கவாஸாகியின் அட்வென்ச்சர் பைக்: வெர்சிஸ் - X 300 வெற்றி பெறுமா?
Posted Date : 17:51 (28/11/2017)
Last Updated : 13:36 (30/11/2017)

 

“ஒரு அட்வென்ச்சர் பைக்கை வாங்குவதுதான் என் கனவு!” - பைக்கில் லாங் டூர் அடிக்கும் யாரைக் கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள். இந்தியாவில் இந்த செக்மென்ட்டை தொடங்கி வைத்த பெருமை, பட்ஜெட் விலையில் வெளிவந்த ஹீரோ இம்பல்ஸ் பைக்கையே சேரும். நல்ல தயாரிப்பாக இருந்தும், அட்வென்ச்சர் பைக்கிற்குத் தேவையான பவர்-டார்க் இல்லை என்பதால், இதன் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. எனவே பின்னாளில் இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனமும், தனது பங்குக்கு ஹிமாலயன் எனும் அட்வென்ச்சர் பைக்கை, சென்ற ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு முன்பாக அறிமுகப்படுத்தியது.  இந்த பைக்கில் மெக்கானிக்கலாகப் பல பிரச்னைகள் ஏற்பட்டதால், விற்பனையில் இது மாபெரும் தோல்வியைச் சந்தித்தது.
 
 
 
 
இதனைச் சரிசெய்து, BS-IV விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட ஹிமாலயன் பைக்கை, சில மாதங்களுக்கு முன்பாக இந்நிறுவனம் களமிறக்கி விட்டது. ஆக இந்த பைக்கை விட்டால், ₹7.6 லட்சத்துக்குக் கிடைக்கக்கூடிய கவாஸாகி வெர்சிஸ் 650 முதல் ₹22 லட்சத்துக்குக் கிடைக்கக்கூடிய டுகாட்டி மல்ட்டிஸ்ட்ராடா 1200 வரை, அனைத்துமே பிரீமியம் அட்வென்ச்சர் பைக்குகளாகவே இருக்கின்றன. இந்தியாவில் அட்வென்ச்சர் பைக்குகளுக்குத் தற்போது கிடைத்திருக்கும் வரவேற்பை மனதில்வைத்து, பிஎம்டபிள்யூ கேடிஎம் போன்ற சர்வதேச பைக் நிறுவனங்கள், இங்கே தமது அட்வென்ச்சர் பைக்குகளைக் களமிறக்க தக்க நேரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. 
 

 
 
இந்நிலையில்தான், போட்டியாளர்களை எல்லாம் முந்திக்கொண்டு வெர்சிஸ் - X 300 எனும் அட்வென்ச்சர் பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது கவாஸாகி. ₹4.6 லட்சத்துக்கு (டெல்லி எக்ஸ் – ஷோரூம் விலை) வெளிவந்திருக்கும் இது, இந்தியாவில் வெர்சிஸ் சீரிஸ் அட்வென்ச்சர் பைக்குகளின் என்ட்ரி லெவல் மாடலாக இருக்கும். கடந்தாண்டு மிலனில் நடைபெற்ற EICMA ஆட்டோ ஷோவில் காட்சிபடுத்தப்பட்ட இந்த பைக்கில், நின்ஜா 300 பைக்கில் இருக்கும் அதே 296 சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின் - ஸ்லிப்பர் க்ளட்ச் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான் பொருத்தப்பட்டுள்ளது. எனவே நின்ஜா 300 போலவே, வெர்சிஸ் - X 300 பைக்கும் 40bhp@11,500rpm பவர் மற்றும் 2.57kgm@10,000rpm டார்க்கை வெளியிடுகிறது.
 
