இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்...!
Posted Date : 12:46 (12/12/2017)
Last Updated : 12:57 (12/12/2017)


இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் டாப் செல்லிங் கார்களுள் ஒன்றான க்ரெட்டா, கடந்த 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. டஸ்ட்டர், எஸ்-க்ராஸ், ஸ்கார்ப்பியோ, சஃபாரி ஸ்டார்ம் ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாகக் களமிறங்கிய இந்த கார், வெளிவந்த முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் கார்கள் விற்பனையானது. மேலும் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் டாப்-10 கார்களில் தவிர்க்க முடியாத காராகவும் க்ரெட்டா இருந்துவருகிறது. தனது போட்டியாளர்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் ஏற்கனவே விற்பனையில் இருப்பதாலும், கூடவே புதிய போட்டியாளர்களும் வரிசைகட்டி வர இருப்பதாலும், க்ரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலைத் தயாரிக்கும் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபடத் துவங்கியது ஹூண்டாய்.
 
 
 
 
அதன் வெளிப்பாடாக, கடந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற Sao Paulo ஆட்டோ ஷோவில் அது முதன்முறையாகக் காட்சிபடுத்தப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற Chengdu மோட்டார் ஷோவில், பிரேசிலில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாடலில் சின்னச்சின்ன வித்தியாசங்களுடன் காரை வெளிக்கொண்டு வந்தது ஹூண்டாய். அமெரிக்க சந்தையைத் தொடர்ந்து, இந்தியாவில் க்ரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கும் முடிவில் அந்நிறுவனம் இருக்கிறது. தற்போது தீவிரமான டெஸ்ட்டிங்கில் இருக்கும் அந்த கார், சேலம் மாவட்டம் கோரிமேடுவில் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது, அதன் ஸ்பை படங்களை எடுத்து நமக்கு அனுப்பியுள்ளார், சேலத்தைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான ஆர். சாம் மேத்யூ பிரவீன். 
 

 
 
 
பிரேசில், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புறத்தில், மேம்படுத்தப்பட்ட ப்ரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் LED டெயில்லைட் - அகலமான 3 Slat அறுகோண வடிவ க்ரோம் க்ரில் - Faux Skid Plate & புதிய பனி விளக்குகள் உடனான புதிய முன்பக்க பம்பர் - Reflector & Faux Skid Plate உடனான புதிய பின்பக்க பம்பர் - புதிய 17 இன்ச் Diamond Cut அலாய் வீல்கள் - தடிமனான பாடி க்ளாடிங் - புதிய ஸ்பாய்லர் - புதிய ரூஃப் ரெயில் ஆகியவை இடம்பெற்றிருந்தன. கேபினைப் பொறுத்தமட்டில், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான 7 இன்ச் டச்-ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் ஒரே மாற்றம். இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த வித்தியாசமும் இல்லாவிட்டாலும்,
 
 
 
 
 
மாருதி சுஸூகி மற்றும் மஹிந்திரா கார்களில் இருப்பதுபோன்ற Mild Hybrid சிஸ்டம் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஹைபிரிட் கார்களின் மீது விதிக்கப்படும் 43% GST காரணமாக, இது இந்தியாவில் அறிமுகமாக உள்ள காரில் இருக்குமா என்பது, போகப் போகத்தான் தெரியும். தற்போதைய மாடலில் All Black கேபின் மற்றும் டூயல் டோன் கலர் ஆப்ஷன்கள் இருக்கும் நிலையில், ஃபேஸ்லிஃப்ட்டில் இது அமெரிக்கா மற்றும் பிரேசிலில் விற்பனை செய்யப்படும் க்ரெட்டாவின் ஸ்போர்ட்ஸ் மாடலை போல பொசிஷன் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இதன் அடுத்த தலைமுறை மாடல், வருகின்ற 2021-ம் ஆண்டில் வெளிவரும் எனத் தகவல்கள் வந்திருப்பதுடன், அது 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படும் எனத் தெரிய வந்துள்ளது.
 

 
 
 
ஸ்பை படங்களில், இரண்டு மாடல்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. வீல் கேப்களுடன் இருப்பது ஆரம்ப வேரியன்ட்டாகவும், அலாய் வீல்களுடன் இருப்பது டாப் வேரியன்ட்டாகவும் இருக்கலாம். டாப் வேரியன்ட் மாடலில் இருக்கும் க்ரோம் க்ரில், ப்ரொஜெக்டர் ஹெட்லைட், 17 இன்ச் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில், LED டெயில்லைட் ஆகியவை, அமெரிக்கா மற்றும் பிரேசிலில் விற்பனை செய்யப்படும் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருப்பதுபோலவே உள்ளன. ஆனால் ஹூண்டாய் கார்களுக்கே உரித்தான Shark Fin Antenna இதில் இல்லை என்பதுடன், பனி விளக்குகள் தற்போதைய மாடலில் இருப்பதைப் போலவே இருக்கிறது.
 
 
 
 
 
ஆரம்ப மாடலில் எதிர்பார்த்தபடியே வழக்கமான ஹெட்லைட், பனி விளக்குகள் மற்றும் க்ரோம் வேலைப்பாடு இல்லாத முன்பக்க பம்பர், அலாய் வீல்களுக்குப் பதிலாக வீல் கேப், ரூஃப் ரெயில் மற்றும் ஸ்பாய்லர் இல்லாத காரின் ரூஃப் என வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன் மற்றும் கேபினில் மாற்றங்கள் இருக்காது எனலாம். இந்த காரை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2018-ல் ஹூண்டாய் காட்சிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.    
 
 
 

- ராகுல் சிவகுரு. 
 
 
TAGS :   HYUNDAI, CRETA, FACELIFT, INDIA, RENAULT, DUSTER, CAPTUR, MARUTI SUZUKI, S-CROSS, HONDA, BR-V, SUV, CROSSOVER, DIESEL, PETROL.