''இந்தியாவின் டெஸ்லா'' - மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் கார்கள்!
Posted Date : 10:22 (16/12/2017)
Last Updated : 10:34 (16/12/2017)

 

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் ஒரே நிறுவனமான மஹிந்திரா, ''இந்தியாவின் டெஸ்லா'' என கார் ஆர்வலர்களால் அழைக்கப்படுகிறது. தற்போது e2O, eVerto, eSupra எனும் 3 எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் இந்நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. அதன் வகையிலே தனித்துவமான தயாரிப்பாக இருந்தாலும், குறைவான ரேஞ்ச் மற்றும் அதிக விலை விளைவாக ,இவற்றின் விற்பனை எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில் சரியாக 2 மாதங்களுக்கு முன்பாக, தான்விற்பனை செய்யும் காம்பேக்ட் க்ராஸ்ஓவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலான KUV 1OO NXT காரைக் களமிறக்கியது மஹிந்திரா. மும்பையில் நடந்த அதன் அறிமுக விழாவில், அப்போது பேசிய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான பவன் கோயங்கா கூறியது இதுதான்! 

 

 

''இனி மஹிந்திரா அறிமுகப்படுத்தப் போகும் ஒவ்வொரு புதிய காருக்கும், அதன் எலெக்ட்ரிக் மாடலும் சேர்ந்தே தயாரிக்கப்படும். ஏனெனில் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களைப் பொறுத்தமட்டில், 2030-க்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதன் சந்தை மதிப்பு 20 சதவிகிதமாகவும் இருக்கலாம்; 100 சதவிகிதமாகவும் இருக்கலாம்! அதற்கு மஹிந்திரா எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறது. இதன் வெளிப்பாடாக, KUV 1OO NXT காரின் எலெக்ட்ரிக் மாடலை, அடுத்த ஆண்டில் களமிறக்க உள்ளோம்'' என்றார். இதற்கு காரணமும் இருக்கிறது. ஆம், அடுத்த 2 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார்களுக்குத் தேவையான பேட்டரி மற்றும் எலெக்ட்ரானிக் அமைப்பு ஆகியவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும்போது, அவற்றின் விலை தற்போதைய சூழ்நிலையில் இருப்பதைவிட 20 சதவிகிதம் குறைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன! 

 


 
 
இதன் வெளிப்பாடாக, அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தொழில்நுட்பத்தை தகவமைப்பதில் கவனமுடன் செயல்பட்டுவருகிறது மஹிந்திரா. ''எலெக்ட்ரிக் கார்கள் வேகமாகச் செல்லாது'' என்று நிலவும் கருத்தை உடைக்கும் விதமாக, குறைந்தபட்சம் 41bhp முதல் அதிகபட்சம் 204bhp வரையிலான பவரை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் கார்களை இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதிக செயல்திறனைக் கொண்ட பேட்டரிகளைப் பயன்படுத்தும்போது, இவற்றின் ரேஞ்ச்சும் அதிகமாக இருக்கும் என்பதால், எலெக்ட்ரிக் கார்களின் மைனஸாகப் பார்க்கப்படும் வேகம் - ரேஞ்ச் - விலை ஆகியவற்றுக்கான விடையை, மஹிந்திரா கண்டுபிடித்துவிட்டதாகவே தெரிகிறது.
 
 
 
 
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த கருத்தரங்கில், 3 புதிய எலெக்ட்ரிக் கார்கள் (KUV 1OO NXT Based EV, XUV 5OO Based EV, Tivoli Based EV) குறித்த தகவல்களை இந்நிறுவனம் வெளியிட்டதே, அதற்கான சிறந்த உதாரணம். தற்போது தீவிரமாக டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் KUV 1OO NXT காரின் எலெக்ட்ரிக் மாடலை, செங்கல்பட்டு டோல் கேட் அருகே சென்றுகொண்டிருந்தபோது படம் பிடித்திருக்கிறார், மோட்டார் விகடனின் வாசகரான சாய் பிரசாத் முருகேசன். Environmental Protection Agency (EPA) விதிமுறைகளுக்கு ஏற்ப டெஸ்ட் செய்யப்பட்டிருக்கும் இந்த கார், அதன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களைப் பயன்படுத்தும் வழக்கமான மாடல்களைவிட பவர்ஃபுல்லாக இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 
 

 
 
இதனால் 0 - 100கிமீ வேகத்தை வெறும் 9 விநாடிகளிலேயே எட்டிப்பிடிக்கும் KUV 1OO NXT EV, அதிகபட்சமாக 186கிமீ வேகம் செல்லும் என்பதுடன், 350கிமீ ரேஞ்ச்சையும் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த கார், ''2020-க்குள் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்'' என்ற மின்சாரக் கனவுக்கான சிறந்த வடிகாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா காட்சிபடுத்திய XUV Aero ஸ்போர்ட்ஸ் கூபே கான்செப்ட்டின் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் எனத் தெரிகிறது. New European Driving Cycle (NEDC) விதிமுறைகளின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் பார்த்தால், 0 - 100கிமீ வேகத்தை KUV 1OO NXT EV காரைவிட வேகமாக, அதாவது வெறும் 8 விநாடிகளிலேயே XUV Aero EV எட்டிப்பிடிப்பதுடன், அதிகபட்சமாக 190கிமீ வேகம் செல்லும் என்பதுடன், 300கிமீ ரேஞ்ச்சையும் இது கொண்டிருக்கிறது.
 
