டிவிஎஸ் அப்பாச்சி RR 310 : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்டைலான ஸ்போர்ட்ஸ் பைக்? #TVSApacheRR310 #PureRacecraft
Posted Date : 20:03 (07/12/2017)
Last Updated : 20:17 (07/12/2017)


டிவிஎஸ் அப்பாச்சி RR 310... சமீப காலத்தில் ஸ்பை ஃபோட்டோக்களாலேயே பைக் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பைக் இதுவாகத்தான் இருக்கும்! அவர்களின் நீண்டநெடிய காத்திருப்புக்கான பதிலாக, 2.05 லட்சத்துக்கு (எக்ஸ் ஷோரூம் விலை) அப்பாச்சி RR 310 பைக்கை, Racing Red (Gloss Finish) மற்றும் Sinister Black (Matte Finish) எனும் 2 நிறங்களில் சென்னையில் அறிமுகப்படுத்தியது டிவிஎஸ்.
 
 
 
 
கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட Akula 310 எனும் கார்பன் ஃபைபரில் செய்யப்பட்ட கான்செப்ட் ஸ்போர்ட்ஸ் பைக்தான், தற்போது அப்பாச்சி RR 310 பைக்காக உருமாறி இருக்கிறது! சில நாட்களுக்கு முன்பு இந்நிறுவனம் வெளியிட்ட 10 விநாடிகள் ஓடக்கூடிய டீசரிலேயே, இந்த பைக் எப்படிபட்ட தயாரிப்பாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் உணர முடிந்தது. நேற்று அதை நேரில் பார்த்து, இன்று அதை டெஸ்ட் டிரைவ் செய்ததில், எனக்குக் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்த கட்டுரையை நான் எழுதியுள்ளேன்.

 
டிசைன்
 

அப்பாச்சி RR 310 பைக்கில், இரட்டை LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் - LED இண்டிகேட்டர்கள் - LED டெயில் லைட் என எல்லாமே LED மயமாக இருக்கிறது. பகலில் இதன் தன்மை தெரியாவிட்டாலும், இரவு நேரப் பயணங்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் ஃபுல் ஃபேரிங் பைக்கான அப்பாச்சி RR 310 பைக்கின் ஸ்போர்ட்டியான முன்பக்கத்துடன் ஒப்பிடும்போது, விண்ட் ஸ்க்ரீன் பார்க்கக் கொஞ்சம் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் அது நெடுஞ்சாலையில் அதிகவேகத்தில் பயணிக்கும்போது, எதிர்காற்று ரைடரின் முகத்தில் அடிப்பதைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
 
 
 
 
இந்த பைக்கின் சிவப்பு நிறம் மற்றும் வளைவு நெளிவுகளுடன் ஷார்ப்பாக காட்சிதரும் பின்பகுதி, அசப்பில் டுகாட்டியின் பனிகாலே சீரிஸ் பைக்குகளை நினைவுபடுத்துகிறது. மேலும் பைக்கின் சிவப்பு நிற ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் Race Spec என எழுதப்பட்டிருப்பதன் Font-ம், அந்த பைக்கைப் போலவே இருக்கிறது. கூடவே பைக்கின் கலரில் இருக்கும் லைட் வெயிட் ட்ரெல்லிஸ் ஃப்ரேம், தங்க நிறத்தில் இருக்கும் USD ஃபோர்க், வெள்ளை நிற ஸ்ப்ரிங்குடன் இருக்கும் மோனோஷாக் சஸ்பென்ஷன் எனச்சில சூப்பர் ஸ்போர்ட் பைக்குகளில் இடம்பெற்றிருக்கும் டிசைன் அம்சங்களும் இங்கே உண்டு! மாட்டின் கொம்புகளைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் Omega வடிவ LED டெயில் லைட், இரவு நேரத்தில் பார்க்க செம ஸ்டைலாக இருக்கும்.
 

