சொகுசு கார்களின் விற்பனையில், மெர்சிடீஸ் பென்ஸ் தான் ராஜா!
Posted Date : 16:11 (10/01/2018)
Last Updated : 16:32 (10/01/2018)


இந்தியாவில் கார்களின் விற்பனை அதிகமாக இருந்தாலும், சொகுசு கார் செக்மென்ட் என்பது மிகவும் சிறியதுதான். ஆனால் வேகமாக வளர்ந்துவரும் இந்த சந்தையில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக, சொகுசு கார்களின் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்து, ஹாட்ரிக் அடித்திருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். கடந்த 2017-ம் ஆண்டில், மொத்தம் 15,330 கார்களை இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 16 சதவீகிதம் அதிக விற்பனை எண்ணிக்கை மக்களே! இதில் GST வரி அமலுக்கு வந்தபிறகு மட்டும், 8159 கார்களை விற்பனை செய்திருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். 
 
 
 
 
இந்நிறுவனத்தின் செடான் கார்களான C-க்ளாஸ், E-க்ளாஸ், S-க்ளாஸ்; எஸ்யூவிகளான GLC, GLE, GLS ஆகிய மாடல்கள், கடந்த ஆண்டில் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இதில் முன்னே சொன்ன எஸ்யூவிகள் அனைத்தும், தொடர்ந்து இரண்டாவது வருடமாக அதன் பிரிவில் டாப் செல்லிங் மாடல்களாக இருக்கின்றன. இந்தியாவில் கடந்த ஆண்டில் 15,330 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தாலும்,
 
 
 
 
உலகளவில் 22,89,344 கார்களை விற்பனை செய்துள்ள மெர்சிடீஸ் பென்ஸ், விற்பனை எண்ணிக்கையில் கடந்த ஆண்டைவிட 10 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிறுவனத்துக்குப் பிறகு அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனமாக பிஎம்டபிள்யூ உள்ளது. 2014-ம் ஆண்டு வரை, இந்தியாவில் சொகுசு கார் விற்பனையில் முதலிடத்தில் இருந்த ஆடி, தற்போது மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டில், 7,876 கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. 
 

 
 
கார் விற்பனையில் மெர்சிடீஸ் பென்ஸ் படைத்திருக்கும் சாதனையை குறித்து பேசிய இந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரோலண்டு ஃபோல்கர் " கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட E-Class LWB செடான், நிறுவனத்துக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. GST அறிமுகப்படுத்தியபோது மகிழ்ச்சி அடைந்தாலும், பிறகு கார்களுக்கான CESS-யை ஏற்றம் செய்ததால், இனி வரும் நாட்களில் சொகுசு கார்களின் விற்பனை சற்று மந்தமாகவே இருக்கும் என்றே எண்ணினேன். ஆனால் இந்தியாவில் வருடத்திற்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமான சொகுசு கார்கள் விற்பனையாவது இதுவே முதல் முறை என்பதால், இந்த சாதனை இலக்கை அடைந்திருப்பதில் மகிழ்ச்சி " என்றார். மேலும் 2018-ல் இந்தியாவில் புதிய கார்களையும், தனது பர்ஃபாமென்ஸ் பிரிவான AMG-ல் புதிய கார்களை வெளியிட உள்ளதாகவும் கூறினார். 
 

 
 - ரஞ்சித் ரூஸோ.
 
 
 
TAGS :   MERCEDES BENZ, BMW, AUDI, GERMANY, INDIA, CAR SALES, LUXURY CAR, COMFORT, GLC, GLE, GLS, S-CLASS, E-CLASS, C-CLASS, SEDAN, SUV, LWB, DIESEL, AMG, PERFORMANCE CAR