''Made In India'' பாகுபலியை அறிமுகப்படுத்தியது க்ரீவ்ஸ் காட்டன்!
Posted Date : 22:38 (08/01/2018)
Last Updated : 22:45 (08/01/2018)


இந்திய ஆட்டோமொபைல் துறையில் தவிர்க்க முடியாத பெயர், க்ரீவ்ஸ் காட்டன். தற்போது விவசாய துறையில் அதிகரித்து வரும் தேவைகளை மனதில்வைத்து, அதுசார்ந்த புதிய தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளில் முதலீடு செய்திருந்தது க்ரீவ்ஸ் காட்டன். தற்போது அதன் வெளிப்பாடாக, பாகுபலி என்ற பெயரில் பவர் டில்லர் (Power Tiller) ஒன்றை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘Made in India, Made for India’ என்ற கோட்பாடுக்கு ஏற்ப, முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது இந்த பவர் டில்லர்.
 
 
 
 
மேலும் தனது வகையிலே பவர்ஃபுல் பர்ஃபாமென்ஸ் (14bhp) - அதிக ஆழத்தில் நிலத்தை உழும் திறன் -  சிறந்த மைலேஜ் - உறுதியான கட்டுமானம் என பாகுபலி நீண்ட ஆயுளுடன் அசத்தும் என்கிறது க்ரீவ்ஸ் காட்டன். தனது புதிய பவர் டில்லரை அறிமுகப்படுத்திவிட்டு பேசிய இந்நிறுவனத்தின்  MD & CEO-வான நாகேஷ் பாசாவான்ஹாலி கூறியதாவது, ''எங்களின் நீண்ட கால திட்டங்களை மனதில்வைத்து, வருங்காலத் தொழில்நுட்பம் - தொழிற்சாலை - ஊழியர்கள் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளோம்.
 
இதனால் நிலத்தை உழுவது தொடங்கி அறுவடை வரை என விவசாய துறை சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை எங்களால் வழங்கமுடிகிறது. இந்திய பொருளாதாரத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்களால், விவசாய இயந்திரங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நிலத்தில் இருந்து அதிக விளைச்சலைப் பெறுவது அவசியமாகிறது '' என்றார். ராணிபேட்டையில் அமைந்திருக்கும் தனது தொழிற்சாலையில், விவசாய தேவைகளுக்கான இயந்திரங்களை க்ரீவ்ஸ் காட்டன் தயாரித்துவருகிறது.
 

 
 
இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருக்கும் மக்கள் தொகையால், ஒருவர் தன்வசம் வைத்திருக்கும் விவசாய நிலத்தின் அளவு மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது. இதனைச் சீர்செய்யும் பொருட்டு,  விவசாயிகளுடன் ஒன்றினைந்து செயல்படுவதால், அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற தயாரிப்புகளை உற்பத்தி செய்யமுடிவதுடன்,
 
ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து அதிக மகசூலைப் பெற அவர்களுக்கு உதவி செய்வதாக க்ரீவ்ஸ் காட்டன் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பேசிய எம். மோகனன் (விவசாய பிரிவின் President, க்ரீவ்ஸ் காட்டன்), '' விவசாய துறைசார்ந்த தயாரிப்புகளை வழங்குவதில் முன்னோடியாக இருக்கும் க்ரீவ்ஸ் காட்டன், பயிர் விளைச்சலின் ஒவ்வொரு கட்டத்திற்கும் (பாசனம் - மண்ணைத் தயாரிப்பது - பயிர்களை நடுவது - பயிர்களைப் பாதுகாப்பது - அறுவடை மற்றும் அதற்குப் பிந்தைய வழிமுறை) தேவையான இயந்திரங்களைத் தயாரித்துவருகிறது.
 
 
 
 
தற்போது முதன்முறையாக இந்தியாவிலேயே முழுமையாகத் தயாரிக்கப்பட்ட பவர் டில்லரை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது '' என்றார். விவசாயத் தொழிலாளர்கள் குறைந்துவரும் நிலையில், தரமான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த விவசாய இயந்திரங்கள், சிறந்த மாற்றாக இருக்கும். இந்தியாவில் 3,500-க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களை கொண்ட க்ரீவ்ஸ் காட்டன், 159 வருட பழைமையான நிறுவனமாகும்.
 
இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமான பம்ப் செட்களையும், 5 மில்லியனுக்கும் அதிகமான பெட்ரோல் / டீசல் இன்ஜின்களையும், 1 மில்லியனுக்கும் அதிகமான ஜென் செட்களையும் இந்தியாவில் இந்நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது! தற்போது எலெக்ட்ரிக் மற்றும் சோலார் உதவியுடன் இயங்கக்கூடிய பம்ப்களைத் தயாரிக்கும் முடிவில் க்ரீவ்ஸ் காட்டன் இருக்கிறது.
 

 
 
கட்டுரை, படங்கள் - ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   GREAVES COTTON, GREAVES AGRI, INDIA, RANIPET, AHMEDABAD, PUNE, PLANTS, AGRICULTURE EQUIPMENT, PLOUGH, FARMING, HARVEST, LABOUR, ECONOMY, MACHINERY, PETROL, DIESEL, SOLAR, EV, POWER TILLER, KEROSENE.