கார் நிறுவனங்கள் 2017-ல் செய்தது என்ன? 2018-ல் வரப்போகும் புதிய கார்கள் என்ன? எவ்வளவு விலை உயரும்?
Posted Date : 10:46 (02/01/2018)
Last Updated : 11:20 (02/01/2018)

 

இதோ, 2017-ம் ஆண்டு இறுதி தள்ளுபடிகள் முடிந்து, புத்தாண்டின் துவக்கத்தில் (ஜனவரி 2, 2018) கார்களின் விலைகள் அனைத்தும், ஏற்றம் காணும் கட்டத்துக்கு வந்துவிட்டோம். கார் உற்பத்தியாளர்களின் இந்த வாடிக்கையான நடவடிக்கைக்கு வழக்கம்போல, அதிகரிக்கும் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்களின் செலவு, மாறிவரும் அந்நியச் செலாவணி மற்றும் போக்குவரத்துச் செலவு ஆகியவைதான் காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே ஒவ்வொரு கார் நிறுவனமும், 2017-ல் சாதித்ததையும், 2018-ல் செய்யப் போவதையும், எவ்வளவு விலை உயர்வைச் செய்துள்ளன என்பதையும் தற்போது பார்ப்போம். 

 


 
 
ஹூண்டாய்: இந்தியாவில் மாருதி சுஸூகிக்கு அடுத்தபடியாக, அதிகளவில் கார்களை விற்பனை செய்யும் ஹூண்டாய் நிறுவனம், 2017-ல் கிராண்ட் i10 மற்றும் எக்ஸென்ட் ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களைக் களமிறக்கியது. பின்பு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், புத்தம் புதிய வெர்னாவை அறிமுகப்படுத்தியது. இதன் புக்கிங் எண்ணிக்கை, தற்போது 30 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இந்நிலையில் தங்களது தயாரிப்புகளின் விலையை, 2% அதிகரிக்க உள்ளது ஹூண்டாய். 2018-ல் க்ரெட்டா மற்றும் எலீட் i20 ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் வெளிவர உள்ளன. இதுதவிர, க்விட்டுக்குப் போட்டியாக புதிய சான்ட்ரோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸாவுக்குப் போட்டியாக கார்லினோ ஆகிய கார்களையும் எதிர்பார்க்கலாம்.
 

 
 
மஹிந்திரா: யுட்டிலிட்டி வாகனங்களுக்குப் பெயர்பெற்ற மஹிந்திரா நிறுவனம், 2017-ல் KUV 1OO NXT மற்றும் ஸ்கார்ப்பியோ ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களைக் களமிறக்கியது. தான் விற்பனை செய்யும் விலை அதிகமான காரான XUV 5OO-ல் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனைச் சேர்த்திருக்கும் மஹிந்திரா, தங்களது தயாரிப்புகளின் விலையை 3% அதிகரிக்க உள்ளது. 2018-ல் XUV 5OO-வின் ஃபேஸ்லிஃப்ட், இனோவா க்ரிஸ்டாவுக்குப் போட்டியாக ஒரு எம்பிவி, டிவோலியை அடிப்படையாகக் கொண்டு ஒரு எஸ்யூவி, ஸைலோவுக்கு மாற்றாக TUV 3OO ப்ளஸ் எம்பிவி, புதிய ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் என வரிசையாகக் கார்களை அறிமுகப்படுத்த உள்ள மஹிந்திரா, பெட்ரோல் இன்ஜின்களைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் கார்களின் பக்கமும் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. ''இந்தியாவின் டெஸ்லா'' என்ற கூற்றுக்கு ஏற்ப KUV 1OO, XUV Aero, டிவோலி ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் மாடலையும் விற்பனைக்குக் கொண்டு வரும் என நம்பலாம்.  
 

