7 லட்சம் சிட்டி - இந்தியாவில் விற்பனை செய்து ஹோண்டா பெருமிதம்!
Posted Date : 19:37 (03/11/2017)
Last Updated : 20:07 (09/11/2017)

 

சென்னை, நவம்பர் 2017: இந்தியாவில் முதன்முதலாக, மிட்-சைஸ் செடான் கார் சந்தையில், 7 லட்சம் சிட்டி கார்களை விற்று சாதனை படைத்திருப்பதாக, ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா, போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில், குறைவான பராமரிப்புச் செலவுகள் மற்றும் நீண்ட கால நம்பகத்தன்மையை மனதில் வைத்து, கார்களைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்று.
 
‘இந்திய சந்தையில், ஹோண்டா சிட்டிதான் எங்களின் பெஸ்ட் செல்லிங் கார்; தவிர 7 லட்சம் கார்கள் என்கின்ற விற்பனை இலக்கை எட்டிப்பிடித்த முதல் மிட்-சைஸ் செடான் இதுதான்! நான்கு தலைமுறை மாடல்களைக் கொண்டுதான், ஹேண்டா சிட்டி எனும் பிராண்ட், இந்திய வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கிறது. இந்த மிட்-சைஸ் செடானை வாங்கிய அனைவருக்கும் நன்றி’ எனப் பெருமிதத்துடன் கூறினார், ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் CEO-வான யோச்சிரோ உயேனோ. 
 

 
 
1998-ல் அறிமுகமாகி, ஏறக்குறைய 20 வருடங்களைத் தொடவிருக்கிறது ஹோண்டா சிட்டி. இதுவரை உலகளவில் மொத்தம் 36 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளது. அதிகபட்சமாக, இந்திய கார் சந்தையில் கடந்த 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி மட்டும், 269,941 கார்கள் விற்பனையாகி உள்ளது!
 
மேலும் வெளிவந்த 15 மாதங்களுக்குள்ளாக, 1 லட்சம் கார்கள் விற்பனை என்கிற சாதனை, இந்த நான்காம் தலைமுறை சிட்டியிடமே உள்ளது! சிட்டியின் வரலாற்றில் முதன்முறையாக, 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைக் களமிறக்கிய பிறகு, இந்த காரின் விற்பனை ஏறுமுகமாகவே உள்ளது. இந்த வருடத்தில் வெளியான சிட்டியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல், முதல் மாதத்திலேயே 10,000 புக்கிங்களை பெற்று அசத்தி விட்டது. 
 

 
 
யோச்சிரோ உயேனோ மேலும் கூறுகையில், ‘உலகளவில் சிட்டியின் மொத்த விற்பனை எண்ணிக்கையில் 25 சதவீகிதம், வலுவான கார் சந்தைகளில் ஒன்றான இந்தியா பெற்றுத் தருகிறது. ஸ்போர்ட்டியான டிசைன், உயர்தரமான பாதுகாப்பு வசதிகள், அருமையான பெர்ஃபாமென்ஸ், அதிகப்படியான மைலேஜ், சிறந்த சொகுசு, லேட்டஸ்ட்டான சிறப்பம்சங்கள் என ஒரு முழு பேக்கேஜாக உள்ளது சிட்டி. இனிவரும் காலங்களிலும், மக்களால் அதிகம் விரும்பப்படும் கார் எனும் பெருமையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வோம்’ என்றார்.
 
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஹோண்டா சிட்டி நிகழ்த்திய மேஜிக், இந்த நிறுவனத்தின் 7 சீட்டர் எம்பிவியான மொபிலியோவுக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் இந்த வருடத்தின் முதல் காலாண்டிலேயே, மொபிலியோ கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது தெரிந்ததே. ஆனால் சிட்டியின் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட WR-V, சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 
 
-ராகுல் சிவகுரு, ரஞ்ஜித் ரூசோ.
 
 
TAGS :   HONDA, CITY, MID SIZE SEDAN, PREMIUM CAR, COMFORT, SAFETY, DESIGN, PERFORMANCE, MILEAGE, 7 LAKH CARS, SOLD, DIESEL, 4TH GENERATION, CEO.