''இந்தியாவில் விற்பனையாகும் கார்கள் பாதுகாப்பானதா?'' - கார் பாதுகாப்பு பற்றி, இந்திய நுகர்வோருக்கான கருத்தரங்கம்!
Posted Date : 20:49 (29/12/2017)
Last Updated : 21:08 (29/12/2017)

 

 

இந்தியா... உலகளவில் கார் விற்பனையில், 6-வது இடத்தில் இருக்கிறது. மேலும் 2016-ல் மட்டும், 2.03 மில்லியன் கார்கள் இந்தியாவில் விற்பனையாகி இருக்கின்றன! உலகளவில் டூ-வீலர் விற்பனையைத் தொடர்ந்து, இந்தியா மற்றொரு விஷயத்திலும் முதலிடத்தில் இருக்கிறது. ஆம், சாலையில் நடைபெறும் விபத்துகள் மற்றும் அதில் நிகழும் உயிரழப்புகள்தான் அது! இந்தியாவின் சாலைகளில் நிகழும் விபத்துகளால், ஒருநாள் உயிர் விடுபவர்களின் எண்ணிக்கை 400 என்றளவில் இருக்கிறது. இது ஒருவருடத்துக்கு கணக்கிட்டால், அது கிட்டத்தட்ட 1.5 லட்சம் உயிரிழப்புகள் என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிடுகிறது!
 
 
இந்தியாவில் ஒருவர் புதிதாகக் கார் வாங்கப் போகிறார் என எடுத்துக்கொண்டால், விலை - ரீசேல் மதிப்பு - டிசைன் - சிறப்பம்சங்கள் - இடவசதி ஆகியவற்றுக்குத் தரும் முக்கியத்துவத்தை, காரில் இருக்கக்கூடிய பாதுகாப்பு உபகரணங்களுக்குத் தருவதில்லை என்ற நிலைதான் நீடித்துவருகிறது. மேலும் இந்தியாவின் சாலை கட்டமைப்பைத் தாண்டி, இங்கு விற்பனை செய்யப்படும் கார்களில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததும், இந்த அதிகப்படியான உயிரிழப்புகளுக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. 
 

 
 
உலக சந்தைகளில் பின்பற்றப்படும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளினால், Global NCAP - Euro NCAP - ASEAN NCAP - Australian NCAP - Japan NCAP - Latin NCAP - China NCAP - USA NCAP என அந்தந்த நாடுகள், தங்களது கார் சந்தைகளில் புதிதாகக் களமிறங்கக்கூடிய கார்களின் பாதுகாப்பை மதிப்பீடு செய்யக்கூடிய அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் பல கார் நிறுவனங்கள், இங்கேயே புதிய கார்களை வடிவமைத்து - தயாரித்து - விற்பனை செய்கின்றனர். என்றாலும், உலக நாடுகளில் இருக்கும் NCAP போன்ற நடைமுறை இதுவரை இங்கே இல்லை! இந்தக் குறைபாட்டைக் களையும் விதமாக, அக்டோபர் 2018-ல் BNVSAP (Bharat New Vehicle Safety Assessment Programme), மிகவும் தாமதமாக என்றாலும், ஒருவழியாகத் துவக்கப்பட இருப்பது ஆறுதல்.
 
 
இதனால் புதிய கார்களில் காற்றுப்பைகள், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன், சீட் பெல்ட் - உறுதியான கட்டுமானம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களும் கட்டாயமாக்கப்பட இருப்பது பெரிய ப்ளஸ். இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில், ''காரில் இருக்கவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விபத்துகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள்'' குறித்த கருத்தரங்கை, Consumer Association of India மற்றும் டெல்லியைச் சேர்ந்த Consumer Voice ஆகியோர் இணைந்து நடத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக, வடசென்னை போக்குவரத்து காவல்துறையின் துணை ஆணையர் டி.சண்முகப்பிரியா கலந்துகொண்டார்.
 

 
 
Consumer Voice பத்திரிகையின் தகவல் தொலைத் தொடர்பு ஆலோசகர் ஹேமந்த் உபாத்யாய் கூறியதாவது, ''அதிகவேகத்தில் செல்வது, குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவது, மொபைலைப் பயன்படுத்திக் கொண்டு வாகனத்தை ஓட்டுவது போன்ற காரணிகளால்தான், இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்கின்றன. ''வாடிக்கையாளர்கள் முக்கியமானவர்கள்; ஆனால் அவர்களின் தேவைகள்தான் கவனத்தில் கொள்வதில்லை''. மேலும் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் என்ட்ரி லெவல் கார்களில் பாதுகாப்பு வசதிகள் இருந்தாலே, சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை 30% வரை தவிர்க்க முடியும். இந்நேரத்தில் சாலைகளும் சீரமைக்கப்பட வேண்டியது அவசியம். இந்நிலையில், மத்திய அரசு UNO அமைப்பிடம், வருகின்ற 2020-க்குள்ளாக, சாலை விபத்துகளை 50% வரை குறைத்துவிடுவதாகச் சொல்லியுள்ளது. ஆனால் என்ட்ரி லெவல் கார்களை வாங்குபவர்கள், பாதுகாப்பு வசதிகள் குறித்து அதிகம் விசாரிப்பதில்லை.
 
