ஆடி - பிஎம்டபிள்யூ - பென்ஸ் Be Careful... 55.9 லட்சத்துக்கு அறிமுகமானது வால்வோ XC60!
Posted Date : 16:02 (18/12/2017)
Last Updated : 16:27 (18/12/2017)

 

காரில் நாம் சொகுசாக மட்டுமல்ல, பாதுகாப்பாகவும் பயணிக்க வேண்டுமென்றால், அதற்கான பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவை வால்வோவின் கார்கள்தான்! ஸ்வீடனைச் சேர்ந்த இந்நிறுவனம், தற்போது இரண்டாம் தலைமுறை XC60 எஸ்யூவியை, 55.9 லட்சம் ரூபாய்க்கு (எக்ஸ் ஷோரூம் விலை) அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் வால்வோ விற்பனை செய்யும் கார்களில் 30 சதவிகிதம், இந்த XC60 மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலக சந்தைகளில் 10 லட்சத்துக்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கையைக் கடந்திருக்கும் XC60, ஐரோப்பாவின் சிறந்த பிரிமியம் மிட்சைஸ் எஸ்யூவியாக திகழ்ந்துவருகிறது. இந்தியாவில் அனைத்து சிறப்பம்சங்களையும் உள்ளடக்கிய ஒரே டாப் வேரியண்டில் (Launch Edition) வெளிவந்திருக்கும் இந்த எஸ்யூவியில்.
 
 
 
 
2 லிட்டர் D5 டீசல் இன்ஜின் - 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்பட்டுள்ளது. இந்த 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின், 235hp பவர் மற்றும் 48kgm டார்க், நான்கு சக்கரங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 320bhp பவரை வெளிப்படுத்தும் T6 டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 407bhp பவரை வெளிப்படுத்தும் T8 பெட்ரோல் - ஹைபிரிட் அமைப்பு ஆகியவை, அடுத்த ஆண்டில் அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் அதிகம்! முந்தைய முதல் தலைமுறை XC60 உடன் ஒப்பிடும்போது, இந்நிறுவனத்தின் SPA ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய மாடலின் விலை 2 லட்சம் ரூபாய் அதிகமாகி உள்ளது. ஆனால் அதனை நியாயப்படுத்தும் விதமாக, தொழில்நுட்ப ரீதியில் பல முற்னேற்றங்களை பெற்றுள்ளது புதிய XC60 எஸ்யூவி. 
 

 
 
XC60-யை முதலில் பார்த்த உடனேயே, இது வால்வோவின் லக்ஸூரி எஸ்யூவியான XC90-ன் மினி வெர்ஷன் என்பதைத் தெரிந்து கொள்ளமுடிகிறது. 15 ஸ்பீக்கர்களைக் கொண்ட Bowers & Wilkins ஆடியோ சிஸ்டம், 9 இன்ச் டச் ஸ்க்ரீன் உடனான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், Heating - Cooling - Massage வசதியுடன் கூடிய முன்பக்க சீட்கள், Heated பின்பக்க சீட்கள், பனரோமிக் சன்ரூஃப், Heads Up Display, Nappa லெதர் அப்ஹோல்சரி, CleanZone 4 Zone க்ளைமேல்ட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் என இந்த எஸ்யூவியின் கேபினில் சொகுசு மற்றும் சிறப்பம்சங்களுக்குப் பஞ்சமே இல்லை. இதனுடன் ஏர் சஸ்பென்ஷன், 19 இன்ச் அலாய் வீல், 360 டிகிரி பார்க்கிங் சிஸ்டம், ரேடார் மற்றும் Steering Assist துணையுடன் இயங்கும் Blind Spot Indication System, Traffic Mitigation, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் எனப்பல உயர்ரக தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது XC60.
 
