விர்ச்சுவல் ரியாலிட்டி... வின்டேஜ் கார்... 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வேறு என்ன ஸ்பெஷல்?
Posted Date : 14:37 (04/01/2018)
Last Updated : 14:53 (04/01/2018)


டிசம்பர் மாதம் வந்தவுடன், ஐயப்ப பக்தர்கள் எல்லாம் சபரிமலை போவது வாடிக்கை. அதுபோலவே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை - பிப்ரவரி மாதம் வந்துவிட்டால், ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் புதுடெல்லிக்குப் பக்கத்தில் இருக்கும் நொய்டாவுக்குச் செல்வதும் வழக்கமான நிகழ்வுதான்; காரணம் - டெல்லி ஆட்டோ எக்ஸ்போ...! சொசைட்டி ஆஃப் ஆட்டோமொபைல் மேனுஃப்பேக்ச்சரர்ஸ் (SIAM), இந்திய ஆட்டோமோட்டிவ் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தும் சர்வதேச நிகழ்ச்சி என்பதால், கார்கள் - பைக்குகள் - உதிரி பாகங்கள் என்று புதிய அறிமுகங்களுக்குப் பஞ்சமிருக்காது.
 

 
 
2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ, நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில், வருகின்ற பிப்ரவரி 9-ம் தேதி துவங்கி, பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது (மொத்தம் 6 நாட்கள்). காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பிசினஸ் ஹவர்ஸ் என்றும், மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்கான பார்வை நேரம் என்று கால அட்டவணை பிரிக்கப்பட்டுள்ளது. இதுவே வார இறுதி விடுமுறை நாள்களில், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்களுக்கான பார்வை நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகப் பார்வை நேரத்தில் நபருக்கு 750 ரூபாய், பொதுமக்களுக்கான பார்வை நேரத்தில் நபருக்கு 350 ரூபாய், வார இறுதி நாள்களில் நபருக்கு 475 ரூபாய், இறுதி நாளில் மட்டும் நபருக்கு 450 ரூபாய் என டிக்கெட் விலை உள்ளது. 
 

 
 
புதிய கார் மற்றும் பைக் அறிமுகங்கள் மட்டுமல்லாது, 1.85 லட்சம் சதுர அடி பரப்பில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில், வின்டேஜ் கார்கள் மற்றும் சூப்பர் கார்களுடன், 70வருட இந்திய ஆட்டோமொபைல் துறையின் மகத்துவமான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களும் இம்முறை காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. எனவே ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் அனைவரும், தாங்கள் பல நாள்களாக இந்தியாவிற்கு வருமா என்று கனவு கண்டு காத்திருந்த பைக் மற்றும் கார்களுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க அம்சங்களையும் அருகில் இருந்து பார்க்கலாம். கடந்த முறை நடைபெற்ற 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் சில கல்வி நிலையங்களும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் கலந்து கொண்டன. இந்த ஆண்டு மின்சார வாகனங்களைக் காட்சிப்படுத்தும் அரங்குகள் தனிக்கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்பே சொன்னது போல, காலம் சென்ற பாரம்பரிய கார்கள் மற்றும் ஹை-பர்ஃபாமென்ஸ் சூப்பர் கார்களுகென்று தனியாக அரங்கு வழங்கப்பட்டுள்ளது. 
 

 
 
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப், தனது ராலி வாகனங்கள் மற்றும் சில நினைவு பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கு எனத்தனியாக ஒரு அரங்கத்தை அமைக்க உள்ளது. தவிர, முதல்முறையாக E-Gaming அமைப்பு நடத்தும் அகில இந்திய ஆட்டோமொபைல் கேமிங் சாம்பியன்ஷிப்பும் நடைபெறவுள்ளதை இங்கே சொல்லியாக வேண்டும். இதனுடன் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) அரங்கம், 70 வருட இந்திய ஆட்டோமொபைல் துறையை பிரதிபலிக்கும் அரங்கம்... ஆகியன இந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிதாக இடம்பெற இருக்கின்றன.
 
 
 
 
மேலும் போலி உதிரிபாகங்களைக் கண்டுபிடிக்கவும் ஒழிக்கவும், உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் தனியாக ஒரு அரங்கம் அமைக்க இருக்கிறது. 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்டது மக்களே! Bookmyshow.com இனையதளத்தில், சினிமா டிக்கெட்டைப் போலவே, ஆட்டோ எக்ஸ்போவுக்கான டிக்கெட்டையும் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   2018, DELHI AUTO EXPO, INDIA, DELHI, MOTOR SHOW, SIAM, ACMA, CII, GREATER NOIDA, INDIA EXPO MART, COMPNENTS EXPO, PRAGADHI MAIDHAN, ELECTRIC CARS, VINTAGE CARS, VIRTUAL REALITY, PETROL, DIESEL.