 
 
அலுமினியத்தால் ஆன ஸ்ப்ளிட் ஹேண்டில்பார், வித்தியாசமான வடிவத்தில் இருக்கும் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், லிக்விட் கூல்ட் இன்ஜினுக்கு LCOC (liquid-cooled oil coolant) வசதி என 169.5 கிலோ எடையுள்ள டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக்கை, மிகவும் ரசித்து வடிவமைத்திருக்கிறது டிவிஎஸ். LCOC தொழில்நுட்பத்தால், இன்ஜின் சூடு ரைடரின் கால்களுக்கு அருகே வந்து இடைஞ்சலைக் கொடுக்காது என்றே தெரிகிறது. நேர்க்கோட்டில் இருக்கும் டிஜிட்டல் மீட்டரில், (Speed, RPM, Gear, Temperature, Clock, Range, Side Stand & Service Indicator, Trip Meters, Top Speed, Lap Timer, Mileage, 0-60) போன்ற 18 தகவல்கள் தெளிவாகத் தெரிகின்றன. அலாய் ஃபுட் ரெஸ்ட் கொஞ்சம் முன்பக்கத்தில் வைக்கப்பட்டிருப்பதால், இது பைக்கின் சற்றே உயரமான ஸ்ப்ளிட் ஹேண்டில்பாருடன் சேரும்போது, ஸ்போர்ட்டினெஸ் மற்றும் சொகுசுத்தன்மை கலந்த சீட்டிங் பொசிஷன் கிடைத்திருக்கிறது.
 
 
 
 
ஆனால் யமஹா R15 பைக்கைப் போலவே, அப்பாச்சி RR 310 பைக்கின் பின்பக்க இருக்கையும் உயரமாக இருக்கிறது. மேலும் அந்த பைக்கைப் போலவே, இங்கும் பின்னால் உட்காருபவருக்கான கிராப் ரெயில் வழங்கப்படாதது நிச்சயம் மைனஸ்தான். ஆனால் ஸ்ப்ளிட் சீட்களின் குஷனிங்கைப் பார்க்கும்போது, அது நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றபடி இருக்கும் என்றே தோன்றுகிறது. முன்னே சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒன்று சேரும்போது, ஒரு இந்திய நிறுவனம் தயாரித்த பைக்குகளிலேயே செக்ஸியான டிசைன் என இதை நிச்சயமாகச் சொல்லலாம். 
 

 
 
மேலும் பைக்கைப் பார்க்கும்போதே, அதன் அட்டகாசமான Fit & Finish, பெயின்ட் தரம் மற்றும் கட்டுமானத் தரம் தெரிகிறது. இன்ஜினின் க்ராங்க்-கேஸ் மற்றும் பில்லியன் சீட்டில் TVS Racing பிராண்டிங் - பைக்கின் டெயில் செக்‌ஷனில் 35 Years of TVS Racing ஸ்டிக்கரிங் - அப்பாச்சி சீரிஸ் பைக்குகளின் டிரேட் மார்க் ரேஸிங் ஸ்ட்ரிப் மற்றும் ரிம் ஸ்ட்ரிப் - 11 லிட்டர் பெட்ரோல் டேங்க்கின் மீது குதிரை மற்றும் RR 310 லோகோ - விண்ட் ஸ்க்ரீனில் இந்திய கொடி - இரட்டை ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டின் அருகே Bi-LED மற்றும் அவற்றின் இடையே குதிரை லோகோ - முன்பக்கத்தின் மட்கார்டில் ABS - பின்பக்க சீட்டின் இருபுறமும், அப்பாச்சி RTR 200 பைக்கில் இருப்பதுபோன்ற Faux Air Duct, சிவப்பு நிற இன்ஜின் ஹெட் எனக் குட்டி குட்டி டீட்டெய்லிங், படு அசத்தலாக இருக்கிறது.
 
