பஜாஜ் அவென்ஜருக்குச் செக்... சுஸூகியின் மாடர்ன் க்ரூஸர் - இன்ட்ரூடர் 150: பர்ஸ்ட் லுக் !
Posted Date : 22:50 (10/11/2017)
Last Updated : 19:24 (28/12/2017)


 

 

இன்ட்ரூடர் என்ற பெயரில், 150-160சிசி பிரிவில் க்ரூஸர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது சுஸூகி. இந்தியா மற்றும் சர்வதேச பைக் சந்தைகளில் தற்போது விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் XL சைஸ் க்ரூஸர்களான இன்ட்ரூடர் M800 மற்றும் இன்ட்ரூடர் M1800 ஆகியவற்றை நினைவுபடுத்தும்படியான டிசைன், இந்த பைக்கின் மாடர்ன் க்ரூஸர் என்ற பொசிஷனிங்கை நியாயப்படுத்தி விடுகிறது. ஹெட்லைட்டில் இருக்கும் LED பார்க்கிங் லைட், பார்க்க ஸ்டைலாக இருக்கிறது. தவிர முன்பக்கத்தில் பிரம்மாண்டமான டேங்க் ஸ்கூப்புடன் வசிகரிக்கும் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க், ஜிக்ஸரில் இருப்பதைவிட ஒரு லிட்டர் குறைவு - அவென்ஜரைவிட 3 லிட்டர் குறைவு! மேலும் இது பைக்கின் சிறிய இன்ஜினை அழகாகக் கவர் செய்துவிட்டது என்பதே உண்மை.
 
 
 
 
அவென்ஜரைவிட 15மிமீ அதிக உயரத்தில் இருக்கும் இன்ட்ரூடர் பைக்கின் ரைடர் மற்றும் பில்லியனுக்கான ஸ்ப்ளிட் சீட் (740 மிமீ), தேவையான குஷனிங்குடன் சொகுசாக இருக்கிறது. ஹயபூஸா பைக்கில் இருப்பதுபோன்ற LED டெயில் லைட்டுக்கு மேலே இருக்கும் க்ராப் ரெயில் மற்றும் அதற்குக் கிழே இருக்கும் மட்கார்ட்டும் அழகாக பொருந்தியுள்ளன. என்றாலும், இவற்றின் ஆஜானுபாகுவான தோற்றம், இந்த பைக்கில் இருக்கும் அகலமான 140/60 R17 டயரையே சிறிதாகக் காட்டுகின்றன என்பதே நிதர்சனம். தவிர முன்பக்கத்தில் இருக்கும் கெத்து, பின்பக்கத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங்; அதாவது ஒரு பாடி பில்டர், ஒல்லியான கால்களைக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? தவிர Dual Port பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ட்வின் எக்ஸாஸ்ட் பைப், நீளமாகவும் பெரிதாகவும் இருக்கிறதோ? 
 

 
 
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒரு 300-400சிசி பைக்கின் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது இன்ட்ரூடர் 150. மேலும் பைக்கைச் சூழ்ந்திருக்கும் பிளாஸ்டிக்ஸ், நீண்ட காலப் பயன்பாட்டில் நிலைகுலையாமல் இருக்குமா என்பதை, காலம்தான் சொல்லும்! என்னதான் டிசைன் வித்தியாசமாக இருந்தாலும், மெக்கானிக்கலாக ஜிக்ஸருக்கும் இன்ட்ரூடருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்த பைக்கில் இருக்கும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் - மோனோஷாக் சஸ்பென்ஷன், அலாய் வீல்கள் - டயர்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ரியர் வியூ மிரர்கள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவை, ஜிக்ஸர் பைக்கில் இருந்தே பெறப்பட்டுள்ளன.
 
 
 
 
ரியர் வியூ மிரர்களில் கூடுதலாக க்ரோம் பூச்சும், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் கூடுதலாக ஏபிஎஸ் லைட்டும், கறுப்பு நிற டிஸ்க் பிரேக் காலிப்பர்களும் இடம்பெற்றுள்ளன. சேஸியும் ஒன்றுதான் என்றாலும், க்ரூஸர் கோட்பாடுகளுக்கு ஏற்ப பல மாறுதல்களை (பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கும் ஹேண்டில்பார், முன்னோக்கி வைக்கப்பட்டிருக்கும் ஃபுட் பெக்ஸ், நீளமான வீல்பேஸ், புதிய சப் ஃப்ரேம்) சுஸூகி செய்திருக்கிறது. இப்படி கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், ஜிக்ஸரை விட 13 கிலோ எடை கூடியிருக்கிறது இன்ட்ரூடர் 150 (148 கிலோ). அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்கும் இதே எடைதான்; கிரவுண்ட் கிளியரன்ஸும் 170மிமீ.
 

