இந்தியச் சாலைகளில், அமெரிக்காவின் 2,000சிசி சாப்பர் பைக்குகள் !
Posted Date : 15:31 (09/11/2017)
Last Updated : 15:42 (09/11/2017)


சாப்பர் (Chopper)... அமெரிக்காவில் பிரபலமான இவ்வகை பைக்குகள், மிக நீளமான முன்பக்கம் - கட்டுமஸ்தான பாடி - மிக அகலமான பின்பக்க டயர் என வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. ரைடரின் தேவைக்கு ஏற்ப இவற்றை கஸ்டமைஸ் செய்துகொள்ள முடியும் என்பதால், 1950 முதலே பைக் மாடிஃபிகேஷன் செய்பவர்களின் செல்லப் பிள்ளையாக இருப்பவை சாப்பர்கள்தான்! இப்படிப்பட்ட சுவாரஸ்யமான பின்னணி கொண்ட சாப்பர்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? இதற்கான விடைதான் அவான்ச்சுரா சாப்பர்ஸ் (Avantura Choppers) எனும் இந்திய நிறுவனம்;

 

 

இதற்காகக் கடந்த 7 ஆண்டுகளாக, இந்தியாவில் சாப்பர் பைக்குகளுக்கான வாய்ப்புகளை அலசி ஆராய்ந்துள்ளார்கள். அதில் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 2 ஆண்டுகளில் சாப்பர் பைக்குகளைத் தயாரித்திருக்கிறார்கள். தற்போது அராய் (ARAI) அமைப்பின் Road-Legal சான்றிதழுக்கான இறுதிகட்ட பரிசோதனையில் இருக்கும் இந்த பைக்குகள், நவம்பர் மாதத்தில் அறிமுகமாக உள்ளன. 


அவான்ச்சுரா சாப்பர்ஸ் நிறுவனத்தின் பின்னணி மற்றும் மாடல்கள்:

கவுரவ் அகர்வால் மற்றும் விஜய் சிங் எனும் இரு பைக் ஆர்வலர்களால் இந்தியாவில் துவங்கப்பட உள்ள அவான்ச்சுரா சாப்பர்ஸ், மும்பையில் வாசை எனும் இடத்தில் தொழிற்சாலையை நிறுவியுள்ளது. இதில் கவுரவ் அகர்வால், இந்நிறுவனத்தின் CEO-வாகப் பதவி வகிக்கிறார். விஜய் சிங், Chief Revenue Officer ஆகப் பொறுப்பேற்றிருக்கிறார். கெவின் அல்சாப் (Kevin Alsop), அவான்ச்சுரா சாப்பர்ஸ் நிறுவனத்தின் Chief Design Officer ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பிரபலமான பிக் பியர் சாப்பர்ஸ் (Big Bear Choppers) எனும் நிறுவனத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர் இவர்தான்! ஆனால் கடந்த 2008-ல் நிகழ்ந்த சர்வதேச பொருளாதார மந்தநிலையால், இந்நிறுவனம் மூடுவிழாவைக் கண்டுவிட்டது.  
 
 
 

எனவே கெவின் அல்சாப், சாப்பர் பைக்கின் டிசைன் மற்றும் கட்டுமானத்தைக் கவனித்துக் கொள்வார். இவை அமெரிக்க சாலைகளுக்கு ஏற்ற வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை இந்திய சாலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் பணியை, கெவின் அல்சாப் ஏற்றுக் கொண்டிருக்கிறார். எனவே கரடுமுரடான இந்தியச் சாலைகளுக்கு ஏற்ற கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப் ஆகியவை இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக, இரண்டு சாப்பர் பைக்குகளை இந்தியாவில் களமிறக்க உள்ளது இந்நிறுவனம். இவை மெக்கானிக்கலாக ஒன்றுதான் என்றாலும், டிசைன் மற்றும் இன்ஜின் டியூன் செய்யப்பட்ட விதத்தில் மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. 

 
அவான்ச்சுரா சாப்பர்ஸ் - டெக்னிக்கல் விபரங்கள்:

சாப்பர் பைக்குகளைத் தயாரிப்பதில் முன்அனுபவம் மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்தே, தனது பைக்குகளுக்கான ஹை-டெக் உதிரிபாகங்களைப் பெற உள்ளது அவான்ச்சுரா சாப்பர்ஸ். இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் பைக்கிலே முதன்முறையாக, 2,000சிசி வி-ட்வின் (V-Twin) இன்ஜின், இந்த பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, க்ரூஸர் மற்றும் சாப்பர் பைக்குகளுக்கு வி-ட்வின் இன்ஜின்களைத் தயாரிக்கும் S&S எனும் அமெரிக்க நிறுவனம், அவான்ச்சுரா சாப்பர்ஸ் நிறுவனத்துக்கு இன்ஜின்களை வழங்க உள்ளது. இதனுடன் மற்றொரு அமெரிக்க நிறுவனமான ரிவேரா (Rivera) தயாரித்திருக்கும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சஸ்பென்ஷன், ப்ரொக்ரெஸிவ் (Progressive) எனும் அமெரிக்க நிறுவனம் சப்ளை செய்யவிருக்கிறது.
 
