20.73 லட்சத்திற்கு கிடைக்கும் யமஹா YZF-R1 பைக்கில் என்ன ஸ்பெஷல்?
Posted Date : 21:39 (18/12/2017)
Last Updated : 21:58 (18/12/2017)

 

ஜப்பானைச் சேர்ந்த யமஹா இந்தியா நிறுவனம், அதிரடி பெர்ஃபாமென்ஸுக்குப் பெயர்பெற்ற YZF-R1 பைக்கின் 2018-ம் ஆண்டுக்கான மாடலை வெளியிட்டுள்ளது. யமஹாவின் மோட்டோ ஜிபி பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சூப்பர் பைக்கை, 9 முறை மோட்டோ ஜிபி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கும் வாலண்டினோ ராஸிதான் டெஸ்ட் செய்திருக்கிறார்!
 
Yamaha Blue, Tech Black எனும் 2 நிறங்களில் கிடைக்கும் இந்த சூப்பர் பைக், அதிகபட்சமாக 299 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது. 20.73 லட்சம் ரூபாய்க்கு (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) கிடைக்கும் 2018 YZF-R1 பைக், CBU முறையில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதுவே இந்த சூப்பர் பைக்கின் அதிக விலைக்கான காரணம்.  

 
 
 
2018 YZF-R1 பைக்கில் இருப்பது, 4 வால்வ் - Flat-4 சிலிண்டர் 998சிசி லிக்விட் கூல்டு இன்ஜின்; தனது மோட்டோ ஜிபி பைக்கில் (YZR-M1) பயன்படுத்தப்படும் Cross-Plane Crankshaft கொண்டு இந்த இன்ஜின் உருவாக்கப்பட்டிருப்பதாக யமஹா கூறியுள்ளது. மேலும் டைட்டானியத்தால் ஆன Connecting Rod மற்றும் அலுமினியத்தால் ஆன Piston பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதால், மொத்த பவரும் பெர்ஃபெக்ட்டாக வெளிப்படும் என நம்பலாம்.
 
இது 200bhp@13,500rpm பவர் மற்றும் 11.24kgm@11,500rpm டார்க்கையும், பின்பக்கச் சக்கரத்துக்கு 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் முலம் கடத்துகிறது! 4-2-1 பாணியிலான Midship எக்ஸாஸ்ட் சிஸ்டம், இந்த சூப்பர் பைக்கின் அட்டகாசமான த்ராட்டில் ரெஸ்பான்ஸ் மற்றும் மிரட்டலான எக்ஸாஸ்ட் சத்தத்துக்கும் கைகொடுக்கிறது. 
 

 
 
Quick Shift System (QSS), Lift Control System (LCS), டிராக்‌ஷன் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் இருப்பது பெரிய ப்ளஸ். QSS இருப்பதால் ஆக்ஸிலரேட்டரைக் குறைக்காமல், எந்த ஆர்பிஎம்மிலும் கிளட்ச்சைப் பயன்படுத்தாமல் கியரை மாற்ற முடியும் என்பதுடன், எந்த வேகத்திலும் நினைத்த நேரத்தில் உடனடியாக கியரைக் குறைக்க முடியும்;
 
தவிர பைக்கின் வேகத்தை தீடீரென அதிகரிக்கும்போது, பைக்கின் முன்பக்கம் மேலே எழும்புவதை LCS கட்டுப்படுத்திவிடும்! மேலும் Yamaha Chip Controlled Intake (YCC-I) தொழில்நுட்பம் இருப்பதால், இது இன்ஜின் இன்டேக் உள்ளே (10.5 லிட்டர் Air Box) செல்லும் காற்றைச் சீர்படுத்தி, அனைத்து ஆர்பிஎம்-மிலும் பவர் டெலிவரியை சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறது. 
 

 
 
முன்பக்கத்தில் Inverted USD ஃபோர்க், 320 மிமி இரட்டை ஏபிஎஸ் டிஸ்க் பிரேக் - பின்பக்கத்தில் மோனோஷாக், சிங்கிள் 220 மிமி ஏபிஎஸ் டிஸ்க் ஆகிய பிரேக் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெற்றுள்ளது. 17 இன்ச் Magnesium வீல்களின் முன்பக்கத்தில் 120/70 R17 டயரும், பின்பக்கத்தில் 190/55 R17 டயரும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
199 கிலோ எடையுள்ள இந்த சூப்பர் பைக், லிட்டருக்கு 17 கிலோ மீட்டர் மைலேஜைத் தரவல்லது. பைக் ரேஸ் மீது ஆர்வம் உள்ள இளைஞர்களை, யமஹா YZF-R1 நிச்சயமாகக் கவரும். இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்துவரும் சூப்பர் பைக் சந்தையில், தனது விற்பனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சியாகவே, யமஹாவின் இந்த அறிமுகம் பார்க்கப்படுகிறது.
 
 
 

- ராகுல் சிவகுரு, ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   YAMAHA, INDIA, JAPAN, YZF-R1, YZR-M1, MOTO GP RACE BIKE, CROSS PLANE CRANKSHAFT, TITANIUM CONNECTING RODS, ALUMINIUM PISTONS, MAGNESIUM WHEELS, ABS, TCS, QUICK SHIFTER, LIFT CONTROL, CHIP CONTROLLED INTAKE, FLAT 4 CYLINDER ENGINE, 200BHP, 199KG, 2018, EURO-4, MIDSHIP