 
 
 
இதில் நகரப் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய Cross-Traffic Alert வசதி இருப்பதால், டிராபிக் சிக்னலை யாருக்கும் இடையூறு தராமல் கடப்பது சுலபம்; மேலும் Steering Assist உடனான Oncoming Lane Mitigation இருப்பதால், முன்னே செல்லும் வாகனங்களைப் பாதுகாப்பாக முந்திச் செல்லலாம். முன்னே சொன்ன வசதிகள் அனைத்தையும் Tech Pack என அழைக்கும் வால்வோ, பின்னாளில் விலை குறைவான D5 Inscription எனும் வேரியன்ட்டை களமிறக்கும்போது, அதில் ஆப்ஷனலாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வால்வோ பாதுகாப்புக்குப் பெயர்போன நிறுவனம் என்பது, கார் ஆர்வலர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
 

 
 
காரின் பாதுகாப்பை ஆய்வு செய்யும் Euro NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கிறது XC60. அதற்கு இந்த எஸ்யூவியில் இடம்பெற்றுள்ள எலெக்ட்ரானிக் பாதுகாப்பு வசதிகள் துணைநிற்கின்றன. Pedestrian - Cyclist - Large Animal Detection மற்றும் Blind Spot Detection வசதி இருப்பதால், சாலை நிறுத்தத்தைக் கடக்கும்போது திடீரென குறுக்கே மிருகமோ, சைக்கிளோ அல்லது ஏதாவது மனிதர்களோ வந்தால், இந்த சிஸ்டம் அவர்களைக் கண்டறிவதுடன், தானாகவே பிரேக் போட்டு காரை நிறுத்திவிடுகிறது. மேலும் Lane Assist வசதியும் என்பதால், நெடுஞ்சாலைகளில் கார் லேன் மாற நேரிட்டால், முன்-பின் இருக்கும் வாகனங்களைத் தானாகவே பார்த்து, உடனடியாக இண்டிகேட்டர்களை போட்டு, எப்போது லேன் மாறலாம் என்பதை ஓட்டுனருக்கு இந்த சிஸ்டம் சொல்லிவிடும்.
 
 
 
 
130கிமீ வேகம் வரை காரின் ஸ்டீயரிங் - ஆக்ஸிலரேட்டர் - பிரேக் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் வால்வோவின் Pilot Assist (Semi-Autonomous Driver Assistance System), நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் செய்யும்போது கைகொடுக்கும் எனலாம். இப்படி பெங்களூரில் இருக்கும் வால்வோ தொழிற்சாலையில் CKD முறையில் அசெம்பிள் செய்யப்படும் XC90 எஸ்யூவியில் இருக்கும் பல வசதிகள், XC60-ல் கிடைப்பது பெரிய ப்ளஸ். இப்படி சொகுசு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய அனைத்தும் சேர்ந்த கலவையாக இருக்கும் XC60, 4 நிறங்கள் - 3 கலர் அப்ஹோல்சரி ஆப்ஷனுடன் கிடைக்கிறது. ஸ்வீடனின் Torslanda-வில் இருக்கும் தனது தொழிற்சாலையில், இந்த எஸ்யூவியின் உற்பத்தி பணிகள் நடைபெற்றுவருகின்றது. 
 

 
 
ஆடி Q5 (56.93 லட்சம்), மெர்சிடீஸ் GLC (51.73 லட்சம்), பிஎம்டபிள்யூ X3 (54 லட்சம்), லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் (55.47 லட்சம்) - (விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம்) போன்ற எஸ்யூவிகளுடன் போட்டிபோடும் XC60, அவர்களைத் தொழில்நுட்பம் மற்றும் இன்ஜின் பவரில் வீழ்த்திவிடுகிறது. ஆனால் விற்பனையில் அவற்றை விழ்த்துமா என்பதைத் தெரிந்துகொள்ள, கொஞ்சகாலம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!  
 

- ராகுல் சிவகுரு, ரஞ்சித் ரூஸோ.
 
 
 
TAGS :   VOLVO, XC60, PREMIUM MIDSIZE, SUV, INDIA, SWEDEN CKD, CBU, XC90, LUXURY CAR, AUDI 15, BMW X3, MERCEDES BENZ GLC, LANDROVER DISCOVERY SPORT, SPA, SAFETY, TECHNOLOGY, PETROL HYBRID, DIESEL, D5, T6, AWD.