அலாய் வீலைத் தாண்டி, 2018 ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு பைக்கில் என்ன ஸ்பெஷல்?
Posted Date : 15:02 (04/01/2018)
Last Updated : 15:57 (04/01/2018)


சில மாதங்களுக்கு முன்பு, தனது டாப் செல்லிங் பைக்கான க்ளாஸிக் சீரிஸ் பைக்கில் (350சிசி, 500சிசி), பின்பக்க டிஸ்க் பிரேக் உடனான புதிய கலர் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு. தற்போது அதே பாணியைப் பின்பற்றி, தண்டர்பேர்டு பைக்கிலும் புதிய கலர் ஆப்ஷன்களை இந்நிறுவனம் களமிறக்க உள்ளது. 350X மற்றும் 500X எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த தண்டர்பேர்டு மாடல்களின் ஸ்பை படங்கள், இணைய உலகில் தற்போது வைரலாகப் பரவிவருகின்றன.
 
 
 
 
இவற்றின் பெயருக்கு ஏற்றபடியே, இந்த பைக்குகளில் இருப்பது அதே 346சிசி மற்றும் 499சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான்! ஆனால் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, இவற்றின் தோற்றத்தில் கணிசமான மாற்றங்கள் இருப்பது தெரிகிறது. க்ரூஸராகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் தண்டர்பேர்டு பைக்கில், Ape Hanger உடனான ஹேண்டில்பார் சற்றே உயரத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த புதிய X மாடல்களில், வழக்கமான பைக்குகளில் இருப்பதுபோலவே ஷார்ட் ஹேண்டில்பார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 
 

 
 
மேலும் வழக்கமான தண்டர்பேர்டு பைக்கில் ஸ்ப்ளிட் சீட்கள் இருந்த நிலையில், இந்த X மாடலில் ஸ்டைலான சிங்கிள் பீஸ் சீட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பேக் ரெஸ்ட் இல்லை என்றாலும், அதற்குப் பதிலாக வழங்கப்பட்டிருக்கும் புதிய ஸ்ப்ளிட் கிராப் ரெயில் வசிகரிக்கிறது. ராயல் என்ஃபீல்டு வரலாற்றிலே முதன்முறையாக, X மாடல்களில் 9 ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் MRF டீயூப்லெஸ் டயர்கள் இடம்பெற்றிருப்பது பெரிய ப்ளஸ்.
 
 
 
 
மேலும் 20 லிட்டர் பெட்ரோல் டேங்க்கைத் தவிர்த்து பார்த்தால், இன்ஜின் - அலாய் வீல்கள் - எக்ஸாஸ்ட் பைப் - மட்கார்டு - சேஸி - சஸ்பென்ஷன் - பாடி பேனல்கள் என பைக் மொத்தமும் மேட் ஃப்னிஷ் கொண்ட கறுப்பு நிறமே வியாபித்திருக்கிறது. இதனுடன் ஹெட்லைட் - இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், இண்டிகேட்டர் ஆகியவற்றின் கேஸிங்கும், அதே மேட் ஃப்னிஷ்  கறுப்பு நிறத்தில் இருக்கிறது. பெட்ரோல் டேங்க்கின் கலருக்கு மேட்சிங்காக, அலாய் வீல்களில் ரிம் ஸ்ட்ரிப் இருக்கிறது. 
 

 
 
மற்றபடி LED DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட், LED டெயில் லைட், Amber நிற இண்டிகேட்டர்கள், டிஸ்க் பிரேக்ஸ், அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், முன்பக்க மற்றும் பின்பக்க 19 இன்ச் - 18 இன்ச் டயர்கள், வட்ட வடிவ ரியர் வியூ மிரர்கள் என மற்ற வசதிகள் அப்படியே தொடர்கின்றன. இதெல்லாம் ஒன்று சேரும்போது, ட்ரையம்ப் போனவில்லி பைக்கை நினைவுபடுத்தும்படியான டிசைனை கொண்டிருக்கிறது தண்டர்பேர்டு 350X & 500X. இதில் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் 350X பைக்கும், நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் 500X பைக் கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.
 
 
 
 
ஆகவே இந்த பளிச் பளிச் நிறங்களால் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொள்ள, ராயல் என்ஃபீல்டு முடிவு செய்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் புதிய X மாடல்களின் விலைகள், வழக்கமான தண்டர்பேர்டு 350சிசி மற்றும் 500சிசி மாடல்களைவிடச் சற்றே அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கிலாவது ஏபிஎஸ்ஸை ராயல் என்ஃபீல்டு சேர்த்திருக்குமா என்பது, இவற்றின் அதிகாரப்பூர்வமான அறிமுகத்தின் போதுதான் தெரியும். தற்போதுதான் விற்பனை செய்யும் மாடல்களின் விலையை, டிசம்பரில் 500 ரூபாய் அதிகரித்துவிட்டது ராயல் என்ஃபீல்டு.   
 

 
- ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   ROYAL ENFIELD, INDIA, THUNDERBIRD, CLASSIC, 350X, 500X, ALLOY WHEELS, ABS, TUBELESS TYRES, SINGLE PIECE SEAT, 500X, LED DRL, LED TAIL LIGHT, PROJECTOR HEADLIGHT, DISC BRAKES, ANALOG DIGITAL METER, FI.