 
 
 
ஆனால் இதனை அட்வென்ச்சர் பைக்குக்கு ஏற்ற வகையில், கவாஸாகி ட்யூன் செய்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. இந்த பைக்கின் ஃபேரிங்கில் இருக்கும் ஓப்பனிங், ரேடியேட்டருக்கு பின்னால் இருக்கும் ஃபேன் கவர் என கவாஸாகி ஹீட் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தின் சிறப்பம்சங்கள், ரைடரின் கால்களுக்கு இன்ஜின் சூட்டைத் கடத்தாமல் பார்த்துக்கொள்ளும் என நம்பலாம். வெர்சிஸ் - X 300 பைக்கின் முன்பக்கத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 290மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் Uni-Trak கேஸ் மோனோஷாக் சஸ்பென்ஷன் - 220மிமீ டிஸ்க் பிரேக் அமைப்பு இடம்பெற்றுள்ளது. 17 லிட்டர் பெட்ரோல் டேங்க், பெரிய Non-Adjustable விண்ட் ஸ்க்ரீன், உயரமான க்ரோம் எக்ஸாஸ்ட் பைப், முன்பக்க 19 இன்ச் வீல் என அட்வென்ச்சர் பைக்கிறக்கு தேவையான சிறப்பம்சங்களை, கவாஸாகி வெர்சிஸ் - X 300 தன்னகத்தே கொண்டிருக்கிறது. 
 

 
 
மேலும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்குடன் ஒப்பிடும்போது, இது கிரவுண்ட் கிளியரன்ஸ் - இன்ஜின் திறன் - இருக்கை உயரம் ஆகியவற்றில் பின்தங்கிவிடுகிறது. ஆனால் அதிக பவர் - குறைவான எடை - அதிக வசதிகள் - பெரிய பெட்ரோல் டேங்க் - ஏபிஎஸ் - லிக்விட் கூலிங் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - ஸ்லிப்பர் க்ளட்ச் போன்றவை இருப்பது ப்ளஸ். எனவே நெரிசல்மிக்க கரடுமுரடான நகரச் சாலைகளில் ஓட்டுவதற்கும், நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் செய்வதற்கும் ஏற்ற பைக்காக வெர்சிஸ் - X 300 இருக்கும் என,. கவாஸாகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான யூடாகா யமஸிட்டா தெரிவித்துள்ளார். SKD முறையில் பைக்கை பாகங்களாக இறக்குமதி செய்து, தனது முன்னாள் கூட்டாளியான பஜாஜ் நிறுவனத்தின் சக்கான் தொழிற்சாலையில்தான், இந்த அட்வென்ச்சர் பைக்கை கவாஸாகி அசெம்பிள் செய்ய உள்ளது.
 
 
 
 
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த பைக்கிற்கு அதன் விலை வில்லனாக அமையுமோ எனத் தோன்றினாலும், Auxiliary Lights - Engine Guard - Hand Guard - Top Box Mount - Single Pannier Box போன்ற ஆக்ஸசரீஸ்களை, வெர்சிஸ் - X 300 பைக்கில் ஸ்டாண்டர்டாக அளித்திருப்பதன் வாயிலாக, கூடுதல் விலைக்கு கவாஸாகி நியாயம் சேர்த்திருப்பதாகவே தெரிகிறது. பின்னாளில் தேவைபட்டால், Z900 பைக்கில் செய்ததைப் போல, சற்றே குறைவான விலையில் ஆக்ஸசரிஸ் இல்லாத வெர்சிஸ் - X 300 பைக்கை கவாஸாகி விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியங்களும் இருக்கிறது. 

 - ராகுல் சிவகுரு, விநாயக் ராம் (மாணவ பத்திரிகையாளர்)
 
 
TAGS :   KAWASAKI, VERSYS, X-300, ADVENTURE BIKE, INDIA, ROYAL ENFIELD, HIMALAYAN. NINJA 300, ABS, LIQUID COOLING, 6 SPEED GEARBOX, SLIPPER CLUTCH, 4 VALVES, PARALLEL TWIN CYLINDERS, CKD, BAJAJ, CHAKKAN, PLANT, ASSEMBLY.