 
 
நிலைமை இப்படி இருக்க, இந்த இரண்டு பைக்கிலும் இருப்பது, 14.8bhp பவர் மற்றும் 1.4kgm டார்க்கை வெளிப்படுத்தும் ஸ்மூத்தான 154.9சிசி கார்புரேட்டட் இன்ஜின்தான்! எனவே அதிக எடையைச் சமாளிக்கும் விதமாக, இன்ஜினின் இன்டேக் - எக்ஸாஸ்ட் அமைப்பு, செயின் ஸ்ப்ராக்கெட், கியர் ரேஷியோ ஆகியவற்றை மாற்றியமைத்திருக்கிறது சுஸூகி. எனவே க்ரூஸர் பைக்குகளுக்குத் தேவையான மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ், இந்த பைக்கில் இருக்கும் எனலாம். ஆனால் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்கைப் போலவே, இதுவும் 100கிமீக்கும் அதிக வேகங்களில் செல்லும்போது கொஞ்சம் டல்லாக இருக்குமா என்பது, பைக்கை ஓட்டிப்பார்த்தால் தெரிந்துவிடும்.
 
 
 
 
ஜிக்ஸர் SF பைக்கைப் போலவே, இன்ட்ரூடர் 150 பைக்கிலும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷனை, அடுத்த ஆண்டில் சுஸூகி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடை - அளவுகள் - இன்ஜின் போன்ற ஏரியாக்களில் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்குக்குச் சமமாகவே இருக்கிறது இன்ட்ரூடர் 150. ஆனால் அவென்ஜரை விட 47மிமீ குறைவான நீளம் (2130 மிமீ) மற்றும் 75மிமீ குறைவான வீல்பேஸ் (1405மிமீ) காரணமாக, கையாளுமையில் இன்ட்ரூடர் அசத்தலாக இருக்கும் எனத் தெரிகிறது. ஜிக்ஸரில் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவு என்ற பிரச்னையை, இன்ட்ரூடரில் 10மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸைக் (169மிமீ) கொடுத்து சரிசெய்துவிட்டது சுஸூகி. 
 

 
 
இந்தப் புதிய மாடர்ன் க்ரூஸர் பைக்கின் புக்கிங், சுஸூகி டீலர்களில் ஏற்கனவே துவங்கிவிட்டதுடன், இந்த மாதத்தின் இறுதிக்குள்ளாக மாதத்தின் துவக்கத்தில், டீலர்களுக்கு பைக்குகளின் Dispatch துவங்கும் என நம்பலாம். பஜாஜின் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்குடன் ஒப்பிடும்போது, அதிக வசதிகளை ஸ்டாண்டர்டாகக் கொண்டுள்ளது இன்ட்ரூடர் 150. தடிமனான ஃபோர்க் மற்றும் டயர்கள், டிஜிட்டல் மீட்டர், LED டெயில் லைட், பின்பக்க 220 மிமீ டிஸ்க் பிரேக், மோனோஷாக் சஸ்பென்ஷன், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவை, இதற்கான சிறந்த உதாரணம். இப்படி அவென்ஜரில் இல்லாத பல விஷயங்களை இன்ட்ரூடரில் சேர்த்திருக்கும் சுஸூகி, பைக்கின் விலையையும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்டது! சென்னை ஆன் ரோடு விலையான 93,488 ரூபாய்க்கு, பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 விற்பனை செய்யப்படும் நிலையில்,
 
 
 
 
இன்ட்ரூடர் 150 பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையே 98,340 ரூபாயாக இருக்கிறது! இதை வைத்துப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட இதே எக்ஸ் ஷோரூம் விலையைக் கொண்டிருக்கும் ஜிக்ஸர் SF-Fi ABS பைக்குக்குச் சமமான 1.13 லட்சம் என்ற ஆன் ரோடு விலையில்தான், இந்த பைக்கும் கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. அதாவது அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்கைவிட 20 ஆயிரம் ரூபாயும், அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 பைக்கைவிட 10 ஆயிரம் ரூபாயும் அதிகம் மக்களே! ஆனால் இன்ட்ரூடரின் பிரிமியமான டிசைன், அதிகப்படியான வசதிகள், ஸ்மூத் பெர்ஃபாமென்ஸ், சிறப்பான கையாளுமை ஆகியவற்றுக்காக, நிலையான ஒரு ரசிகர் வட்டம் உருவாகும் என தீர்க்கமாக நம்புகிறது சுஸூகி.
 

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   SUZUKI, INTRUDER 150, M800, M1800, CRUISER, GIXXER, 155CC, LED HEADLIGHT AND TAIL-LIGHT, DUAL DISC BRAKES, ABS, CHROME, ALLOY WHEELS, TUBELESS TYRES, DIGITAL METERS, INDIA, BAJAJ, AVENGER STREET 150.