 
 
டாடா: ஜாகுவார்-லேண்ட்ரோவர் நிறுவனத்தைத் தன் கைவசம் வைத்திருக்கும் டாடா, 2017-ல் ஹெக்ஸா, டிகோர், நெக்ஸான் ஆகிய கார்களைக் களமிறக்கியது. இதில் அசத்தலான விலையில் விற்பனைக்குவந்த நெக்ஸானின் உற்பத்தி எண்ணிக்கை, 10 ஆயிரம் கார்களைத் தாண்டிவிட்ட நிலையில், இதன் விலையை 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளது டாடா. மேலும் இந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளும், விலை உயர்வைப் பெற உள்ளன. 2018-ல் நெக்ஸான் AMT, ஜீப் காம்பஸுக்குப் போட்டியாக ஒரு எஸ்யூவி, ஹூண்டாய் க்ரெட்டாவுக்குப் போட்டியாக ஒரு எஸ்யூவி, பெலினோவுக்குப் போட்டியாக ஒரு பிரிமியம் ஹேட்ச்பேக், பெலினோ RS-க்குப் போட்டியாக டியாகோ ஸ்போர்ட் என அசத்தக் காத்திருக்கிறது. மேலும் டியாகோ, டிகோர், நானோ ஆகியவற்றின் எலெக்ட்ரிக் மாடல்களும் வெளிவரும் என நம்பலாம்.
 

 
 
ரெனோ: டஸ்ட்டர் & க்விட் ஆகிய கார்களின் தயாரிப்பாளரான ரெனோ, 2017-ல் க்விட் க்ளைம்பர் மற்றும் கேப்ச்சர் ஆகிய கார்களை அறிமுகப்படுத்தியதுடன், பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய டஸ்ட்டரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் விற்பனைக்குக் கொண்டுவந்தது. இந்நிலையில் தனது தயாரிப்புகளின் விலையை 3% அதிகரிக்க உள்ளது ரெனோ. 2018-ல் க்ரெட்டாவுக்குப் போட்டியாக புதிய டஸ்ட்டர், க்விட்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு எம்பிவி மற்றும் எலெக்ட்ரிக் காரைக் களமிறக்கும் முடிவில் இருக்கிறது.  
 

 
 
நிஸான் - டட்ஸன்: கார் ஆர்வலர்களால் ''Godzilla'' என அழைக்கப்படும் GT-R பெர்ஃபாமென்ஸ் காரின் தயாரிப்பாளரான நிஸான், தான் ஏற்கனவே விற்பனை செய்யும் மைக்ரா, சன்னி, டெரானோ ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களைத்தான் 2017-ல் களமிறக்கியது. 2018-ல் எக்ஸ்-ட்ரெயில் மற்றும் கிக்ஸ் ஆகிய எஸ்யூவிகளைத் தொடர்ந்து, மைக்ரா மற்றும் சன்னி ஆகிய கார்களின் முற்றிலும் புதிய மாடல்களுடன், லீஃப் மற்றும் நோட் E-பவர் ஆகிய எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகத்தையும் எதிர்பார்க்கலாம். டட்ஸனைப் பொறுத்தமட்டில், 2017-ல் ரெடி-கோ காரின் 1.0 லிட்டர் மாடலை அறிமுகப்படுத்தியது என்றால், 2018-ல் கோ-க்ராஸ் காரைக் களமிறக்க உள்ளது. இந்நிலையில் தனது தயாரிப்புகளின் விலையை, 15 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க உள்ளது நிஸான்.
 

 
 
ஃபோர்டு: கார் ஆர்வலர்களால் ''Pony Car'' என அழைக்கப்படும் மஸ்டாங்கின் தயாரிப்பாளரான ஃபோர்டு, 2017-ல் ஃபிகோ S, ஆஸ்பயர் S என ஸ்போர்ட்ஸ் எடிஷன்களை அறிமுகப்படுத்தியது. பின்னர் எக்கோஸ்போர்ட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கிய ஃபோர்டு, தனது தயாரிப்புகளின் விலையை 4% அதிகரிக்க உள்ளது. இதனால் எக்கோஸ்போர்ட்டின் விலை, 30 ஆயிரம் ரூபாய் வரை உயரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. 2018-ல் மஸ்டாங், ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் ஆகியவற்றின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள், புதிய 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய ஃபிகோ க்ராஸ் ஆகிய கார்களை வெளியிட உள்ளது.
 