 
மேலும் இந்த கார்களை விற்பனை செய்யும் டீலர்களும், இதைப் பற்றி மக்களிடம் எதுவும் சொல்வதில்லை. உலக நாடுகளில் கார் பாதுகாப்பு பற்றிய கட்டுப்பாடுகள் மற்றும் NCAP அமைப்பு இருக்கும் நிலையில், இந்தியாவில் இதுபோன்ற எதுவுமே இல்லை என்பதுதான் முரண். கார்களின் பாதுகாப்பு அளவுகளைப் பரிசோதிப்பதற்கு அதிக பொருட்செலவு ஏற்படும் என்பதால், இதை கார் தயாரிப்பாளர்கள் செய்வதில்லை. எனவே காற்றுப்பை, ஏபிஎஸ், Pretensioner உடனான சீட் பெல்ட், ESC, Pedestrian Protection போன்ற பாதுகாப்பு வசதிகளையாவது கட்டாயமாகக் கார்களில் வழங்குவது குறித்து அவர்கள் பரிசிலிக்கலாம். ஏனெனில் WHO வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையின்படி, ஒருவருடத்தில் நிகழக்கூடிய சாலை விபத்துகளினால், இந்தியாவில் 1.3 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் 37% விபத்துகள், அதிக வேகத்தில் செல்வதாலேயே ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 2016-ல், UN கட்டுப்பாடுகளுக்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. இதன் வெளிப்பாடாக, உலகளவில் 10-வது NCAP ஆக BNVSAP அமலுக்கு வர உள்ளது. 
 
 
 
 
இப்போது AHO, வேகக் கட்டுப்பாடு கருவி, Bus Body Code, இருசக்கர வாகனங்களுக்கு ஏபிஎஸ், LNG Emissions, டபுள் டெக்கர் பஸ் போன்ற பல விஷயங்களைக் குறித்து, நிறுவனங்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். AIS-098: ODB Frontal Impact at 64 Kmph, AIS-099: Side MDB at 50 Kmph, AIS-100: Pedestrian Safety போன்ற பரிசோதனைகள், இதில் செய்யப்பட உள்ளன. இவை உலகளவில் 2008 முதலே பின்பற்றப்பட்டாலும், நம் நாட்டில் வருகின்ற அக்டோபர் 2018 முதலாகப் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்தியாவின் கார் சந்தையின் 40 சதவிகிதத்தை, என்ட்ரி லெவல் கார்கள்தான் ஆக்ரமித்துள்ளன. எனவே விரைவில் வர இருக்கும் BNVSAP காரணமாக, இவற்றின் பாதுகாப்பு அளவுகள் அதிகரிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவர் என்பது ப்ளஸ். இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் டாப்-10 கார்களில் காற்றுப்பைகள், ஏபிஎஸ், சீட் பெல்ட் ஆகியவை இருக்கின்றன. விபத்து ஏற்படும்போது, காரின் முன்பக்கத்தில் இருப்பவர்களின் தலை மற்றும் மார்பு பகுதியில் அடிபடுவதை, சீட் பெல்ட் மற்றும் ஏர்பேக் தடுத்து நிறுத்துகின்றன. இன்னும் சொல்லப்போனால், சாலை விபத்துகளில் ஏற்படக்கூடிய உயிரிழப்பை, 50% வரை கட்டுபடுத்திவிடக்கூடிய திறன் காற்றுப்பைக்கு இருக்கிறது.
 
 
ஒருவர் அதிக வேகத்தில் செல்லும்போது, திடீரென காரின் வேகத்தைக் கட்டுப்படுத்த நினைக்கும்போதுதான் விபத்துகள் நிகழ்கின்றன. ESC-ன் தலையாய பணி, காரை ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இயங்க வைப்பதுதான். எனவே ESC-யை கணக்கில் எடுத்துக்கொண்டால், அது 30% உயிரிழப்புகளைக் குறைக்கும் தன்மை உள்ளது. Visibility Aids ஆகிய ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார் ஆகியவை, பெரும்பாலான கார்களில் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (ISOFIX), இப்போதுதான் மெல்ல பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் Lane Keeping-யைப் பொறுத்தமட்டில், நாம் செல்ல வேண்டிய தூரம் மிகவும் அதிகம். டிரக் மற்றும் பஸ் போன்ற கனரக வாகனங்கள், தரையில் இருந்து குறைந்தபட்சம் 8 இன்ச் (200மிமீ) உயரத்தில் இருந்தால், Pedestrian Protection விதி பயன்படுத்தபட்டிருக்கிறது. 
 

