டெஸ்ட்டிங்கில் மஹிந்திரா XUV 5OO பெட்ரோல் எஸ்யூவி..மோ.வி ஸ்பை படங்கள் உள்ளே!
Posted Date : 18:22 (10/11/2017)
Last Updated : 18:35 (10/11/2017)


XUV 5OO.... மஹிந்திராவின் முதல் மோனோகாக் எஸ்யூவியான இது, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகமானது. அட்டகாசமான டிசைன், அதிகப்படியான வசதிகள், அதிரடியான விலை என அசத்தியதால், கார் விற்பனைக்கு வந்த 10 நாட்களிலேயே இதன் புக்கிங், 8 ஆயிரம் கார்களைத் தாண்டியது. பின்பு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் Lucky Draw முறையில் மீண்டும் இந்த எஸ்யூவியின் புக்கிங்கை மஹிந்திரா துவக்கியது தனிக்கதை. இப்படி வெற்றிகரமான தயாரிப்பாக இருந்த XUV 5OO, காம்பேக்ட்டான புதிய போட்டியாளர்களால் (ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ்) தனது இடத்தை இழந்தது. அதனைச் சரிசெய்யும் விதமாக, கடந்த 2015-ல் XUV 5OO-ன் பேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கியது மஹிந்திரா.

 

 

இது முந்தைய மாடலைவிட டிசைனில் கொஞ்சம் மாற்றங்களைப் பெற்றிருந்ததுடன், முன்பைவிட அதிக வசதிகளையும் கொண்டிருந்தது. ஆனால் டொயோட்டா இனோவா க்ரிஸ்டா, டாடா ஹெக்ஸா, ஜீப் காம்பஸ் எனப் புதிய போட்டியாளர்கள் வரிசையாக வெளிவந்ததால், மஹிந்திராவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த காரின் விற்பனை அமையவில்லை. எனவே இழந்த இடத்தை மீட்டெடுக்கும் விதமாகவும், பெட்ரோல் எஸ்யூவிகளுக்கு ஏற்பட்டிருக்கும் டிமாண்டை மனதில் வைத்தும், XUV 5OO-ன் இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட் மாடலை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது மஹிந்திரா. பாண்டிச்சேரியில் இந்த எஸ்யூவி டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது, அதனைப் படம் பிடித்திருக்கிறார், மோட்டார் விகடனின் வாசகரான அர்ஜூன்.

 


 
 
படங்களைப் பார்க்கும்போது, எதிர்பார்த்தபடியே XUV 5OO-ன் டிசைனில் சின்னச் சின்ன மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. இதற்கு இந்த எஸ்யூவியின் க்ரில் மற்றும் டெயில்கேட் ஆகியவை சிறந்த உதாரணம். சமீபத்தில் அறிமுகமான KUV 1OO NXT போலவே, XUV 5OO-ன் டிசைனையும் மஹிந்திரா பிரிமியமாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைப் பறைசாற்றும் விதமாக, ஸ்பை படத்தில் இடம்பெற்றிருக்கும் கார் முழுவதுமாக Camouflage செய்யப்பட்டிருக்கிறது. எனவே Sheet Metal-ல் வித்தியாசங்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
 
 
 
 
ஆனால் ஹெட்லைட், டெயில் லைட், அலாய் வீல்கள், பம்பர் ஆகியவை, தற்போதைய மாடலில் இருப்பதுபோன்றே இருக்கின்றன. XUV 5OO-ன் கேபினைப் பொறுத்தமட்டில், இது அப்படியே தொடரும் எனலாம். ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதத்தில்தான், XUV 5OO-ன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை மேம்படுத்தியது மஹிந்திரா. ஆண்ட்ராய்டு ஆட்டோ, கார் ஓட்டப்படும் விதத்தைப் பற்றிச் சொல்லக்கூடிய Ecosense, Bluesense, Emergency Call, Connected Apps போன்ற பல வசதிகளை இது கொண்டிருக்கிறது. மேலும் கேபினில் இடம்பெற்றுள்ள அப்ஹோல்சரி மற்றும் பிளாஸ்டிக்கிலும் முன்னேற்றங்கள் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. 
 
