புதிய 2018 பஜாஜ் டிஸ்கவர் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்?
Posted Date : 12:20 (16/01/2018)
Last Updated : 16:45 (23/01/2018)

 

தனது மிட் ரேஞ்ச் பைக்கான டிஸ்கவரின் 2018 மாடல்களைக் களமிறக்கியுள்ளது பஜாஜ். முதன்முதலில் 2004-ம் ஆண்டில் டிஸ்கவர்‌ 125, 2005-ம் ஆண்டில் டிஸ்கவர் 110 பைக்குகளை பஜாஜ் அறிமுகப்படுத்தியது தெரிந்ததே. பிளாட்டினா போன்ற அதிக மைலேஜ் தரும் பைக்காகவும் இல்லாமல், பல்ஸர் போன்ற பர்ஃபாமென்ஸ் பைக்காகவும் இல்லாமல், இரண்டையும் மிதமான அளவில் தரக்கூடிய பைக்காக  இருப்பதால், மைலேஜ் பற்றி கவலைப் படாமல் ஓட்டுவதற்கு ஃபன்னான ஒரு தேர்வாக, இளைஞர்கள் மத்தியில் டிஸ்கவர் இருந்துவருகிறது. 


 
 
 
 
2018-ன் முதல் பைக்காக, டிஸ்கவர் 110 மற்றும் 125 ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது பஜாஜ். இதில் விலைகுறைவான டிஸ்கவர் 110, புதிய ஸ்டைலோடு மீண்டும் வெளிவந்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்டார்ட், டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகிய வசதிகளுடன், அலாய் வீல் - இன்ஜின் - சஸ்பென்ஷன் என்று பைக்கின் கீழ்ப்பகுதி அனைத்திற்கும் கறுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. பிளாட்டினாவைப் போலவே, மற்ற 110சிசி மற்றும் 125 சிசி பைக்குக்களை விட, டிஸ்கவரில் 16% அதிக சஸ்பென்ஷன் டிராவல் இருக்கும் என  உறுதியளித்திருக்கிறது பஜாஜ் நிறுவனம்.
 
பைக்கின் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெட்லைட்டின்  பக்கவாட்டில் LED DRL பொருத்தப்பட்டுள்ளது. தவிர பைக்கில் டூயல் டோன் சீட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் பைக்கின் கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்டிக்கர்களும் மாற்றப்பட்டுள்ளது. டிஸ்கவர் 110  பைக்கில், புதிய 115.5சிசி DTS-i இன்ஜின் உள்ளது. இது 8.4bhp@7000rpm பவரையும், 0.98kgm@5000rpm டார்க்கையும் தரவல்லது என்பதுடன், 4 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் இந்த இன்ஜின் கூட்டணி வைத்திருக்கிறது. 
 

 
 
 
டிஸ்கவர் 110 பைக்கில் உள்ள அனைத்து மாற்றங்களும், டிஸ்கவர் 125 பைக்கிலும் உள்ளன. டிஸ்கவர் 110 பைக்குடன் ஒப்பிடும்போது, இந்த பைக்கில் 124சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு மற்றும் முன்பக்க டிஸ்க் பிரேக்கைத் தவிர, வேறு எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கில் பொறுத்தப்பட்டுள்ள 124cc DTS-i இன்ஜின், அதிகபட்சமாக 10.8bhp பவரை 7500rpm-லும், 1.1kgm டார்க்கை 5500rpm-லும் தரவல்லது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வரும் டிஸ்கவர் 125சிசி பைக்கில், ஆப்ஷனலாக டிஸ்க் பிரேக்கும் வழங்கப்படுகிறது.
 
 
 
 

இந்த இரண்டு பைக்குகளுமே கறுப்பு, சிவப்பு, நீலம் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். டிஸ்கவர் 110 பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை, 58,373 ரூபாய். இதுவே டிஸ்கவர் 125 பைக் என்றால், அதன் சென்னை ஆன்ரோடு விலை 64,819 ரூபாய்.
 
 - ரஞ்சித் ரூஸோ.
 
 

 

TAGS :   BAJAJ DISCOVER, 110CC, 125CC, HERO SPLENDOR, HERO PASSION PRO, HONDA SHINE, HERO GLAMOUR, COMMUTER BIKE.