 
 
ஜீப்: உலகளவில் எஸ்யூவிகளுக்குப் பெயர்பெற்ற ஜீப், 2017-ல் காம்பஸ் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது. அதிரடியான விலையில் வெளிவந்ததால், விரைவாகவே 10 ஆயிரம் கார்கள் என்ற இலக்கை இது எட்டிப்பிடித்தது. இந்நிலையில் 2 முதல் 4 சதவிகிதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது ஜீப். இது காம்பஸின் ஆரம்ப வேரியன்ட்டுக்குப் பொருந்தாது; 2018-ல் எக்கோஸ்போர்ட்டுக்குப் போட்டியாக ரெனிகெய்ட், புதிய ரேங்க்ளர் ஆகிய கார்களை அறிமுகப்படுத்தும் முடிவில் இந்நிறுவனம் இருக்கிறது. 
 

 
 
டொயோட்டா: உலகில் அதிகமாக விற்பனையாகும் காரைத் (கரோலா ஆல்ட்டிஸ்) தயாரிக்கும் டொயோட்டா நிறுவனம், 2017-ல் இனோவா க்ரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் மற்றும் கரோலா ஆல்ட்டிஸ் ஃபேஸ்லிஃப்ட் ஆகிய கார்களைக் களமிறக்கியது. இந்நிலையில் தனது தயாரிப்புகளின் விலையை 3% அதிகரிக்க உள்ளது. இதனால் எட்டியோஸ் லிவாவின் விலை 16 ஆயிரம் ரூபாயும், ஃபார்ச்சூனரின் விலை 81 ஆயிரம் ரூபாய் வரை உயரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. 2018-ல் சிட்டிக்குப் போட்டியாக வியோஸ், க்ரெட்டாவுக்குப் போட்டியாக ரஷ், அக்கார்டுக்குப் போட்டியாக புதிய கேம்ரி ஆகிய கார்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
 

 
 
ஃபோக்ஸ்வாகன்: கட்டுமானத் தரத்துக்குப் பெயர்பெற்ற ஃபோக்ஸ்வாகன், 2017-ல் டிகுவான் மற்றும் பஸாத் ஆகிய கார்களைக் களமிறக்கியது. இந்நிலையில் தனது தயாரிப்புகளின் விலையை 20 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க உள்ள ஃபோக்ஸ்வாகன், 2018-ல் கரோலாவுக்குப் போட்டியாக ஜெட்டா மற்றும் புதிய பட்ஜெட் கார்களை அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது. 
 

 
 
ஸ்கோடா: ஓட்டுதல் அனுபவத்துக்குப் பெயர்பெற்ற ஸ்கோடா, 2017-ல் ஆக்டேவியாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கியது. பின்பு அதே காரின் பெர்ஃபாமென்ஸ் வெர்ஷனான RS-யும் கொண்டுவந்தது ஸ்கோடா. இந்தியாவுக்காக தயாரித்த 250 கார்களையும் இந்நிறுவனம் விற்பனை செய்துவிட்டதில் இருந்தே, இந்த காருக்குக் கிடைத்த அதிரடியான வரவேற்பு தெரிகிறது. பின்னர் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோடியாக் வெளிவந்தது. இந்நிலையில் 2 முதல் 4 சதவிகிதம் வரை விலை உயர்வை அறிவித்திருக்கும் ஸ்கோடா, 2018-ல் காம்பஸுக்குப் போட்டியாக கரோக் மற்றும் புதிய பட்ஜெட் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது.
 

 
 
இசுஸூ: கரடுமுரடான வாகனங்களுக்குப் பெயர்பெற்ற இசுஸு, 2017-ல் போட்டியாளர்களைவிடக் குறைவான விலையில் MU-X எஸ்யூவியைக் களமிறக்கியது. இந்நிலையில் 3 முதல் 4 சதவிகிதம் வரை விலை உயர்வை அறிவித்திருக்கும் இசுஸூ, 2018-ல் பேஸ்லிஃப்ட் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது.  
 

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   HYUNDAI, MAHINDRA, TATA, SSANGYONG, KIA, RENAULT, NISSAN, DATSUN, FORD, JEEP, FIAT, TOYOTA, LEXUS, 2018, VOLKSWAGEN, SKODA, ISUZU.