ஆந்திராவில் புதிய தொழிற்சாலையை நிறுவுகிறது அப்போலோ டயர்ஸ்!
Posted Date : 20:48 (09/01/2018)
Last Updated : 20:56 (09/01/2018)


 

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அப்போலோ டயர்ஸ் நிறுவனம், இந்தியா மற்றும் ஆசியாவின் முன்னணி டயர் தயாரிப்பாளர்களுள் ஒன்று. ஆந்திரப் பிரதேச மாநிலம் - சித்தூர் மாவட்டம் - சின்னப்பன்டுரு கிராமத்தில் தனது புதிய தொழிற்சாலையை இந்நிறுவனம் கட்டமைக்க உள்ளது. 1800 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் இந்த தொழிற்சாலைக்காக, சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர பிரதேச அரசாங்கத்திடமிருந்து 200 ஏக்கர் நிலத்தை அப்போலோ டயர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. முதற்கட்டமாக ஆண்டுக்கு 5.5 மில்லியன் டயர்களைத் தயாரிக்கும் திறனை, இந்தத் தொழிற்சாலை கொண்டிருக்கிறது.
 
அடுத்த 6 மாதங்களில் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் துவங்கும் என்பதுடன், அடுத்த 2 ஆண்டுகளில் இது டயர்களை உற்பத்தி செய்யத் துவங்கிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாசஞ்சர் வகை வாகனங்களுக்கான டயர்களுக்கு அதிக டிமாண்ட் நிலவுவதால், முதலில் அதற்கான டயர்களை இந்தத் தொழிற்சாலை முதலில் தயாரிக்கத் துவங்கும் என்றும், பின்னர் தேவைக்கு ஏற்ப கனரக மற்றும் கமர்ஷியல் வாகனங்களுக்கான டயர்களின் உற்பத்தியும், ஏற்றுமதியும் இங்கே நிகழும் எனத் தெரிகிறது. இதற்காக 700 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை, அப்போலோ டயர்ஸ் நிறுவனம் வழங்க உள்ளது. 
 
 
 
 
இன்று நடைபெற்ற இந்தத் தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயூடு கூறியதாவது, '' சென்னை மற்றும் ஹங்கேரியைத் தொடர்ந்து, சர்வதேச தரத்திலான டயர் தொழிற்சாலையை, ஆந்திர பிரதேச மாநிலத்தில் கட்டமைக்க முடிவு செய்திருக்கும் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துக்கு வாழ்த்துகள். இதனால் 700 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க நேரும்போது, கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகும் '' என்றார்.
 
இவரைத் தொடர்ந்து பேசிய அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் சேர்மென் ஒன்கார் எஸ். கன்வார், '' இந்த சர்வதேச தரத்திலான தொழிற்சாலையை, அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை மனதில்வைத்தே வடிவமைக்க உள்ளோம். எனவே சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிப்பது சுலபமாக இருக்கும் என்பதுடன், எங்கள் நிறுவனத்தின் புதிய வகை டயர்களையும் இங்கே உற்பத்தி செய்யமுடியும். ஆந்திர பிரதேச அரசாங்கம் எங்களுக்கு வழங்கிய ஆதரவுக்கு மிக்க நன்றி. அது இந்த தொழிற்சாலையின் கட்டமைப்பின் போதும், உற்பத்தியின் போதும் தொடரும் என எதிர்பார்க்கிறோம் '' என்றார். 
 

 
 
குஜராத் மற்றும் சென்னையில் தலா ஒரு டயர் தொழிற்சாலை, கேரளாவில் 2 டயர் தொழிற்சாலை, ஆந்திர பிரதேசத்தில் புதிதாகக் கட்டமைக்கப்படும் டயர் தொழிற்சாலை என இந்தியாவில் மொத்தம் 5 டயர் தொழிற்சாலைகளை வைத்திருக்கும் அப்போலோ டயர்ஸ், நெதர்லாந்து மற்றும் ஹங்கேரியில் தலா ஒரு டயர் தொழிற்சாலையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய தொழிற்சாலையைத் தொடர்ந்து, இருசக்கர வாகனங்களுக்கான ரேடியல் டயர்களையும், உயர் ரக Bias Ply டயர்களையும் அறிமுகப்படுத்தும் முடிவில் அப்போலோ டயர்ஸ் நிறுவனம் இருக்கிறது. 
 

 - ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   APOLLO TYRES, INDIA, DUNLOP, VREDESTEIN, RADIAL TYRES, BIAS PLY TYRES, HUNGARY, NETHERLANDS, GUJARAT, KERALA, CHENNAI, ANDHRA PRADESH, TYRE FACTORY, 1800 CRORES, 5.5 MILLION TYRES PER ANNUM, CHANDRA BABU NAIDU, CM, NEERAJ KANWAR.