 
 
இந்தியா முழுதும் BS-IV மாசு விதிகள் பின்பற்றப்படுவதுடன், Fire Extinguisher-யை கார்களில் காண முடிகிறது. மேலும் 4 டயர்களிலும் கச்சிதமான காற்றழுத்தத்தைக் கடைபிடிப்பது நலம்'' என்றார். வடசென்னை போக்குவரத்து காவல்துறையின் துணை ஆணையர் டி.சண்முகப்பிரியா பேசும்போது, ''18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள்தான், சாலைகளில் கண்மூடித்தனமாக பைக் ஒட்டுகின்றனர். இதனாலேயே சாலை விபத்துகளில் நிகழக்கூடிய உயிரிழப்பு மற்றும் காயம் அடைபவர்களின் எண்ணிக்கையில், உத்திரபிரதேசத்தை முந்திவிட்டது தமிழ்நாடு. அதாவது தீவிரவாதத்தால் நிகழும் இறப்புகளைவிட, சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் அதிகமாக இருக்கிறது! வருடத்துக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய், சாலை பாதுகாப்புக்காக செலவிடப்படும் நிலையில், சாலையைப் பயன்படுத்தும் அனைவரும் விதிகளை ஒழுக்கமாகப் பின்பற்றினாலே விபத்து எண்ணிக்கையைக் குறைத்துவிட முடியும். இதனாலேயே, பள்ளி குழந்தைகளிடம் சாலை விதிகள் குறித்த கருத்தரங்கை நடத்துகிறோம். அவர்கள் தமது பெற்றோர்கள் தவறிழைக்கும் பட்சத்தில், அவர்களைத் திருத்துவதுதான் இவர்களின் பணியாக இருக்கிறது.
 
 
சென்னையில் ஒருநாளைக்கு மட்டும், 1300 பேர் ஹெல்மெட் இல்லாமல் பயணித்து, அதற்கான அபராதத்தைச் செலுத்த முற்படுகின்றனர். அது வெறும் 100 ரூபாய்தான் என்பதால், அவர்களுக்கு அது ஒரு பொருட்டாக இருப்பதில்லை. பெண்களும் ஹெல்மெட் அணிவதை விரும்புவதில்லை. ஏன் எனக் கேட்டால், ஹேர் ஸ்டைல் போய் விடும், மேக்-அப் அழிந்துவிடும் என்பதைக் காரணமாகச் சொல்கிறார்கள். எனவே டூ-வீலர்களுக்கு ஹெல்மெட் என்றால், கார்களுக்கு சீட் பெல்ட்டைப் பயன்படுத்த வேண்டும்; தவிர நீங்கள் செல்லும் வழியில் இருக்கும் வேகக்கட்டுப்பாட்டுக்கு ஏற்ப வாகனத்தைச் செலுத்துங்கள் என்பதை, அனைவரும் மனதில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இதைச் சரியாகச் செய்தாலே, 30% சாலை விபத்துகளைக் குறைத்துவிட முடியும். 
 
 
 

மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, மருத்துவமனைகள் விரைவாக முதலுதவியைச் செய்ய வேண்டும். 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தும், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டியதனாலேயே, இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் தமது ஓட்டுனர் உரிமத்தை இழந்துவிட்டனர். டூவீலர்களைப் பார்க் செய்யும்போது, அனைவரும் சென்டர் ஸ்டாண்டை உபயோகியுங்கள். ஏனெனில் சைடு ஸ்டாண்டைப் போட்டால், பலர் அதனை மடித்துவைக்க மறந்துவிடுகின்றனர். மொபைலில் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் ஒருவகை என்றால், பாட்டு கேட்டுக்கொண்டே வாகனத்தை இயக்குபவர்கள் மற்றொரு வகை; இதனால் ஏற்படக்கூடிய கவனச் சிதறலால், சில இடங்களில் விபத்துகள் ஏற்படுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
 
 
மிக முக்கியமாக, சிக்னல்களைத் தாண்டுபவர்களும் இப்போது அதிகரித்துவிட்டனர். சிக்னலில் ஆரஞ்ச் விளக்கு எரியும்போது, வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்பது விதி; ஆனால் அப்போதுதான் பலர் வேகமெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த 2 விநாடிகளை மிச்சப்படுத்த என்ணுபவர்கள், விபத்து ஏற்படுவதற்கு 1.2 விநாடி மட்டுமே போதும் என்பதை கவனத்தில் கொள்ள மறுத்துவிடுகின்றனர். கார்களில் க்ராஷ் கார்டு பொருத்தினால், அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாயும், அதிக ஒளியை உமிழும் விளக்குகளைப் பயன்படுத்தினால் 2 ஆயிரம் ரூபாயும், பைக்கில் அதிக சத்தத்தை வெளிப்படுத்தும்படி எக்ஸாஸ்ட்டை மாற்றி இருந்தால் 2 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
 

 
 
 - கட்டுரை, படங்கள்: ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   CONSUMER VOICE, CONSUMER ASSOCIATION OF INDIA, CAR SAFETY, CONSUMER AWARENESS CAMPAIGN, CONFERENCE, ABS, ESC, AIRBAGS, SEAT BELT, PRETENSIONER, LANE KEEPING, REVERSE CAMERA, PARKING SENSORS, INDIA, BNVSAP, EURO NCAP, GLOBAL NCAP, UN, WHO.