டெஸ்ட்டிங்கில் புதிய யமஹா R15... விரைவில் வருகிறது YZF-R15 V3.0 !
Posted Date : 16:01 (06/11/2017)
Last Updated : 13:44 (09/11/2017)


சென்னை நவம்பர் 2017: ஷங்கரின் 2.0, அவ்வப்போது ஹைப்பை ஏற்றிவிடுவது போல, யூத் பைக்கர்களுக்குத் தற்போது ஹைப்பை ஏற்றுவது யமஹாவின் YZF-R15 V3.0. இந்தோனேஷியா மற்றும் வங்கதேசத்தில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே, முன்பைவிட டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தில் பலத்த முன்னேற்றம் கண்டிருக்கும் இந்த பைக் வெளிவந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் இது எப்போது கிடைக்கும் என்பது புலப்படாமலேயே இருந்தது.
 
 
 
 
ஆனால் இப்போது இந்தியாவில் தனது R15 V3.0 பைக்கை டெஸ்ட் செய்து கொண்டிருக்கிறது யமஹா. இணையத்தில் வைரலாகப் பரவிவரும் ஸ்பை ஃபோட்டோக்களைப் பார்க்கும்போது, Production Ready-ஆகக் காட்சியளிக்கும் இந்த பைக், விரைவில் இந்நிறுவனத்தின் ஷோரூம்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

யமஹா YZF-R15 பைக்கின் வரலாறு:

'ரேஸ் டிராக்கிலும் சாதாரண சாலைகளிலும் ஓட்டுவதற்கு, அட்டகாசமான 150சிசி பைக் வேண்டும்' என்ற பெருமையை, 2008-ல் அறிமுகமான முதல் வெர்ஷன் YZF-R15 பெற்றது அறிந்ததே. இதனால் விரைவாகவே ஒரு நிலையான ரசிகர் வட்டத்தைப் பெற்ற இந்த பைக்கின் டிமாண்ட், காலப்போக்கில் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அதனைத் தக்கவைத்துக் கொள்ளும் விதமாக, YZF-R15 பைக்கின் இரண்டாவது வெர்ஷனை, கடந்த 2011-ல் களமிறங்கியது யமஹா.
தனது பைக்கில் வேகம் மற்றும் கையாளுமையை விரும்பும் யூத் பைக்கர்களை,
 
 
 
 
இந்த பைக் ஒட்டுமொத்தமாகத் தனது பக்கம் ஈர்த்துவிட்டது என்பதே நிதர்சனம். 'உயரமான பில்லியன் சீட் வசதியாக இல்லை' என்ற குறைபாட்டைக் களையும் விதமாக, சிங்கிள் பீஸ் சீட்டுடன் கூடிய YZF-R15 S எனும் மாடலை, கடந்த 2015-ல்  கொண்டுவந்தது யமஹா. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, YZF-R15 பைக்கின் மூன்றாவது வெர்ஷன், சர்வதேச சந்தைகளைத் தொடர்ந்து இந்தியச் சந்தையிலும் டயர் பதிக்க உள்ளது.

 
YZF-R15 V3.0 பைக்கின் டிசைன் எப்படி?

YZF-R15 V3.0 பைக்கின் வடிவமைப்பு, YZF-R6 மற்றும் YZF-R1 பைக்கை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. இரட்டை LED ஹெட்லைட்டுக்கு (DRL உடன்) நடுவே ஸ்டைலாக இருக்கும் ஏர் வென்ட் மற்றும் LED டெயில் லைட், இதற்கான சிறந்த உதாரணம். மேலும் ஃபுல்ஃபேரிங்கும் மாற்றத்துக்கு உட்பட்டுள்ளது. ஆனால் நீளமான எக்ஸாஸ்ட் பைப்தான், ஏனோ பைக்கின் ஸ்போர்ட்டியான டிசைனுடன் மேட்ச்சாகவில்லை. YZF-R15 V2.0 பைக்கில் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருந்த நிலையில், YZF-R15 V3.0 பைக்கில் அது 11 லிட்டராகக் குறைந்துவிட்டது. கூடவே வீல்பேஸும், முன்பைவிட 25மிமீ குறைந்துவிட்டது (1325மிமீ).
 
 
 
 
ஆனால் முந்தைய மாடலைவிட 20மிமீ கூடுதல் நீளம் (1,990மிமீ), 55மிமீ கூடுதல் அகலம் (725மிமீ), 65 மிமீ கூடுதல் உயரம் (1,135மிமீ), 5 மிமீ அதிகரிக்கப்பட்ட சீட் உயரம் (815மிமீ) என YZF-R15 V3.0 அளவுகளில் வளர்ந்திருக்கிறது. YZF-R15 V2.0 பைக்கில் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது, கேடிஎம் பைக்குகளில் இருப்பது போன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் (கியர் ஷிஃப்ட் லைட் உடன்), YZF-R15 V3.0 பைக்கில் இருக்கிறது. பைக்கின் இருபுறமும் இருக்கும் டிஸ்க் பிரேக்கின் அளவு, 20 மிமீ அதிகரித்துள்ளது (Front - 282மிமீ, Rear: 240மிமீ)

