இந்தியாவில் 50 லட்சம் கார்களை விற்பனை செய்து ஹூண்டாய் சாதனை!
Posted Date : 16:16 (30/11/2017)
Last Updated : 16:22 (30/11/2017)

 

தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் 50 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளதுடன், இந்த இலக்கை வேகமாக அடைந்த கார் நிறுவனம் என்ற பெயரையும் ஒருசேரப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் 50 லட்சமாவது காராக, புதிய வெர்னா அமைந்து விட்டது!

இதுகுறித்து பேசிய ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (MD and CEO) ஓய்.கே.கூ, ‘50 லட்சமாவது காராக, வெர்னாவை விற்பனை செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய கார் சந்தையில், இப்படியொரு இலக்கை அடைவது என்பது, இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின் நீண்ட கால அர்ப்பணிப்பைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது’ என்றார். 

 


 
 
சென்னையில் உள்ள ஶ்ரீபெரும்புதூரில், கார் தொழிற்சாலையை கடந்த 1998-ல் துவக்கியது ஹூண்டாய். அடுத்த 8 ஆண்டு 7 மாதம் இடைவெளியில் (ஏப்ரல் 2007) தனது முதல் 10 லட்சம் என்கிற விற்பனை இலக்கை, அதாவது 2007-ம் ஆண்டில் சான்ட்ரோ மூலமாக அடைந்தது. அடுத்த 10 லட்சம் கார்களை விற்பனை செய்வதற்கு, வெறும் 3 வருடம் 7 மாதம் என்ற இடைவெளி (நவம்பர் 2010) மட்டுமே இந்நிறுவனத்துக்குத் தேவைபட்டது.
 
இதனைத் தொடர்ந்து, 2 வருடம் 8 மாதம் என்கிற குறைந்த இடைவெளியில் (ஜூலை 2013), மொத்தம் 30 லட்சம் கார்களை ஹூண்டாய் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. அடுத்த 4 வருடம் 4 மாதங்களில் (நவம்பர் 2015 மற்றும் நவம்பர் 2017), 20 லட்சம் கார்களை விற்பனை செய்து, இந்த நவம்பர் 2017-ல் மொத்தமாக 50 லட்சம் கார்களை விற்பனை செய்து, இந்தியாவில் வலுவான நிலையில் உள்ளது ஹூண்டாய். 
 

 
 
இந்தியாவில் 2200 விற்பனை மற்றும் சேவை நிலையங்களை (Sales & Service Centers) வைத்துள்ள ஹூண்டாய் நிறுவனம், வருகின்ற 2020-ம் ஆண்டுக்குள் 8 புத்தம் புதிய மற்றும் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை வெளியிடும் திட்டத்தை வைத்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் கடந்த ஆண்டில் இந்நிறுவனம், உள்நாட்டு விற்பனை (Domestic Sales) மற்றும் ஏற்றுமதியையும் (Export) சேர்த்து, 70 இலட்சம் கார்களை விற்பனை செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

 - ராகுல் சிவகுரு, ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   HYUNDAI MOTORS INDIA LIMITED, SOUTH KOREA, VERNA, SANTRO, 5 MILLION, 50 LAKH CARS, SOLD, 19 YEARS, 1998, 2017, 2007, 2010, 2013, NOVEMBER, APRIL, JULY, CHENNAI, SRIPERUMBUDUR.