11.70 லட்சத்துக்குக் களமிறங்கியது ரெனோ கேப்ச்சர்!
Posted Date : 21:01 (09/11/2017)
Last Updated : 21:06 (09/11/2017)

 

''டஸ்ட்டர் & க்விட் ஆகிய கார்கள் இல்லையென்றால், ரெனோ நிறுவனம் இந்தியாவில் இல்லை'' என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில் இப்போதும்கூட, 4 வீல் டிரைவ் மிட்சைஸ் எஸ்யுவி வாங்க நினைப்பவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது டஸ்ட்டர்தான்! ''4 வீல் டிரைவ், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பெட்ரோல் இன்ஜின் என எல்லாமே இருக்கிறது... ஆனால் ஹூண்டாய் க்ரெட்டா போல மாடர்ன்னாக இல்லையே'' என டஸ்ட்டர் வைத்திருப்பவர்களின் மனக்குமுறல்களைக் கேட்ட ரெனோ, அதற்காகக்  களமிறக்கி இருக்கும் கார்தான் கேப்ச்சர்.
ஐரோப்பிய நாடுகளில் ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படும் Kaptur மாடலைப்போலவே, 
 
 
 
 
இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரப்போகும் கேப்ச்சர் காரை வடிவமைத்திருக்கிறது ரெனோ. எனவே டஸ்ட்டருடன் ஒப்பிடும்போது, கேப்ச்சரின் அளவுகளில் (4329மிமீ நீளம், 1813மிமீ அகலம், 1613மிமீ உயரம், 2673மிமீ வீல்பேஸ், 210மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்) கொஞ்சம் வித்தியாசம் தெரிகிறது. படையப்பா படத்தில் ரஜினி செந்திலைப் பார்த்து, ''மாப்பிள்ளை இவர்தான்; ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னோடது'' என்பார். அதைப்போலவே... M0 ப்ளாட்ஃபார்ம், 106bhp பவர் மற்றும் 14.2kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 110bhp பவர் மற்றும் 24kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், சாஃப்ட் ரோடருக்கு ஏற்ற சஸ்பென்ஷன் செட்-அப் என கேப்ச்சரின் மெக்கானிக்கல் பாகங்கள் அனைத்தும் டஸ்ட்டரில் இருப்பவைதான்! 
 

 
 
எனவே டஸ்ட்டரில் இருந்து கேப்ச்சரை வேறுபடுத்திக் காட்டுவதற்காக, வெளிப்புறத்தில் அகலமான கிரில், LED ஹெட்லைட், LED டெயில்லைட், DRL மற்றும் Diffuser உடனான முன்பக்க & பின்பக்க பம்பர், பாடி பேனல்கள் (பானெட், கதவுகள், பெண்டர், டெயில்கேட்), கதவுகளில் வைக்கப்பட்டிருக்கும் ரியர் வியூ மிரர்களில் தொடங்கி, உட்புறத்தில் இருக்கும் டூயல் டோன் டேஷ்போர்டு வரை என அதிரடியான மாற்றங்களைச் செய்திருக்கிறது ரெனோ. இது காரின் டிசைன் மற்றும் பொசிஷனிங்கிலேயே தெளிவாகத் தெரிகிறது. டஸ்ட்டர் ஒரு முழுமையான எஸ்யூவி என்றால், கேப்ச்சர் ஒரு க்ராஸ்ஓவர் எஸ்யுவியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் போட்டியாளர்களைப் போலவே, இதிலும் Personalisation பேக்கேஜ் வழங்கப்பட்டிருப்பது ப்ளஸ்.
 