 
 
 
High-Voltage Efficient PowerTrain தொழில்நுட்பம் இடம்பெற்றிருப்பதே, இந்த அதிரடி வேகத்துக்கான காரணம்! மஹிந்திரா நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கும் ஸாங்யாங் நிறுவனத்தின் தயாரிப்பான டிவோலி க்ராஸ்ஓவர் எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு, ஒரு காரை மஹிந்திரா களமிறக்கப்போவது அறிந்ததே. முன்பே சொன்னதுபோலவே, வழக்கமான மாடலுடன் எலெக்ட்ரிக் மாடலும் சேர்ந்தே தயாரிக்கப்படும் நிலையில், EV-ன் டெக்னிக்கல் விபரங்கள் வெளிவந்திருக்கின்றன. New European Driving Cycle (NEDC) விதிமுறைகளைப் பின்பற்றி டெஸ்ட்டிங் மேற்கொள்ளப்பட்ட போது, 11 விநாடிகளில் 0 - 100கிமீ வேகம் - 150கிமீ அதிகபட்ச வேகம் - 250கிமீ ரேஞ்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 
 

 
 
இந்த புதிய தயாரிப்புகளைப் பற்றி, மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவரான மகேஷ் பாபு கூறியதாவது, ''இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடுகள் செய்யப்படுவதால், இங்கே எலெக்ட்ரிக் கார்களுக்கான வருங்காலம் என்பது நிச்சயம் உண்டு. நாங்கள் புதிதாகத் தயாரிக்கப்போகும் 3 எலெக்ட்ரிக் கார்களில், Permanent Magnet Synchronous Motor (PMSM) பயன்படுத்தப்பட்டிருப்பதால், 3 கார்களும் தங்கள்வசம் இருக்கும் மின்சக்தியை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துகின்றன. எனவே ஒரு ஃபுல் சார்ஜில் 250 - 350கிமீ தூரம் செல்லக்கூடிய திறனை, இந்த எலெக்ட்ரிக் கார்கள் கொண்டுள்ளன.  இவை 2019 - 2020 ஆகிய காலகட்டத்தில் அதிகாரப்பூர்வமாக ஒன்றன்பின்ஒன்றாக அறிமுகப்படுத்தப்படும்.
 
 
 
 
ஏனெனில் வருகின்ற 2030-க்குள்ளாக, கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில், 38 முதல் 60 சதவிகிதம் அளவுக்கு எலெக்ட்ரிக் கார்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கலாம். தற்போது 10kWh முதல் 70kWh வரையிலான பேட்டரிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் புதிய கார்களில் 7 மடங்கு அதிகத் திறன்மிக்க 80Wh/kg முதல் 200Wh/kg வரையிலான பேட்டரிகள் பயன்படுத்தப்பட உள்ளன. தேவைக்கு ஏற்ப 48V முதல் 650V வரையிலான Battery Management System (BMS) எலெக்ட்ரிக்கல் அமைப்பைக் கொண்டிருக்கும் இவை, வழக்கமான கார்களுக்கு இணையான பெர்ஃபாமென்ஸுடன், அதிகபட்சமாக 400கிமீ தூரம் வரை செல்லக்கூடிய திறனைக் கொண்டிருக்கின்றன'' என்றார். 
 

 
 
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வருங்காலத்தை மனதில்வைத்து மஹிந்திரா செயல்பட்டுக் கொண்டிருப்பது நன்றாகப் புரிகிறது. ஆனால் நிகழ்காலத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனை என்பது சுக்கிரதிசையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம். 2016 - 2017 கால கட்டத்தில், மொத்தம் 30,46,727 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் எலெக்ட்ரிக் கார்களின் பங்களிப்பு வெறும் 2,000 கார்கள்தான்; அதாவது ஒட்டுமொத்த விற்பனையில் 0.07 சதவிகிதம்தான் மக்களே! எது எப்படியோ, மக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு வந்து, 2030-க்குள் ''எலெக்ட்ரிக் கார்களை முழூவீச்சில் பயன்படுத்தும் நாடு'' என்ற அந்தஸ்த்தை இந்தியா பெறுமா என்பதற்கு, காலம்தான் பதில் சொல்லும்!  

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   MAHINDRA, EV, ELECTRC CARS, TESLA, INDIA, KUV 1OO NXT, XUV AERO, SSANGYONG TIVOLI, E2O PLUS, E-VERITO, BATTERY, ELECTRC MOTOR, 2018, PAWAN GOENKA, MAHESH BABU, RANGE.