இந்தியாவுக்கு எனப் பிரத்யேகமான நகர்ப்புறப் போக்குவரத்து அமைப்பு அவசியம் - வி. சுமந்த்ரன் கருத்து!
Posted Date : 19:31 (02/12/2017)
Last Updated : 13:32 (05/12/2017)

 

வி. சுமந்த்ரன்... உலகளவில் ஆட்டோமொபைல் துறையில் தவிர்க்க முடியாத ஒரு தமிழர்! ஆம், அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ், SAAB ஆட்டோமோபைல் AB,  NASSCOM, ARAI, UCAL போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் உயர் பொறுப்புகளை வகித்தவர். மேலும் பைலட் மற்றும் FIA ரேஸ் டிரைவர் ஆகியவற்றுக்கான ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கும் இவர், தற்போது  Celeris Technologies எனும் நிறுவனத்தின் சேர்மேனாக இருக்கிறார்.
 
இந்நிலையில் Charles Fine மற்றும் David Gonsalvez ஆகிய இருவருடன் இணைந்து, வி. சுமந்த்ரன் எழுதியிருக்கும் ''Faster, Smarter, Greener - The Future of the Car and Urban Mobility'' என்ற புத்தகத்தின் அறிமுக விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த பலர், இதில் ஆர்வமாகப் பங்குபெற்றனர் 1800 ரூபாய்க்கு வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் அட்டையை வடிவமைத்தது, அசோக் லேலண்ட் நிறுவனம் விற்பனை செய்யும் தோஸ்த் - LCV வாகனத்தின் டிசைனரான சத்தியசீலன் என்பது கூடுதல் தகவல்!
 

 
 
இந்நிகழ்ச்சியில் வி.சுமந்த்ரன் பேசியது, ஒரு சிறந்த தகவல் தொகுப்பாக இருந்தது. ''2 சதவிகிதத்திற்கும் குறைவான நிலப்பரப்பில்தான், 60% Co2 மாசு - 85% GDP - 78% ஆற்றல் பயன்பாடு - 55% மக்கள் தொகை அடங்கியிருக்கிறது. 1900-களில் 15 சதவிகிதமாக இருந்த நகர்ப்புறப் பகுதிகள், 2000-களில் 50 சதவிகிதத்தை எட்டியது. இது 2050-க்குள்ளாக 65 சதவிகிதத்தைத் தாண்டும் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமை இப்படி இருக்க ஒரு பெரிய காரில், தனிநபர் பயணிக்கும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது (அமெரிக்காவில் இது 78% என்றளவில் இருக்கிறது). இதனால் சாலையில் ஏற்படும் இடநெருக்கடியின் விளைவாக, நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதற்கான நேரத்துடன், சுற்றுச்சூழல் மாசும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
 
இதனாலேயே உலகளவில் வாகனங்கள் மீதான ஈடுபாடும், மக்களிடையே மெல்ல குறைந்து கொண்டு வருகிறது. ஆனால் ஸ்மார்ட்ஃபோன்கள் மீதான பற்று அதிர்ச்சியளிக்கும் விதத்தில் சென்றுகொண்டிருக்கிறது. BS-VI மாசு விதிகள் - எலெக்ட்ரிக் கார்களின் வருகை -  நகரப் போக்குவரத்து ஆகியவைதான், வரும் ஆண்டுகளில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை சந்திக்க இருக்கும் 3 சவால்கள். டூ-வீலர்களுக்கான சந்தையில், சீனாவை நாம் பின்னுக்குத் தள்ளிவிட்டோம். ஆனால் கார்களைப் பொறுத்தமட்டில், இந்தியாவில் ஆயிரம் பேரில் 22 பேரிடம்தான் சொந்தமாக கார் இருக்கிறது. இதுவே சீனா மற்றும் அமெரிக்கா என்றால், அது 140 மற்றும் 700 என்ற விகிதத்தில் இருக்கிறது. ஆனால் இந்திய மக்களின் வாங்கும் திறன் மற்றும் மக்கள் தொகையை வைத்துப் பார்க்கும்போது, 
 

 
 
இது 300 முதல் 500 வரை செல்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. மீதமிருப்பவர்கள் பஸ், ரயில், டாக்ஸி போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவர் என்பதால், நம் நாட்டிற்கு ஏற்ற நகர்ப்புறப் போக்குவரத்தைத் தகவமைப்பது இங்கே அவசியமாகிறது. ஏனெனில் அமெரிக்கா, சீனா, லண்டன் போன்ற நாடுகளில் Uber - எலெக்ட்ரிக் வாகனங்கள் - Oyster ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருப்பதால், தனிநபருக்கான வாகன விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஃபோர்டு, டொயோட்டா, ஃபோக்ஸ்வாகன், ரெனால்ட், நிஸான், மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள், எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியில் அதித ஆர்வம் காட்டத்துவங்கி இருக்கின்றன.
 
இந்தியாவில் வாகன விற்பனை மற்றும் Ola ஆகியவை கணிசமான வளர்ச்சியை அடைந்திருந்தாலும், எலெக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் நாம் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவிற்கு தேவையான எலெக்ட்ரிக் சாதனங்களில் 32 சதவிகிதம், சீனாவில் இருந்தே இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில் இங்கே எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தி அதிகரித்தால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே புதிய வாகனங்களுக்கான மேம்படுத்தப்பட்ட சாலை அமைப்புடன், எலெக்ட்ரிக் கார்களுக்குத் தேவையான சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் உதிரிபாக உற்பத்தி (லித்தியம் அயான் பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார்) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேவைப்படுகிறது. ஆகவே உலகளவில் பின்பற்றப்படும் நகர்ப்புறப் போக்குவரத்து முறையை, நமது நாட்டுக்குக் கொண்டு வருவது என்பது அர்த்தமற்றது.'' என்றார். 
 

 
 
 
மூன்றரை ஆண்டுகாலத்தை இப்புத்தகத்தின் உருவாக்கத்திற்காகச் செலவழித்திருக்கும் வி. சுமந்த்ரன், அதில் CHIP (Connected, Heterogeneous, Intelligent, Personalised) எனும் நவீனமான போக்குவரத்து முறை பற்றி விளக்கியிருக்கிறார். இது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அமலுக்கு வந்தால், தற்போது நிலை கொண்டிருக்கும் 1.2% முதல் 2% Global Warming, அதாவது சுற்றுச்சூழல் மாசைக் குறைத்துவிடலாம் எனத் தெரிகிறது. டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்த ரூடால்ஃப் டீசல் பிறந்த நகரமான Stuggart, தற்போது டீசல் கார்களுக்கே நோ சொல்லியிருப்பது,
 
இதற்கான சிறந்த உதாரணம். ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சாலையில் களமிறங்கும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், சாலைகளின் நிலை அதற்கேற்ப விசாலமாக மாறாததன் விளைவாகவே, தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கான மாற்றாக மெட்ரோ இருந்தாலும், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது அது இங்கே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. 
 

கட்டுரை - ராகுல் சிவகுரு, 
படங்கள்: இலியாஸ். ஆர். முஹமத்.
 
 
TAGS :   V. SUMANTRAN, ASHOK LEYLAND, TATA MOTORS, INDIA, ARAI, NASSCOM, UCAL, DEFIANCE TECHNOLOGY, NISSAN, CELERIS TECHNOLOGIES, CHARLES FINE, DAVID GOSALVEZ, USA, CHINA, SINGAPORE, TOKYO, LONDON, BS-VI, GLOBAL WARNING, ELECTRIC CARS, ECOSYSTEM.