4.70 லட்சத்திற்கு வெளிவந்துள்ள மாருதி சுஸூகி செலெரியோ எக்ஸ் க்ராஸ்ஓவரில் என்ன ஸ்பெஷல்?
Posted Date : 14:11 (05/12/2017)
Last Updated : 14:17 (05/12/2017)


ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-10 கார்களில் ஒன்றான செலெரியோ ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட செலெரியோ எக்ஸ் (Celerio X) எனும் புதிய க்ராஸ்ஓவரை அறிமுகப்படுத்தியுள்ளது மாருதி சுஸூகி. வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது, இதன் வெளிப்புற மற்றும் உட்பறத் தோற்றத்தில் சில மாற்றங்கள் இருக்கின்றன. மேலும் 10 மிமீ கூடுதல் நீளம் - 35 மிமீ கூடுதல் அகலம் - 5 மிமீ கூடுதல் உயரம் என அளவுகளில் முன்னேற்றம் இருக்கிறது. மற்றபடி காரில் மெக்கானிக்கலாகவும், ஓட்டுதல் அனுபவத்திலும் எந்த வித்தியாசமும் இல்லை. 

 
டிசைனில் என்ன மாற்றம்?
 
 
 

செலெரியோ எக்ஸ் காரின் க்ரில், ஏர் டேம், பம்பர், பனி விளக்குகள் என ஹெட்லைட்டைத் தவிர முன்பக்கத்தில் இருக்கும் எல்லாமே கருப்பு நிறத்துக்கு மாறியுள்ளது. காருக்கு க்ராஸ்ஓவர் டிசைனை கொண்டுவருவதற்காக, வீல் ஆர்ச் - காரின் பக்கவாட்டுப் பகுதி -  கதவின் கீழ்ப்பகுதி ஆகிய இடங்களில் பாடி க்ளாடிங் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அலாய் வீல்கள், ரியர் வியூ மிரர்கள், கதவு பில்லர்களும் கறுப்பு நிறத்தில் வசிகரிக்கின்றன. காரின் கூரையில் புதிதாக ரூஃப் ரெயில் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய பம்பரை தவிர்த்து பார்த்தால், காரின் பின்பகுதியில் எந்த மாற்றமும் இல்லை. வெளிப்புறத்தில் இருக்கும் கறுப்பு நிற வேலைப்பாடுகளுக்கு மேட்ச்சாக, கேபினில் கறுப்பு நிறமே வியாபித்திருக்கிறது. ஆனால் ஆங்காங்கே வெள்ளை நிறம் எட்டிப்பார்க்கிறது.

 
இன்ஜின் மற்றும் வசதிகள்
 
 

பாதுகாப்பைப் பொறுத்தவரை, செலெரியோவைப் போலவே செலெரியோ எக்ஸ் மாடலின் அனைத்து வேரியன்ட்டிலும் டிரைவர் காற்றுப்பை மற்றும் சீட்-பெல்ட் Reminder, இன்ஜின் Immobilizer போன்ற அடிப்படை அம்சங்கள் மட்டுமே இருக்கின்றன. டாப் வேரியன்ட்களில் கூடுதலாக முன்பக்க பயணிக்கான ஏர் பேக் மற்றும் சீட்-பெல்ட் Pretensioner, ஏபிஎஸ், Rear Wiper with Demister போன்றவை கிடைக்கின்றன. சிறப்பம்சங்களின் பட்டியலிலும் எந்த வித்தியாசமும் இல்லை. டீசல் ஆப்ஷன் செலெரியோவில் இல்லை என்பதால், 67bhp பவர் - 9kgm டார்க் - 23.1kmpl அராய் மைலேஜை வெளிப்படுத்தும் 998சிசி, 3 சிலிண்டர் K10B பெட்ரோல் இன்ஜின்தான் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் / AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் உண்டு.

 
வேரியன்ட் மற்றும் விலை விபரங்கள்
 
 

 
செலெரியோ எக்ஸ் க்ராஸ்ஓவரின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை, 4.70 லட்ச ரூபாயில் துவங்கி 5.56 லட்ச ரூபாய் வரை செல்கிறது. 5 வண்ணங்கள் (Solid Paprika Orange, Arctic White, Glistening Grey, Caffeine Brown, Torque Blue) & 8 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த கார், செலெரியோவை விட 8000 ரூபாய்தான் விலை அதிகமாகி இருக்கிறது. மேலும் அனைத்து வேரியன்ட்டிலும் மேனுவல்/ AMT ஆப்ஷன் வழங்கப்பட்டிருப்பது ப்ளஸ். இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமான செலெரியோ கார்களை விற்பனை செய்துள்ள மாருதி சுஸூகி, தனது போட்டியாளர்களைவிட (டாடா டியாகோ, ரெனோ க்விட் க்ளைம்பர்) விற்பனை எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்கான முயற்சியாகத்தான் இந்த க்ராஸ்ஓவரின் அறிமுகம் பார்க்கப்படுகிறது. மாருதி சுஸூகி செலெரியோ எக்ஸ் காரின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருமாறு,
 

 
 
CELERIO X VXI - ₹ 4.70 லட்சம்

CELERIO X VXI(O) - ₹ 4.85 லட்சம்

CELERIO X ZXI - ₹ 4.95 லட்சம்

CELERIO X VXI AGS - ₹ 5.13 லட்சம்

CELERIO X VXI(O) AGS - ₹ 5.28 லட்சம்

CELERIO X ZXI AGS - ₹ 5.38 லட்சம்

CELERIO X ZXI(O) - ₹ 5,44 லட்சம்

CELERIO X ZXI(O) AGS - ₹ 5.56 லட்சம்
 

- ராகுல் சிவகுரு, ரஞ்சித் ரூஸோ.
 
 
 
TAGS :   MARUTI SUZUKI, CELERIO, INDIA, CELERIO X, CROSSOVER, HATCHBACK, BLACK, WHITE, ABS, AIRBAGS, ALLOY WWHEELS, BUMPERS, BODY CLADDING, FACELIFT, TOP-10 CARS, PETROL, AMT, TIAGO, KWID.