 
 
 
இதனுடன் சுஸூகி ஹயபூஸா பைக்கைப் போல, Apache RR 310 என பைக்கின் பெயர், ஃபுல் ஃபேரிங்கில் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், இன்ஜினுக்கு அருகே DOHC - Reverse Inclined என்ற ஸ்டிக்கர் சிறிதாக இடம்பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பஜாஜ் நிறுவனத்தின் முதல் ஃபுல் ஃபேரிங் பைக்கான பல்ஸர் RS 200 பைக்கைப் போல இல்லாமல், அப்பாச்சி RR 310 பைக்கில் குறைவான ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். 

 
இன்ஜின் - சேஸி - சஸ்பென்ஷன்
 

 
 
நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான பிஎம்டபிள்யூ G310R பைக்கை அடிப்படையாகக் கொண்டே, தனது ஃபுல் ஃபேரிங் கொண்ட அப்பாச்சி RR 310 ஸ்போர்ட்ஸ் பைக்கைத் தயாரித்திருக்கிறது டிவிஎஸ். எனவே இந்த பைக்கின் ட்ரெல்லிஸ் ஃப்ரேம், Kayaba நிறுவனத்தின் USD - மோனோஷாக் சஸ்பென்ஷன் அமைப்பு, Continental நிறுவனத்தின் டூயல் சேனல் ஏபிஎஸ், Bybre நிறுவனத்தின் பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ் (Front: 300mm, Rear: 240mm), முன்பக்க மட்கார்டு, Michelin Pilot Street Sport ரேடியல் டியுப்லெஸ் டயர்கள் (Front: 110/70 R17, Rear: 150/60 R17), ஸ்விட்ச் கியர், எக்ஸாஸ்ட் பைப் ஆகியவை எல்லாமே, பிஎம்டபிள்யூ G310R பைக்கின் ஜெராக்ஸ்தான்! ஆனால் அப்பாச்சி RR 310 பைக்கின் ஸ்போர்ட்டி பொசிஷனிங்கை மனதில்வைத்து, Wind Tunnel Testing முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் ஃபுல் ஃபேரிங்கை, இந்த பைக் கவசம் போலக் கொண்டிருக்கிறது.
 
 
 
 
இது மிகக் குறைவான 0.26 Drag Coefficient கொண்டிருப்பதால், காற்றைக் கிழித்துச் செல்லக்கூடிய திறன் சிறப்பாக இருக்கும் என்கிறது டிவிஎஸ். அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 4 வால்வு, DOHC, லிக்விட் கூல்டு, Bosch ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் 312.2 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி அமைந்திருக்கிறது. இதையும் பிஎம்டபிள்யூ G310R பைக்கில் இருந்து டிவிஎஸ் கட் அண்டு பேஸ்ட் செய்துவிட்டதோ என நான் நினைத்தேன். ஆனால் இதன் ட்யூனிங்கை வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள். இது வெளிப்படுத்தக்கூடிய 34bhp@9700rpm பவர் மற்றும் 2.73kgm@7,700rpm டார்க் ஆகியவை, பிஎம்டபிள்யூ பைக்குடன் ஒப்பிடும்போது 200 ஆர்பிஎம் அதிகமாக இருக்கிறது.
 
 
 
 
அப்பாச்சி RR 310 பைக்கின் பவர் டெலிவரி, கேடிஎம் RC 390 பைக்குடன் ஒப்பிடும்போது, மிகவும் சீராகவே இருக்கிறது. ஆனால் ஐடிலிங் கொஞ்சம் ரஃப்பாக இருந்தது ஏனோ? மேலும் அதிக கியரில் குறைவான வேகத்தில் செல்லும்போதும் இன்ஜின் ஸ்மூத்தாகவே இயங்குவதுடன், கிட்டத்தட்ட அதிர்வுகளே இல்லை எனலாம். 0 - 60 கிமீ வேகத்தை 2.93 விநாடிகளிலும், 0 - 100கிமீ வேகத்தை 7.17 விநாடிகளிலும் எட்டிப்பிடிக்கும் அப்பாச்சி RR 310, அதிகபட்சமாக 163 கிமீ வேகம் வரை செல்லும் என்கிறது டிவிஎஸ். இது அப்பாச்சியைவிட 11 கிலோ குறைவான எடையைக் கொண்டிருக்கும் பிஎம்டபிள்யூ G310R பைக்கைவிட 15 கிமீ அதிகம்! இதற்கு அப்பாச்சி RR 310 பைக்கின் ஏரோடைனமிக்கான ஃபுல் ஃபேரிங், Taller கியர் ரேஷியோ, 17-42 என்ற விகிதத்தில் இருக்கும் செயின் ஸ்ப்ராக்கெட், சீரான பவர் டெலிவரி ஆகியவை காரணங்களாக இருக்கலாம். 

