டொயோட்டாவின் பயிற்சியும், முயற்சியும்!
Posted Date : 13:15 (29/12/2017)
Last Updated : 13:23 (29/12/2017)

 

ஜப்பானிய நிறுவனமான டொயோட்டா, சென்னையில் தனது இரண்டாவது ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியை பூந்தமல்லியில் துவங்கியிருக்கிறது. இதைத் திறந்து வைப்பதற்காக, சென்னை வந்த டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் Sales and Marketing பிரிவின் Senior President என்.ராஜா, ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளின் அவசியத்தைப் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார். ''இந்தியாவில் கார் ஓட்டும் எவரிடம் பேசினாலும், கார் ஓட்டுவதில் இருக்கும் சவால்களைப் பற்றி நிறைய சொல்லுவார்கள்.
 
ஒருவரின் ஓட்டுதல் அனுபவத்தை மகிழ்ச்சிகரமானதாக மட்டுமல்ல, பாதுகாப்பானதாகவும் மாற்ற அனைவரும் முனைய வேண்டும். அந்த வகையில் சமுதாயத்துக்கான எங்களின் பங்களிப்புதான், இந்த ஓட்டுனர் பயிற்சி பள்ளி. தற்போது ஏற்கனவே கார் ஓட்டிக்கொண்டிருப்பவர்களும், எங்களின் இந்தப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி எடுக்கிறார்கள். இதை நாங்கள் ஊக்குவிப்பதற்கான காரணம் - இந்த முறையான பயிற்சி, அவர்களின் தவறான கார் ஓட்டும் பழக்கங்களையும் திருத்திக் கொள்ள உதவிசெய்கிறது'' என்றார். மேலும் பயிற்சியைத் தாண்டிய ஒரு விஷயத்தைப் பற்றியும் நம்மிடம் பேசினார். 
 
 
 
 
''நம் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளிநாடுகளில் கார் ஓட்டும்போது சாலை விதிகளை நூற்றுக்கு நூறு சதவிகிதம் கடைபிடிக்கிறார்கள். அதுவே அவர்கள் நம் ஊருக்குத் திரும்பிவந்துவிட்டால், பெரும்பாலானவர்கள் சிக்னலின் சாலைநிறுத்துக் கோட்டில்கூட காரை நிறுத்துவதில்லை. ஏனெனில் வெளிநாடுகளில் சட்டத்தை மீறினால், அதற்கான தண்டனை கடுமையாக இருக்கிறது. உதாரணத்துக்கு, ஜப்பானில் சாலை விதிகளை மீறினால், அங்கே ஓட்டுனர் உரிமத்தில் கரும்புள்ளி (Black Mark) வைத்து விடுவார்கள்.
 
மேலும் குடித்துவிட்டு கார் ஓட்டினால், அவரை வேலையில் இருந்தே தூக்கிவிடுவார்கள். இதுவே அமெரிக்காவாக இருந்தால், அபராதம் கட்டுவதோடு மீண்டும் பரிட்சை எழுதித்தான் ஓட்டுனர் உரிமத்தை உயிர்பிக்க வேண்டியிருக்கும். வேறு சில நாடுகளிலும் தவறிழைக்கும் பட்சத்தில், ஓட்டுனர் உரிமத்தையே ரத்து செய்துவிடுவார்கள். அதனால்தான் அங்கே கார் ஓட்டுவது, ஒரு இனிமையான அனுபவமாக இருக்கிறது. அப்படி ஒருசூழல், நமது நாட்டிலும் நிச்சயம் ஏற்பட வேண்டும்'' என்றார். 

 
கட்டுரை, படங்கள் - வேல்ஸ்.
 
 
TAGS :   TOYOTA, DRIVING SCHOOL, POONDAMALEE, PALLIKARANAI, DRIVERS, CAR, CHENNAI, N. RAJA, KIRLOSKAR MOTORS.