 
 
 
இங்கிலாந்தைச் சேர்ந்த ஏவான் (Avon) - டயர்கள், ஃப்ரான்ஸைச் சேர்ந்த பெரிங்கர் (Beringer) - பிரேக்ஸ், ஜெர்மனியைச் சேர்ந்த கெல்லர்மென் (Kellermen) - இண்டிகேட்டர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த மஸ்டாங் சீட்ஸ் (Mustang Seats) என சாப்பர் பைக்குகளுக்குத் தேவையான பவர் மற்றும் தரத்தை, எந்தவிதமான சமரசமும் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவே, உலகளவில் பிரபலமான நிறுவனங்களின் உதிரிபாகங்கள் பைக்கில் பயன்படுத்தப்பட உள்ளன. ஆனால் பைக்கின் அடிப்படைப் பாகங்களான ஃப்ரேம், ஃபெண்டர், பெட்ரோல் டேங்க் ஆகியவை, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. 
 

விலை மற்றும் டீலர் நெட்வொர்க்:

தொழில்நுட்பரீதியில் பார்க்கும்போது, ஒரு பிரிமியம் லக்ஸூரி தயாரிப்பிற்கான அனைத்து விஷயங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது அவான்ச்சுரா சாப்பர்ஸ். எனவே விலை விஷயத்திலும் பிரிமியமாக, அதாவது 20 முதல் 25 லட்ச ரூபாயில் இருந்துதான் (எக்ஸ் ஷோரூம் விலை), இந்த பைக்குகளின் விலை ஆரம்பமாகும் எனத் தகவல்கள் வருகின்றன. அடுத்த ஆண்டு இறுதிக்குள்ளாக, 9 டீலர்களை இந்தியாவெங்கும் திறக்கும் முடிவில் இருக்கும் இந்நிறுவனம், முதற்கட்டமாக 2 டீலர்களை (டெல்லி மற்றும் மும்பை) துவங்க உள்ளது. மேலும் டீலர்களில் இருக்கும் சிமுலேட்டர் (Simulator) வாயிலாக, வாடிக்கையாளர் தனது பைக்கை, பிடித்தமான ஆக்சஸரிஸ்களுடன் டிஜிட்டலாக கஸ்டமைஸ் செய்துப் பார்க்கும் வசதி இருப்பது பெரிய ப்ளஸ்.
 
 
 
 
ராயல் என்ஃபீல்டு, ஹூண்டாய் போன்ற ஒருசில ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இந்தியாவில் Brand Store-களை வைத்திருக்கின்றன. எனவே தனது டீலர் நெட்வொர்க்கைப் போதுமான அளவுக்கு விரிவுபடுத்திய பிறகு, பிரத்யேகமான Brand Store-களையும் ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறது அவான்ச்சுரா சாப்பர்ஸ். மேலும் சாப்பர் பைக்குகளுக்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, உற்பத்தி ஆகியவற்றிலும் கணிசமான அளவில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்நிறுவனம் இருக்கிறது. பிரிமியம் பிராண்ட் என்பதைப் பறைசாற்றும் விதமாக, வாரன்ட்டி - உதிரிபாகங்கள் - சர்வீஸ் ஆகியவற்றில் வாடிக்கையாளருக்கு மனநிறைவைத் தரும்விதமாக பணிபுரிய உள்ளதாக அவான்ச்சுரா சாப்பர்ஸ் தெரிவித்துள்ளது. 
 

அவான்ச்சுரா சாப்பர்ஸ் எதிர்கொள்ளப்போகும் சவால்கள்:

தனித்தன்மையான தயாரிப்பாக இருந்தாலும், அவான்ச்சுரா சாப்பர்ஸ் செல்லவேண்டிய பாதை சவால்மிக்கதாகவே இருக்கும். ஒரு புதிய நிறுவனத்தை, மக்களின் நன்மதிப்பைப் பெறும்விதமாக மாற்றுவதில்தான், இந்தியாவில் இந்நிறுவனத்தின் வெற்றிவாய்ப்பு அடங்கியிருக்கிறது. அடுத்த ஆண்டில் 200 பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கும் அவான்ச்சுரா சாப்பர்ஸ், 2022-க்குள்ளாக 8 சதவிகித சந்தை மதிப்பை எட்டும் முனைப்பில் இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில், 1,600சிசிக்கும் அதிகமான பைக்குகளின் மீதான டிமாண்ட் அதிகரிக்கும் என்பதே, இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. இது கேட்பதற்கு மலைப்பாக இருந்தாலும், முதலில் நிறுவனத்தின் திறமையை மக்களுக்கு உணர்த்துவதுதான், இவர்களுக்கு முன்பாக இருக்கும் மிகப்பெரிய சவால்.
 
 
 
 
ஏனெனில், அடிப்படையில் அமெரிக்க அல்லது ஐரோப்பிய பின்னணி ஏதும் இல்லாமல், இந்திய நிறுவனமாக இருக்கும் அவான்ச்சுரா சாப்பர்ஸ், க்ரூஸர் பைக்குகளில் புகழ்பெற்ற ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப் போன்ற உலக நிறுவனங்கள் பெற்ற நம்பிக்கையைப் பெற முடிந்தால் மட்டுமே, இந்த சாப்பர் பைக்குகளை வாங்குவதற்கு மக்கள் முன்வருவர் எனலாம். 'பைக் ஆர்வலர்களின் சங்கமம்' எனப்படும் 2017 India Bike Week, விரைவில் கோவாவில் துவங்கவிருக்கிறது. எனவே அங்கே தனது தயாரிப்புகளைக் காட்சிபடுத்த உள்ளது அவான்ச்சுரா சாப்பர்ஸ். இதனைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்திலேயே விற்பனை ஆரம்பமாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது!  

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   AVANTURA CHOPPERS, USA, INDIA, 2000CC, S&S, RIVERA, PROGRESSIVE, AVON, BERINGER, KELLERMEN, MUSTANG SEATS, CKD, 25 LAKHS, CRUISER BIKE.