 
 
 
வெளிப்புறத்தைப் போலவே, வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை நினைவுபடுத்தும் வகையிலான இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், சிங்கிள் பீஸ் சென்டர் கன்சோல், மெட்டல் ஃப்னிஷ், பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் என ஆங்காங்கே மாடர்ன் அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் ஸ்விட்ச்கள், டச் ஸ்க்ரீன், கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்டீயரிங் வீல், ஏஸி வென்ட், கியர் லீவர் எனப்பல பாகங்கள், டஸ்ட்டரில் இருப்பவைதான் என்பதுதான், கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஆனால் டஸ்ட்டரின் பூட் ஸ்பேஸ் 475 லிட்டர் என்றால், கேப்ச்சரில் அது 392 லிட்டராகக் குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, டஸ்ட்டரைவிட கேப்ச்சரின் கேபின் ரிச்சான தோற்றத்தில் இருப்பதுடன், வெளியே கதவுக் கைப்பிடிகளும் Lift Type ஆக மாறியிருப்பது ஆறுதல். 
 

 
 
டீசல் மாடலுக்கு என ஸ்பெஷலாக வழங்கப்பட்டிருக்கும் Platine எனும் டாப் வேரியன்ட்டில், 17 இன்ச் அலாய் வீல்கள், 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் சீட்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஸ்மார்ட் கீ உடனான புஷ் பட்டன் ஸ்டார்ட், LED ஹெட்லைட் மற்றும் LED டெயில்லைட், க்ரூஸ் கன்ட்ரோல், Eco Mode, காற்றுப்பைகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ரிவர்ஸ் கேமரா, சாட்டிலைட் நேவிகேஷன், ISOFIX, ரியர் ஏசி வென்ட், ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி, ஆம்பியன்ட் லைட்டிங், ESP, HSA என அதிக வசதிகள் இருக்கின்றன. ஆனால் விலை குறைவான கார்களில் கூட இருக்கும் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை, இங்கே இல்லாதது நிச்சயம் மைனஸ்தான். பாதுகாப்பைப் பொறுத்தவரை, கேப்ச்சரின் அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப்பைகள், ABS, EBD, பிரேக் அசிஸ்ட் ஆகியவை ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டுள்ளதுடன்,
 
 
 
 
விரைவில் அமலுக்கு வரவிருக்கும் Offset Frontal Crash and Lateral Crash டெஸ்ட்டையும் கேப்ச்சர் பாஸ் செய்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் Kaptur, Latin NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது 11.70 - 17.22 லட்ச ரூபாய் விலையில், ரெனோவின் நவம்பர் மாதப்பரிசாக, கேப்ச்சர் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விலையை வைத்துப் பார்க்கும்போது, ஹூண்டாய் க்ரெட்டா - மாருதி சுஸூகி S-க்ராஸ் - ஹோண்டா BR-V ஆகிய க்ராஸ்ஓவர்களைத் தவிர, டாடா ஹெக்ஸா -  மஹிந்திரா XUV 5OO - ஜீப் காம்பஸ் போன்ற எஸ்யூவிகளுடனும் போட்டி போடுகிறது கேப்ச்சர். ஏற்கனவே இதன் புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில், மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டை கேப்ச்சர் கேட்ச் செய்யுமா என்பது, போகப்போகத்தான் தெரியும்! இந்த காரின் சென்னை ஆன் ரோடு அறிமுக விலைகள் பின்வருமாறு, 
 

 
 
1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்: ரெனோ கேப்ச்சர்

RXE: 11.70 லட்ச ரூபாய்
RXL: 13.65 லட்ச ரூபாய்
RXT Mono Tone: 14.39 லட்ச ரூபாய்
RXT Dual Tone: 14.60 லட்ச ரூபாய்

 
1.5 லிட்டர் டீசல் இன்ஜின்: ரெனோ கேப்ச்சர்

RXE: 13.98 லட்ச ரூபாய்
RXL: 15.33 லட்ச ரூபாய்
RXT Mono Tone: 16.07 லட்ச ரூபாய்
RXT Dual Tone: 16.27 லட்ச ரூபாய்
Platine Mono Tone: 17.01 லட்ச ரூபாய்
Platine Dual Tone: 17.21 லட்ச ரூபாய்

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   RENAULT, CAPTUR, HYUNDAI CRETA, JEEP COMPASS, RENAULT DUSTER, HONDA BR-V, MARUTI SUZUKI S-CROSS, TATA HEXA, MAHINDRA XUV 5OO, DIESEL.