அடுத்த மாதம் அமர்க்களமாக ஆரம்பமாகும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018
Posted Date : 12:07 (20/01/2018)
Last Updated : 20:00 (23/01/2018)

 

சொசைட்டி ஆஃப் ஆட்டோமொபைல் மேனுஃப்பேக்ச்சரர்ஸ் (SIAM), இந்திய ஆட்டோமோட்டிவ் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி, டெல்லியின் அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் மிக முக்கியமானதாகவும், உலகளவில் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் முதல் 7 இடங்களுக்குள்ளும் இருக்கும் இக்கண்காட்சி, வருகின்ற பிப்ரவரி 9 முதல் 14 வரை என, மொத்தம் 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 

 

 

நொய்டாவில் நடைபெறவிருக்கும் இந்த ஆட்டோ எக்ஸ்போவில், புதிய கார் - பைக் - வர்த்தக வாகனங்கள் -  ஆட்டோமொபைல் துறையின் புதிய தொழில்நுட்பங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்படுவதுடன், கார் நிறுவனங்கள் தங்களின் புதிய வரவுகளை இந்த இடத்தில் வெளியிடவும் செய்வார்கள். பஜாஜ் டொமினார், டிவிஎஸ் அப்பாச்சி RR310, ஜீப் காம்பஸ், டாடா நெக்ஸான் போன்றவை, முன்பு டெல்லியில் நடத்தப்பட்ட ஆட்டோ எக்ஸ்போக்களில்  அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க வாகனங்கள் ஆகும். குறைந்த விலையிலான கார் முதல் சொகுசு கார் - பைக் என அனைத்து வகை புதிய வாகனங்களும், இங்கு முதலில் அதிகாரப்பூர்வமாகப்  பார்வைக்கு வைக்கப்படும். 
 
இந்த வருடம் 24-க்கும் அதிகமான புதிய வாகனங்கள், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்போவதாகவும், கடந்த வருடத்தை விட அதிக வாகனங்கள் (100-க்கும் அதிகமான) இம்முறை காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும், SIAM குழுவின் துணை இயக்குநர் சுகதோ சென் கூறியுள்ளார். " இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை மட்டுமே, 2000 கோடி டாலர் அளவு ஏற்றுமதியில் பங்களிக்கிறது. மேலும் ஜிடிபி-யில் 7.1 சதவிகிதம் பங்களிப்பதால், உலகளவில் தற்போது ஆட்டோமொபைல் துறையில் 5-ம் இடத்தில் இருக்கும் இந்தியா, இன்னும் 5 வருடத்திற்குள் 3-ம் இடத்திற்கு வந்துவிடும் " என்று குறிப்பிட்டிருக்கிறார் சுகதோ சென். '' கூடிய விரைவில் அனைத்து ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும், விரைவில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துகொள்வார்கள். அதற்கு இந்த ஆண்டு சிறப்பான அடித்தளத்தை  அமைக்கும் ''  என இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறினார். 
 
 
 
 
நிஸான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், SIAM வர்த்தக கண்காட்சி குழுவின் தலைவருமான அருண் மல்ஹோத்ரா பேசியதாவது, " இந்தியா தற்போது மின்சார கார் மற்றும் பசுமை தொழில்நுட்பங்களை நோக்கி மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த கண்காட்சியில் ஆட்டோமொபைல் துறையில் எதிர்காலத்தில் வரவிருக்கும் தொழில்நுட்பத்தையும், புதிய கண்டுபிடிப்புகள், மின்சார வாகனங்கள், ஹைபிரிட்  வாகனங்கள் என அனைத்தையும் இங்கே காட்சிப்படுத்த உள்ளோம். எனவே புதிதாகத் தொழில் தொடங்கவிருப்பவர்களுக்கும், ஆட்டோமொபைல் துறையில் இருப்பவர்களுக்கும், இந்த கண்காட்சி மிகவும் உதவக்கூடியது "  எனக் கூறினார். 
 
பிப்ரவரி மாதம் 9-ம் தேதி ஆரம்பமாகும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பிசினஸ் ஹவர்ஸ் என்றும், மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்கான பார்வை நேரம் என்று கால அட்டவணை பிரிக்கப்பட்டுள்ளது. இதுவே வார இறுதி விடுமுறை நாள்களில், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்களுக்கான பார்வை நேரம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகப் பார்வை நேரத்தில் நபருக்கு 750 ரூபாய்;  பொதுமக்களுக்கான பார்வை நேரத்தில் நபருக்கு 350 ரூபாய்; வார இறுதி நாள்களில் நபருக்கு 475 ரூபாய்; டெல்லி ஆட்டோ  எக்ஸ்போவின் இறுதி நாளில் மட்டும் நபருக்கு 450 ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
 
 
 
கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ், இந்த வருடம் இந்தியாவிற்குள் ஆட்டோ எக்ஸ்போ மூலம் காலடி எடுத்துவைப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாருதி சுஸூகி, முன்பு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போக்களில் இருந்ததைவிட, இந்த முறை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மிகப்பெரிய அரங்கை புக் செய்திருப்பது, எதிர்பார்ப்புகளைத் தூண்டும் விஷயமாக உள்ளது. பைக் செக்மென்டில் கிலீவ்லேண்ட் சைக்கில்வொர்க்ஸ் எனும் அமெரிக்க நிறுவனம், இந்த வருடம் டெல்லி  ஆட்டோ எக்ஸ்போ மூலம், போட்டிமிகுர் இந்திய பைக் சந்தைக்குள் நுழைய உள்ளது. மேலும் முதன்முறையாக,  கவாஸாகி நிறுவனம், தனி அரங்கு அமைத்திருப்பது புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி, வின்டேஜ் கார் என்று பல சிறப்பு அரங்குகளும் இங்கு உருவாக்கப்படவுள்ளது.
 
 
 - ரஞ்சித் ரூஸோ.
 
 

 

TAGS :   Auto expo delhi, Auto expo noida