புது நம்பர் ப்ளேட், ஃப்ரீ பார்க்கிங்... இன்னும் என்ன இருக்கு!
Posted Date : 16:08 (08/01/2018)
Last Updated : 21:01 (09/01/2018)

 

மத்திய அரசின் செயல் வரைவு திட்டமிடல் குழுவான நிதி ஆயோக், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் நார்வே, பிரான்ஸ், கனடா போல இந்தியாவிலும் மின்சார கார்களை வாங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக சில சலுகைகளைத் தரவேண்டும் என்றும், அதற்காக ஒரு திட்டமிடல் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அரசுக்குச் சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அப்பரிந்துரைகளின் படி எதிர்காலத்தில் இந்தியாவில் மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு எக்கச்சக்க சலுகைகள் காத்திருக்கின்றன மக்களே!

 

 

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியில் இருக்கும் நிதி ஆயோக், இந்தியாவில் பதியப்படும் மின்சார வாகனங்களுக்குப் பச்சை நிற நம்பர் ப்ளேட் தர வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் பச்சை நம்பர் ப்ளேட் வாகனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு இலவச பார்க்கிங், இந்தியா முழுவதும் சுங்கக் கட்டணம் தள்ளுபடி போன்ற சலுகைகளையும் பரிந்துரைத்துள்ளது. மேலும் இந்த வாகனங்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு,
 
ஷாப்பிங் மால் மற்றும் இதர பொது இடங்களில் 10 சதவீத கூடுதல் இடத்தை பார்க்கிங்கிற்காக ஒதுக்கீடு செய்யவேண்டும், மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு வரிச் சலுகையும் அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இந்தச் சலுகைகளை அளிப்பதன் மூலம் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க முடியும் என்று கூறுகிறார்கள் நிதி ஆயோக் நிர்வாகிகள். 
 
 
 
 
தற்போது மத்திய அரசு, Faster Adoption and Manufacturing of Electric Vehicles (FAME) எனும் திட்டம் மூலம் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் மானியம் வழங்கிவருகிறது.  2030-க்குள் மின்சார வாகனங்கள் பரவலாக்கப்பட்டால் 37 சதவீத கார்பன் மாசுபாட்டையும், 64 சதவீத எரிபொருள் தேவையையும் குறைக்கலாம். கூடுதலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக செலவழிக்கப்படும் 6000 கோடி ரூபாயை இந்திய அரசு சேமிக்கலாமாம் . 
 
அதற்கு, டாஸ்மாக்கைவிட அதிகமாக சார்ஜிங் ஸ்டேஷன்கள் வேண்டும் அதிகாரிகளே! செய்வீர்களா? 
 
 - ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   electric vehicles, electric cars, motor vikatan, vikatan, Niti aayog, incentives, free parking