 
ஓட்டுதல் அனுபவம்
 

 
 
அப்பாச்சி சீரிஸ் பைக்குகளின் பிரதான அஸ்திரங்களில் ஒன்றான கையாளுமை மற்றும் எக்ஸாஸ்ட் சத்தம், அப்பாச்சி RR 310 பைக்கிலும் தொடர்கிறது. இதற்காகவே 3000-க்கும் அதிகமான லேப்களுக்கு, இந்த பைக்கை ரேஸ் டிராக்குகளில் டெஸ்ட் செய்திருக்கிறது டிவிஎஸ். இந்த பைக்கின் கச்சிதமான சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் டயர்கள், இதனை எனக்கு உணர்த்திவிட்டன. மேலும் 300 மணி நேரத்துக்கும் அதிகமாக மேற்கொள்ளப்பட்ட Wind Tunnel Testing விளைவாக, தனது வகையிலேயே சிறப்பான Aerodynamics-யை கொண்டிருக்கிறது அப்பாச்சி RR 310. இந்த பைக்கை, ஸ்போர்ட்டினெஸ் மற்றும் சொகுசுத்தன்மை கலந்த ஓட்டுதல் அனுபவத்துக்கும் முக்கியத்துவம் தரும் வகையில், ரேஸ் டிராக் - நெடுஞ்சாலை ஆகிய இரண்டிலும் பயன்படுத்தும் விதமாகவே டிவிஎஸ் வடிவமைத்திருப்பதாகத் தெரிகிறது.
 
 
 
 
தனது முதல் பிரிமியம் ஸ்போர்ட்ஸ் பைக்கான அப்பாச்சி RR 310 பைக்கில், ஃபுல் பேரிங் - லிக்விட் கூலிங் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - ட்ரெல்லிஸ் ஃப்ரேம் - LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் & இண்டிகேட்டர் - USD ஃபோர்க் என டிவிஎஸ் நிறுவனத்தின் வரலாற்றில் பல ''முதல்முறை'' வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. தனது பவர்ஃபுல் மற்றும் பிரிமியம் பைக்கை, கேடிஎம் RC 390 - யமஹா YZF-R3 - கவாஸாகி நின்ஜா 300 - மஹிந்திரா மோஜோ - பஜாஜ் டொமினார் D400 போன்ற 300சிசி பைக்குகளுக்கு இடையே, கச்சிதமான விலையில் பொசிஷன் செய்திருக்கிறது டிவிஎஸ். இது அவற்றுக்கு தலைவலியைத் தரும் எனத் தோன்றுகிறது! 

 
கட்டுரை, படங்கள் - ராகுல் சிவகுரு.
 
 
 

 

TAGS :   TVS, APACHE RR 310, MAKE IN INDIA, SPORTSBIKE, PREMIUM SEGMENT, 300CC, BMW, G310R, NAKED BIKE, FULL FAIRING, 6 SPEED GEARBOX, LIQUID COLING, LED, PETAL DISCS, MICHELIN, RADIAL TUBELESS TYRES, CONTINENTAL ABS, BOSCH FI, KAYABA SUSPENSION, KTM RC 390, YAMAHA YZF-R3.