 
மற்றபடி அதே DeltaBox ஃப்ரேம் - அலுமினியம் ஸ்விங் ஆர்ம் ஆகியவை தொடர்ந்தாலும், அவற்றின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், YZF-R15 V3.0 பைக்கின் எடை, முன்பைவிட 1 கிலோ மட்டுமே அதிகரித்திருக்கிறது (137 கிலோ). தற்போது இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் இருக்கும் YZF-R15 V3.0 பைக்கில், சர்வதேச மாடலைப் போலவே இங்கும் ஏபிஎஸ் இல்லாதது மைனஸ். ஆனால் இந்தியாவில் புதிதாக அமலுக்கு வரவிருக்கும் மோட்டார் வாகன கட்டுப்பாடு விதிகளின்படி, ஏப்ரல் 1, 2018-க்குப் பின்பு வெளிவரும் 125-சிசிக்கும் அதிகமான பைக்குகளில், ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
இதுவே ஏப்ரல் 1, 2018-க்கு முந்தைய மாடலாக இருந்தால், அதில் ஏபிஎஸ் அமைப்பைப் பொருத்தி வழங்க, ஒரு ஆண்டு காலக்கெடு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த பைக், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள்ளாக (பெரும்பாலும் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ) அறிமுகமாகும் எனத் தெரிகிறது. சென்னை ஆன்ரோடு விலையான 1.34 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் YZF-R15 V2.0 பைக்கைவிட, புதிதாக வரப்போகும் YZF-R15 V3.0 பைக்கின் விலை, நிச்சயம் அதிகமாகவே இருக்கும் எனலாம்.

 
பைக்கில் என்னென்ன மாற்றங்கள் இருக்கின்றன? 

சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் பைக்கில், அப்சைட்-டவுன் ஃபோர்க், ஜப்பானின் IRC tடியூப்லெஸ் டயர்கள், ஸ்டைலான முன்பக்க ஃபெண்டர் மற்றும் பின்பக்க அலுமினியம் ஃபுட் பெக் ஆகியவை இருந்தன. ஆனால் இந்தியாவில் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் மாடலில், வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க், MRF டியூப்லெஸ் டயர்கள், வழக்கமான முன்பக்க ஃபெண்டர் மற்றும் ஸ்டீல் பின்பக்க ஃபுட் பெக் உள்ளன.
 
 
 
 
டயரின் மேக்கில் வித்தியாசம் இருந்தாலும், அளவுகளில் மாற்றம் இருக்காது என நம்பலாம் (Front - 100/80-R17, Rear: 140/70-R17). மற்றபடி தற்போது விற்பனையில் இருக்கும் பைக்கில் இருக்கும் 150 சிசி இன்ஜினுக்குப் பதிலாக, சர்வதேச மாடலில் பொருத்தப்பட்டுள்ள சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, 4 வால்வு, 155சிசி, Fi-இன்ஜினே, இந்த பைக்கில் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்! 
 
 
இதில் அனைத்து வேகங்களிலும் பவரைச் சீராக வழங்கக்கூடிய யமஹாவின் புகழ்பெற்ற வேரியபிள் வால்வ் ஆக்டுவேஷன் (VVA) தொழில்நுட்பம் மற்றும் Diasil & Forged இன்ஜின் பாகங்கள் இடம்பெற்றிருப்பதால், முன்பைவிட அதிகமான 19.3bhp@10,000rpm பவரும், 1.47kgm@8,500rpm டார்க்கையும் இது வெளிப்படுத்துகிறது. மேலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன், ஸ்லிப்பர் க்ளட்ச் அமைப்பும் இருப்பது பெரிய ப்ளஸ்.
 
 
 
 
ஆனால் பைக்கின் விலையைக் கட்டுக்குள் வைக்க, இதில் எத்தனை வசதிகளை யமஹா விட்டுக்கொடுக்கும் என்பது புதிராகவே இருக்கிறது. ஒருவேளை வேரியபிள் வால்வ் ஆக்டுவேஷன் நீக்கப்பட்டால், இந்திய மாடலின் பவர் மற்றும் டார்க் சற்று குறையும். மேலும் ஸ்லிப்பர் க்ளட்ச் அமைப்பும் இருக்குமா என்பது, பஜாஜ் பல்ஸர் RS200 பைக்கிற்குப் போட்டியாக இந்த பைக் விற்பனைக்கு வரும்போதுதான் தெரியவரும். 


- ராகுல் சிவகுரு. (ஸ்பை படம் - BikeAdvice.in)
  - ரஞ்ஜித் ரூசோ.
 
 
TAGS :   YAMAHA, YZF-R15 V3.0, 2008, 2011, 2015, 2018, LIQUID COOLING, 6 SPEED, SLIPPER CLUTCH, DELTABOX FRAME, ALUMINIUM SWINGARM, ALLOY FOOTPEGS, ABS, 4 VALVES, VVA, 155CC, FI, BS-IV, PETROL, HONDA, CBR 150R.