 
 

மேலே சொன்ன விஷயங்களைத் தாண்டி, XUV 5OO-ல் மிக முக்கியமான மாற்றம், அதன் பானெட்டுக்கு அடியேதான் நிகழ உள்ளது. தற்போதைய மாடலில் இருக்கும் 2.2 லிட்டர் mHawk 140 டீசல் இன்ஜினை, 170bhp பவரை வெளிப்படுத்தும் வகையில் ரீ-டியூன் செய்ய உள்ளது மஹிந்திரா. இதற்காகத் தனது TUV 3OO காரில் இருக்கும் சிறிய mHawk 100 இன்ஜினில் இருக்கும் Two-Stage டர்போசார்ஜர் தொழில்நுட்பம், இங்கே பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களும் அதிகம்! இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்களுக்கு இடையேயான விலை வித்தியாசம், தற்போது 11 ரூபாய் என்றளவில் இருக்கிறது. எனவே பெட்ரோல் கார்களை நோக்கி இந்திய கார் சந்தை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், XUV 5OO பேஸ்ஃலிஃப்ட்டில் பெட்ரோல் இன்ஜினைக் களமிறக்க உள்ளது மஹிந்திரா.
 
 
 
 
இது 2.2 லிட்டர் mHawk 140 டீசல் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளதால், இதுவும் 140bhp பவர் மற்றும் 33kgm டார்க்கையே வெளிப்படுத்தும் எனத் தகவல்கள் வருகின்றன. ஆனால் டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கும் நிலையில், முதற்கட்டமாக 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனேயே பெட்ரோல் இன்ஜினை மஹிந்திரா விரைவில் அறிமுகப்படுத்தும் எனத் தெரிகிறது. இது ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலுக்கு நேரடிப் போட்டியாளராகப் பொசிஷன் செய்யப்பட உள்ளது. பின்னாளில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வெளிவரும் என நம்பலாம். 
 
 
 

XUV 5OO-ன் டீசல் வேரியன்ட்கள் அனைத்தும் W முறையில் பெயரிடப்பட்டுள்ளன. எனவே ஒரே டாப் வேரியன்ட்டில் களமிறங்க உள்ள இந்த எஸ்யூவியின் பெட்ரோல் மாடல், G முறையில் பெயரிடப்பட உள்ளது. சமீபத்தில் வெளிவந்த W9 வேரியன்ட்டுக்கு மேட்ச்சாக, G9 எனும் வேரியன்ட்டில், தனது புதிய 2.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலை மஹிந்திரா விற்பனைக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சிறப்பான அறிமுக விலையை மனதில் வைத்து, சில வசதிகள் இருக்காது எனச் சொல்லப்படுகிறது.
 
 
 
 
எனவே 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 2 காற்றுப்பைகள், ABS, EBD, ESP, Rollover Mitigation, TPMS, கீ-லெஸ் என்ட்ரி உடனான புஷ் பட்டன் ஸ்டார்ட், அலாய் வீல்கள் போன்ற வசதிகள் இருந்தாலும், Connected Apps - லெதர் சீட்ஸ் - எலெக்ட்ரிக் சன்ரூஃப் - 6 காற்றுப்பைகள் போன்றவை இருக்காது எனத் தெரிகிறது. இந்த வகை கார்களில், மைலேஜுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது என்றாலும், நிச்சயமாக பெர்ஃபாமென்ஸை விரும்புபவர்கள் அதிகம்; எனவே ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் இருக்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் ஒப்பிடும்போது, இது எந்தளவுக்கு ஈர்க்கும் என்பது, போகப் போகத்தான் தெரியும்!   

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   MAHINDRA, XUV 500, INDIA, SUV, PETROL, DIESEL, HYUNDAI CRETA, RENAULT CAPTUR, MARUTI SUZUKI S-CROSS, TATA HEXA, JEEP COMPASS, RENAULT DUSTER, TOYOTA INNNOVA CRYSTA, FACELIFT, MHAWK 140.