஸாஸ்ட் பைப், ஜிக்ஸர் பைக்கின் ஜெராக்ஸ்தான்! ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வடிவேலு சொல்வது போல ''வாங்குற காசுக்கு மேல கூவுறான் கொய்யா'' என்ற ரீதியில் அதிரடியான தோற்றத்தையே கொண்டிருக்கிறது இன்ட்ரூடர் 150. ஆனால் பைக்கின் கட்டுமஸ்தான வடிவமைப்புடன் (2,130 மிமீ நீளம் - 805மிமீ அகலம் - 1095மிமீ உயரம் - 1,405 மிமீ வீல்பேஸ்) ஒப்பிடும்போது, டயர்கள் கொஞ்சம் சிறிதாக இருக்கிறதோ எனத் தோன்றுகிறது.
 
ஆனால் என்னதான் டிசைன் வித்தியாசமாக இருந்தாலும், மெக்கானிக்கலாக ஜிக்ஸருக்கும் இன்ட்ரூடருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இன்ட்ரூடர் 150 பைக்கின் டெலிஸ்கோபிக் ஃபோர்க் - மோனோஷாக் சஸ்பென்ஷன், அலாய் வீல்கள் - டயர்கள், முன்பக்க - பின்பக்க டயர்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ரியர் வியூ மிரர்கள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவை அனைத்தும், ஜிக்ஸர் பைக்கில் இருந்தே பெறப்பட்டுள்ளன. 
 

 
 
இதில் எத்தனை வசதிகள் ஸ்டாண்டர்டாக இருக்கும் என்பது, பைக் விற்பனைக்கு வரும்போதுதான் தெரியும்! சேஸியும் ஒன்றுதான் என்றாலும், க்ரூஸர் கோட்பாடுகளுக்கு ஏற்ப இதில் சில மாறுதல்களைச் (பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கும் ஹேண்டில்பார் மற்றும் முன்னோக்கி வைக்கப்பட்டிருக்கும் ஃபுட் பெக்ஸ்) சுஸூகி செய்திருக்கிறது. ஆனால் ஜிக்ஸரில் இல்லாத LED ஹெட்லைட், இன்ட்ரூடர் 150 பைக்கில் இடம்பெற்றுள்ளது.
 
இப்படி கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், ஜிக்ஸரை விட 13 கிலோ எடை கொண்டிருக்கிறது இன்ட்ரூடர் 150 (148 கிலோ). ஆனால் இந்த இரண்டு பைக்கிலும் இருப்பது, 14.8bhp பவர் மற்றும் 1.4kgm டார்க்கை வெளிப்படுத்தும் 154.9சிசி கார்புரேட்டட் இன்ஜின்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிக்ஸர் SF பைக்கைப் போலவே, இன்ட்ரூடர் 150 பைக்கிலும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷனைப் பின்னாளில் சுஸூகி வழங்கும் என நம்பலாம்.
 
 
 
 
எனவே அதிக எடையைச் சுமக்கும் விதமாகவும், க்ரூஸர் பைக்குக்கு ஏற்ற விதமாகவும், குறைவான வேகத்தில் அதிக பிக்-அப்பிற்காக இன்ஜின் ரி-டியூன் செய்யப்படும் என நம்பலாம். தவிர ஜிக்ஸரை விட அதிக விலையில் (1 லட்ச ரூபாய், உத்தேச ஆன்ரோடு விலை) வெளிவரப்போகும் இன்ட்ரூடர் 150, பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்கிற்குப் போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிக்ஸரைவிட 10மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸைக் (170மிமீ) கொண்டிருக்கும் இந்தப் புதிய க்ரூஸர் பைக்கின் புக்கிங்,
 
சுஸூகியின் டீலர்களில் ஏற்கனவே துவங்கிவிட்டது. நவம்பர் மாதத்தின் துவக்கத்தில், தனது டீலர்களுக்கு இன்ட்ரூடர் பைக்குகளின் Dispatch துவங்கும் எனத் தெரிகிறது. பட்ஜெட் க்ரூஸர் செக்மென்ட்டின் ''ரூட் தல''-யான அவென்ஜர் பைக்குடன் மோதுவதற்குத் தேவையான ஹோம்வொர்க்கைச் சிறப்பாகச் செய்திருக்கும் சுஸூகி, தனது 150சிசி பைக்கான ஜிக்ஸரில் மிஸ் செய்த சிக்ஸரை, இன்ட்ரூடர் 150 பைக்கின் வாயிலாக தோனியின் ''ஹெலிகாப்டர் ஷாட்'' போல பவர்ஃபுல்லாக அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   SUZUKI, INTRUDER 150, M800, M1800, CRUISER, GIXXER, 155CC, LED HEADLIGHT AND TAIL-LIGHT, DUAL DISC BRAKES, ABS, CHROME, ALLOY WHEELS, TUBELESS TYRES, DIGITAL METERS, INDIA, BAJAJ, AVENGER STREET 150.