மாருதியின் புது ஸ்விஃப்ட்
Posted Date : 11:00 (20/01/2018)
Last Updated : 11:09 (20/01/2018)
கடந்த சில மாதங்களாக மிகுந்த எதிர்பார்ப்புகளை ஈர்த்த மாருதி சுசூகியின் 2018 மாடல் ஸ்விஃட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த காருக்கு முன்பதிவுகளும் தொடங்கப்பட்டுவிட்டது. புதிய ஸ்விஃப்ட்டில் அப்படி என்ன இருக்கிறது? 
 
 
தற்போது வெளியாகியுள்ள மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மாருதியின் Heartect ப்ளாட்ஃபார்மில் உருவாகவுள்ளது. இந்த புதிய ஸ்விஃப்ட் முந்தைய ஸ்விஃட்டை விட 40 கிலோ எடை குறைவானதாக உள்ளது. கடந்த ஆண்டு வெளியான மாருதி டிசையரும் இதே ப்ளாட்ஃபார்மில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
புதிய ஸ்விஃப்ட் 40மிமி அதிக அகலமாவும் 20மிமி அதிக வீல் பேஸ் உடனும், 24மிமி அதிக ஹெட் ரூம் மற்றும் 58 லிட்டர் அதிக பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது. இதன் மூலம் முந்தைய மாடல் காரை விட அதிக இடவசதியோடும் சௌகரியமாகவும் இருக்கம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே 1.2-litre VVT பெட்ரோல், 1.3-litre DDiS டீசல் இன்ஜினோடு வருகிறது. பெட்ரோல் இன்ஜின் 83bhp பவரும் 113Nm டார்க்கும் தரும். டீசல் இன்ஜின் 75bhp பவரும் 190Nm டார்க்கும் தரும். இந்த இன்ஜின்கள் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் கூட்டணியோடு வருகிறது. 
 
வெளிப்புற டிசைன் மாற்றங்களாக புதிய single-aperture கிரில், dual-tone அலாய் வீல், மெல்லிசாக உள்ள ப்ஃளோட்டிங் ரூஃப், கறுப்பு நிறத்தில் உள்ள பி-பிள்ளர், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பம்பர், எல்இடி ப்ரொஜக்டர் ஹெட்லைட்-டெயில் லைட் மற்றும் எல்இடி டிஆர்எல் இருக்கிறது. அதிக விலை வேரியண்டில் ஹெட்லைட் பக்கவாட்டு பகுதிகள் கறுப்பு நிறத்தில் ஸ்டைலாக உள்ளது. 
 
 
காரின் உட்புறம் டிசையர் போலவே இருந்தாலும் டூயல் டோன் இல்லாமல் முழு கறுப்பு இன்டீரியரோடு வருகிறது ஸ்விஃப்ட். டிசையரில் இருந்து மாறுபட்டு இந்த காரில் வட்டவடிவ ஏசி வென்ட் மற்றும் கன்ட்ரோல் டயல்கள் உள்ளது. ஆப்பில் கார், ஆன்டிராய்ட் ஆட்டோ போன்ற வசதிகளுடன் ஸ்மார்ட் ப்ளே இன்ஃபேடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கீழே ஃப்ளாட்டாக உள்ள ஸ்டீயரிங் வீல், காருக்கு ப்ரீமியம் லுக்கை தருகிறது. ஆனால் ஸ்டீயரிங் பட்டன்கள் டிசையர் மற்றும் இக்னிஸ் மாடலில் வரும் அதே பட்டன்கள்தான். 
 
2-ஏர்பேக், ஏபிஎஸ், EBD மற்றும் குழந்தைகள் சீட்டுக்கான ISOFIX மவுண்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து வேரியண்டிலும் கிடைக்கிறது. 
 
 
புதிய ஸ்விஃப்ட் Lxi, Vxi, Vxi AGS, Zxi, Zxi AGS மற்றும் Zxi+ பெட்ரோல் வெரியண்டிலும் LDi, VDi, VDi AGS, ZDi, ZDi AGS மற்றும் ZDi+ டீசல் வேரியண்டிலும் மொத்தம் 12 வேரியண்டிலும், 6 நிறங்களிலும் வருகிறது. 11,000 ரூபாய்க்கு இந்த காரை அருகில் உள்ள மாருதி ஷோரூமில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதன் விலை 5 முதல் 8 லட்ச ரூபாயாக இருக்கலாம். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் முதல் முறை பார்வைக்கு வைக்கப்படுகிறது.
TAGS :   Maruti swift